வெள்ளைச் சமாதானப் புறா | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளைச் சமாதானப் புறா

இலங்கையில் யுத்தகாலம் என்பது அனைவருக்கும் கொடூரமானதாகவே இருந்தது. யார் அவ்வேளையில் மக்களின் உயிரைக்காப்பாற்றுவார்கள், அவர்களின் துயர்களைத் துடைப்பார்கள் என்ற கேள்விகள் பலரிடமும் இருந்தது. அந்த இன்னலான வேளையில் மட்டக்களப்பில் ஒரு வெள்ளைக்காரத் துறவி தனது உயிரைக்கூடத்துச்சமாகக் கொண்டு மட்டக்களப்பு மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். கைதுகள் காணாமல்போதல்கள் இவரால் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் கைது செய்யப்படுபவர்கள் கடத்தப்படுபவர்களை வீரத்துடன் மீட்டுக் கொடுத்துக்கொண்டுமிருந்தார். அவர்தான் அமெரிக்க நாட்டு யேசு சபைத்துறவியான ஹரி மில்லர் என்று அழைக்கப்பட்ட அருட்பணி பெஞ்சமின் ஹென்றி மில்லர்.

இவ்வேளையில் தான் அனேகர் மறந்து போன அருட்தந்தை மில்லரைப் பற்றிப்பார்த்தாகவேண்டும். போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரது ஆட்சியின் போதும் அதனைத்தொடர்ந்த சுதந்திர இலங்கையிலும் கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதிலும் வளர்ப்பதிலும் மேற்கத்தேயத்துறவிகளின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில் இயேசுசபைத் துறவியர்கள் கணிசமான பங்களிப்பும் இருந்தது. இவர்களது மதம்சார் பணிகளை விடவும் கல்விப் பணியே முக்கியமானதாக இருந்ததுடன் அதற்காகவே மிகச் சிரத்தையுடன் பணியாற்றினார்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 11.08.1925ஆம் ஆண்டில் பிறந்தார் தமது பதினாறாவது வயதில் அமெரி-க்காவின் நியு ஓர்லியன்ஸ் மாநில இயேசு சபையில் இணைந்தார். இவர், இயற்பியல் பட்டதாரியான மில்லர் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த இயேசுசபைத் துறவிகள் ஐந்து பேரில் ஒருவராக மட்டக்களப்புக்கு வருகிறார். அன்றிலிருந்து 70 வருடங்கள் மட்டக்களப்பு மண்ணோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து இந்தப் புதுவருடத்தோடு பிரிந்துவிட்டார்.

ஒரு குருத்துவ, துறவற மாணவனாக மட்டக்களப்பிற்கு வந்த மில்லர் இலங்கையிலும், இந்தியாவிலும் கற்கைகளை நிறைவு செய்து 24.03.1954ல் ஓர் இயேசுசபைக் குருவாக நிருநிலைப்படுத்தப்பட்டார்.

இளம் குருவாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தனது பணியினை ஆரம்பித்த அடிகளார் கல்லூரியில் இயற்பியல், வரலாறு மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களின் போதனாசிரியராக செயற்பட்டார். கல்லூரியின் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அணியில் தமிழர், முஸ்லிம் பறங்கியர், சிங்களவர்கள் என அனைவரும் விளையாடினார்கள். புகழ்மிக்க புனித மிக்கேல் கல்லூரியின் முதல்வராக 1959 முதல் 1970 கள் வரையிலும் பணியாற்றினார்.

இவரே புனித மிக்கேல் கல்லூரியின் இறுதி இயேசுசபை அதிபரும், புனித மிக்கேல் கல்லூரி தனியார் பாடசாலையாக இயங்கியபோது பதவியிலிருந்த கடைசி அதிபருமாவார்.

1973ஆம் ஆண்டு புனித மிக்கேல் கல்லூரி அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது அதனைத் தாங்கமுடியாது கண்ணீர்விட்டு அழுதார் என்றும் பதிவுகள் இருக்கின்றன.

மட்டக்களப்பின் கல்விக்கு வித்திட்ட அருட்பணி ஹென்றி மில்லர் அடிகளார் புனித மிக்கேல் கல்லூரியின் நீங்காத சொத்தாவார். இன்று புனித மிக்கேல் கல்லூரியிலுள்ள நான்கு இல்லங்களுள் ஒன்றாகிய மில்லர் இல்லம் அவரது பெயரால் உள்ளது சிறப்பாகும். கல்விப்பணியுடன் இணைந்து இளையோரின் தொழில்நுட்பக் கல்விக்கு வித்திடும் வண்ணம் கிழக்கிலங்கை தொழில்நுட்ப (ஈ.ரி.ஐ.) நிறுவனத்தின் இயக்குனராகவும் சிறப்புப்பணியாற்றியிருக்கிறார்.

மறுபக்கத்தில் கல்விப்பணியுடன் இணைந்து ஆன்மீகப் பணியிலும் அருட்தந்தையவர்கள் தன்னை இணைத்துக் கொண்டார். தாழங்குடா பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி எழுவான் மற்றும் படுவான்கரையின் கிராமங்கள் எல்லாம் தனது மறைப்பணி மற்றும் அறப்பணியால் மக்களின் துயர்'துடைத்தார்.

கல்குடா இயேசுசபையினரின் தோட்டத்தில் நீண்ட நான்கு தசாப்த காலம் பொறுப்பாளராக கடமையாற்றி அப்பகுதி வாழ் ஏழை, எளியவரின் வாழ்விற்கு ஆதாரமானார். மட்டக்களப்பு மாவட்ட இயேசுசபையினரின் பிரிக்க முடியாத அங்கமாக நீண்டகாலம் பல்வேறுபட்ட பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாவட்ட மேலாளராகவும், நிதியாளராகவும், தற்போதைய மன்ரேசா தியான இல்லத்தினை சூறாவளியின் பற்பாடு வடிவமைப்பாளராகவும், அதனை உருவாக்குபவராகவும், இன்னும் பல்வேறு பணிகளூடாக தனது சேவையினை இயேசு சபைக்கு வழங்கினார்.

நாட்டில் யுத்தம் அதிகரித்த எண்பதுகளின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் சர்வமதத் தலைவர்களைக்கொண்டு சர்வ சமய அமைப்பினை உருவாக்கி சமய நல்லிணக்கத்தையும், இணைந்து செயற்படுகின்ற செயற்பாட்டிற்கும் முன்னுரிமை வழங்கினார். பின்னர் மக்களின் துயர் துடைப்பு பணியில் ஈடுபடுவதற்காக மட்டக்களப்பு சமாதானக் குழுவினை உருவாக்கினார். அன்றைய ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் ஆலோசனைக்கமைய அதன் ஆரம்பத் தலைவராகவும் செயற்பட்டார். அக்கால கட்டத்தில் போரினாலும், இராணுவ கெடுபிடிகளினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் துயர் துடைக்க துரிதமாக செயற்பட்ட வீரகாவியமே அருட்தந்தை மில்லர் அடிகளார்.

புனித மிக்கேல் கல்லூரியில் மேல் தளத்தில் வசித்த வந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் ஒரு இயற்கை விரும்பி என்பதுடன் ஆயுதக் கலாசாரத்துக்கும் எதிரானவர். கல்லூரியின் வளாகத்தினுள் ஆயுதம் தாங்கியவர்களை அனுமதிப்பதில்லை என்ற நிரந்தரமான முடிவுடனேயே அவர் செயற்பட்டுவந்தார். இலங்கைக்கு இந்திய இராணுவம் வருகை தந்தபோது கல்லூரியின் இருபக்கக் கோபுரங்களிலும் இந்திய இராணுவத்தின் காவலரணை அமைக்க முயற்சித்த வேளை கடுமையாக எதிர்த்து அதற்கு அனுமதி வழங்க முடியாதென்று அவர்களைத் திருப்பி அனுப்பியிருந்தார்.

சிவில் யுத்த காலத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்றவர்களின் விபரங்களை தானாகவே தேடி விபரங்களை திரட்டிக்கொண்டார். பாதுகாப்புப் படையினரின் முகாம்களுக்கும், அவ்வப்போது விடுதலைப் புலிகளின் முகாம்களுக்கும் சென்று மக்களின் நீதிக்காக குரல்கொடுத்தார். ஏனைய ஆயுதக்குழுக்களால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தவரின் விடுதலைக்காக குரல்கொடுத்தார். தனது பணி குறித்து அவர் குறிப்பிடுகையில் இயேசுசபையினரின் சார்பாக என்னால் செய்ய முடிந்தெல்லாம் யாதெனில், இங்குள்ள மக்களுக்கு என்னதேவை என்பதனை படம்பிடித்துக் காட்ட முடிந்தது என்கிறார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக குரல்கொடுத்துக்கொண்டே இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரிக் கழகம், புற்றுநோயாளர்கள் சங்கம் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டார். ரோட்டரிக் கழகம் அவருக்கு இலங்கைக்கான ஆளுனர் பதவியை வழங்கிய போது அதன் அலுவலகம் கொழும்பில் என்பதனால் அதனைத் தூக்கி எறிந்தவர்.

முக்கியமாக இலங்கையில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தினை கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க பிரதிநிதியாக 2002ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டு இறுதிவரை பணியாற்றினார்.

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்த 2009ஆம் ஆண்டில் தனது சொந்த நாடாகிய அமெரிக்காவிற்கு சென்ற மில்லர் அடிகளார் ஆறு மாதங்களில் எனது தேசம் அமெரிக்கா அல்ல மாறாக மட்டக்களப்பேயென நிரந்தமாகவே இங்கு திரும்பி வந்துவிட்டார்.

குருவானவராக, துறவியாக, பங்குத்தந்தையாக, கல்வியாளராக, கல்லூரியின் அதிபராக, விளையாட்டுப் பயிற்றுனராக, தொழில்நுட்ப நிறுவனத்்தின் இயக்குனராக, கட்டிடக் கலைஞராக, தோட்டத்தின் நிர்வாகியாக, நிதியாளராக, மேலாளராக, மக்களின் பாதுகாவலராக, மனித உரிமைகள் செயற்பாட்டாளராக, நீதியின் வேந்தராக, அப்பாவிகளின் கைது மற்றும் காணாமற்போனோரின் சாட்சியளராக பலபரிமாணப் பணியினை மேற்கொண்டுவந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் அடிகளாரின் மறைவு மட்டக்களப்பு மக்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.

மில்லருடைய பணிக்கான கெளரவிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்தால் கெளரவக் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அவருடைய 60 ஆண்டுகால சமாதானப் பணிக்காக 2014ஆம் ஆண்டில் இலங்கை சமாதானப் பேரவையால் சமாதானத்திற்கான பிரஜைகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

எப்போதுமே விளம்பரத்தை விரும்பாத மில்லர் தனக்கென தனியான பாதையை அமைத்து அதிலே பயணித்தார்.

அவரது உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும் அவரது பணிகள் எம்மத்தியில் என்றும் நீக்கமற நிலைத்து நிற்கும். மில்லரின் பணிகளைச் சொல்ல இக்கட்டுரை பொதாதென்றாலும் இலங்கையில் பிறக்கா விட்டாலும் சமாதானம், சகவாழ்வு மேலோங்கவும், கல்வியை மேம்படுத்தவும் அருந் தொண்டாற்றிய அருட்தந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Comments