த.வி.கூ தலைமைப் பொறுப்பை விக்கினேஸ்வரன் ஏற்றால் இணைந்து பணியாற்ற தயார் | தினகரன் வாரமஞ்சரி

த.வி.கூ தலைமைப் பொறுப்பை விக்கினேஸ்வரன் ஏற்றால் இணைந்து பணியாற்ற தயார்

பரந்தன் குறூப் நிருபர்

சுயநலத்தை உதறித் தள்ளிவிட்டு ஒன்றுபட்டுச் செயற்பட வருமாறு அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி வினைந்து அழைக்கின்றது என கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினை கள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் எனத் தெரியவில்லை. சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சுயநலத்தை உதறித் தள்ளிவிட்டு ஒன்றுபட்டு செயற்பட வருமாறு அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளைத் தமிழர் விடுதலை கூட்டணி வினைந்து அழைக்கின்றது. கடந்த கால வரலாற்றை நம் தலைவர்களில் சிலரும், அவர்களின் சில தொண்டர்களும் உதாசீனம் செய்ததே இதற்குக் காரணமாகும்.

இன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது. அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டென்பதை சகல கட்சிகளின் தலைவர்களும் தம் தம் மனச்சாட்சியை தொட்டுக் கேட்க வேண்டும். ஆகவே, சி.வி.விக்னேஸ்வரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலை​மையை ஏற்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். இதே ஏற்பாட்டைத்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு எமது கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்தேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். எனவே, 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சிகள் ஒன்றாக சங்கமித்தமையேயன்றி, பங்காளிகளாக இருக்கவில்லை. இதேபோன்றதொரு நி​ைலமை ஆரம்பத்திலேயே உருவாகுமாக இருந்தால், தேர்தல் முடிந்ததும் அனைவரும் ஒரே கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை ஏற்று, புதிய நிர்வாகத்தையும் தெரிய வைத்து தந்தை செல்வாவின் கனவை நனவாக்குவோம். என்னைப் பொறுத்தவரையில், எமது பிரச்சினை தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைக்கின்றேன். என்று த.வி கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

 

Comments