கல்வித்துறை குறைபாடுகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை | தினகரன் வாரமஞ்சரி

கல்வித்துறை குறைபாடுகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை

ஷம்ஸ் பாஹிம்

ஏனைய மாகாணங்களுக்கு முன்மாதிரியாக மேல் மாகாணத்தை முன்னேற்ற பிரதான திட்டமொன்றை தயாரித்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து பல திட்டங்களைத் துரிதமாக செயற்படுத்தவிருப்பதாக கூறிய அவர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குறைபாட்டை தீர்க்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அஸாத் சாலி நேற்று முன்தினம் மேல் மாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமையன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஆளுநராக தான் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து தினகரனுக்கு கருத்துத் தெரிவித்த அவர், முஸ்லிம் சமூகத்தை கௌரவிக்கும் வகையில் என்னை ஆளுநராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரவிக்கிறேன். பாக்கிர் மாக்கார், அலவி மௌலானா ஆகியோரின் பின்னர் முதன்முறையாக மேல் மாகாண ஆளுநராக நான் நியமிக்கப் பட்டிருக்கிறேன். கிழக்கில் முதலாவது முஸ்லிம் ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆளுநர் என்ற வகையில் அவசரமாக கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க இருக்கிறேன். மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. தகுதியான அதிபர்கள் இல்லாத பிரச்சினையும் காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் இரு தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளே உள்ள போதும் அவற்றுக்கு தகுதியான அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. மூன்றரை வருடங்களுக்கு முன்னர் அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் இன்னும் நியமிக்கப்படாமல் இழுபறியில் காணப்படுகிறது.

மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதோடு அவற்றையும் தீர்க்க ஆவண செய்வேன்.

முன்பள்ளியில் இருந்து தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.

மாடுகள், நாய்கள் கூட மஞ்சள் கடவையால் வீதியை கடந்து செல்கையில் மனிதர்கள் கண்ட இடத்தில் எல்லாம் வீதியை கடந்து செல்கின்றனர். எந்த வீதி ஒழுக்கக் கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு வீதியைக் கடப்பவர்களுக்கு அதே இடத்தில் அபராதம் அறவிடும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

நான் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிட்ட போதே பாரிய திட்டமொன்றைத் தயாரித்திருந்தேன். அதே போன்று மேல் மாகாண முன்னேற்றத்திற்கு பாரிய திட்டமொன்றை வகுத்திருக்கிறேன்.

இன,மத. கட்சி பேதமின்றி சகலருக்கும் சேவையாற்றுவதே எனது நோக்கமாகும். இதற்காக சகலரது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வேன். எனக்கு வழங்கப்பட்ட இந்த உயர்ந்த பொறுப்பை உரிய வகையில் பக்கசார்பின்றி சிறப்பாக முன்னெடுக்க இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். (பா)

Comments