நிவாரணம் வேண்டாம் நிரந்தர வீடுகளை தாருங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நிவாரணம் வேண்டாம் நிரந்தர வீடுகளை தாருங்கள்

ஹற்றன் கே.சுந்தரலிங்கம்

மார்கழி என்றாலே மலையகம் அதிகாலையில் களைகட்டுவது வழமையே. காரணம் ஒவ்வொரு அதிகாலையிலும் ஒவ்வொரு தோட்டத்திலும் பஜனைக்காக மக்கள் தம் வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வர்.

அதே போன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் பெண்கள் எழுந்து வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் திடீரென தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் கூரையில் புகை எழ வாசலைப் பெருக்கி கொண்டிருந்த பெண் கூச்சலிட்டனர். அந்தக் கூச்சலில் எல்லோரும் ஓடி வர, ஒரு சில நிமிடங்களில் அத்தனையும் தீக்கிரையாகின.

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் 29 ஆம் திகதி ஏற்பட்ட தீயினால் அந்தத் தொடர் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகின.

இந்தத் தீயினால் உடுதுணிகள், தங்க ஆபரணங்கள், தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் அத்தியாவசிய ஆவணங்கள், பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் ஒரு சில நொடிப்பொழுதில் இல்லாது போயின.

இந்தத் தீ விபத்தில் இங்கு வாழ்ந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 34 சிறுவர்கள், பெரியவர்கள்,48 ஆண்கள் 60 உட்பட மொத்தம் 108 பேர் நிர்க்கதியாயினர். பாதிக்கப்பட்டவர்கள் போடைஸ் தோட்டத்தில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் வீடு ஒன்றில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு ஒன்று, தவறி கட்டிலில் விழுந்து மெத்தை பற்றிக்கொண்டமையாயே என்கிறார்கள். இதனைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்கு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களும் படையெடுத்தனர். என்ன தேவை என்பதனைவிடத் தமக்கு கையில் கிடைத்ததை கொடுத்துதவ வந்தன. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்க தோட்ட நிர்வாகமும் அம்பகமுவ இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் முடிவு செய்து சமைத்த உணவு கடந்த 03 ஆம் திகதி வழங்கப்பட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து மலைநாட்டு பதிய கிராமங்கள் அமைச்சின் மூலம் தற்காலிக வீடுகளை அமைபப்தற்காக 400 கூரைத் தகரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. தியதலாவ இராணுவ முகாம் மற்றும் லக்ஸபான இராணுவ முகாம்களில் இருந்து இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு தோட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதில், தற்போது சுமார் பத்து சதுர அடி கொண்ட தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றாம் (03) திகதி முதல் அந்த வீடுகளில் குடியேறுமாறும் பணிக்கபட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான மின்சார வசதி மலசல கூட வசதி, குளிப்பதற்கு ஏற்ற வசதிகள் தற்காலிகமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு குடும்பங்களிலும் ஆறு ஏழு உறுப்பினர்கள் இருப்பதனால், இந்தச் சிறிய அறையில் தங்குவது கடினமான ஒன்றாகவே காணப்படுகிறது.

தனித்தனியே சமைப்பதற்கும் வசதிகள் இல்லாது இருக்கும் நிலையில், மூன்றாந்திகதி முதல் இவர்களுக்கு உலர் உணவு பொருட்களை மாத்திரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர். எது எவ்வாறான போதிலும், பாதிக்கப்பட்டவர்களில் கைக்குழந்தைகளும் வயது முதிந்தவர்களும் இருப்பதனால், கட்டாந் தரையில் கடும் குளிரில் நாட்களைக் கழிப்பது மிகவும் சிரமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

இஃது இவ்வாறிருக்க, தீப் பிடித்த அன்று முதல் ஒரு சில தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வருவதற்காகப்- பெயருக்கு அங்குச் சென்று பார்வையிட்டதுடன், ஆக்க பூர்வமான எதனையும் செய்ய முன்வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றர். அதே வேளை, அன்று மும்முரமாக முன்னெடுக்கப்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இழுபறி நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குக் காரணம், தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் காட்டும் இடங்களில் வீடுகளைக் கட்டுவதற்கு இடமளிக்காது மாற்று இடங்களைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தோட்ட நிர்வாகத்தினைப் பொறுத்த வரையில், தேயிலை அதிக பாதிப்பு இல்லாத வகையில், அதாவது பழைய தேயிலை உள்ள பகுதியில் அல்லது வெற்று இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என எண்ணுகின்றது.

ஆனால், தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், பரம்பரை பரம்பரையாக உழைத்த பூமியில் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏன் தோட்ட நிர்வாகம் யோசிக்க வேண்டும்? நாங்கள் காட்டும் இடத்தில் வீடுகளைக் கட்டி தரவேண்டும், என இரு பக்க இழுபறி நிலையில் காணிகளைத் தெரிவு செய்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

இதனால், வீடுகள் அமைக்கும் பணிகள் தாமதமடைவதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். இதே வேளை, இன்று தேயிலை பற்றி யோசிக்கும் தோட்ட நிர்வாகங்கள், தொழிலாளர்கள் வளர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கருப்பந்தையிலம் மரங்களைத் தறிக்கும் போது வீணாகும் தேயிலையினைப் பற்றி யோசிக்கவில்லையா என குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தினைக் கொண்டே எங்கள் வீடு வாசல்களைச் சீர் செய்துள்ளோம். தீ ஏற்படும் என எண்ணி நாங்கள் இதனை விருத்தி செய்யாதிருக்க முடியாது.

பெண்கள் இருக்கும் குடும்பத்தில் வீடு வாசல்களைப் பார்த்தே பெண்கள் தர சம்மதிக்கின்றனர். நாங்கள் வீடுவாசல்களை நல்ல முறையில் வைத்திருந்தால் தான் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. அத்தோடு எமது பிள்ளைகள் படிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இன்று நாங்கள் அஃது அத்தனையும் இழந்து நடு ரோட்டுக்கு வந்துள்ளோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும்பாலும் ஆறு ஏழு பேர் உள்ளனர். இதில் குமர் பிள்ளைகள் உட்பட கைக்குழந்கைள் எனப்பலரும் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி இந்த சிறிய அறையில் சீவிப்பது? பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் இல்லை. சீருடை இல்லை. இவ்வாறான நிலையில், எப்படி அவர்கள் படிப்பைத் தொடர்வது? எங்களுக்கென்று இருந்த அனைத்தையும் நாம் இழந்த விட்மோம். இவ்வாறான ஒரு நிலையில், நாங்கள் எப்படி எங்கள் வாழ்க்கையைத் தொடர்வது? இன்று நாங்கள் ஏனையவர்கள் கொடுத்த உடைகளைத் தான் உடுத்திக்கொண்டிருக்கிறோம். காலம் காலமாக எமது தலைவர்களுக்கு வாக்களித்துள்ளோம். பரம்பரை பரம்பரையாகத் தோட்டத்திற்கு உழைத்துக் கொடுத்துள்ளோம். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உரமூட்டியுள்ளோம். அவ்வாறான ஒரு நிலையில், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள போது வெறுமனே நிவாரணங்களை மாத்திரம் கொடுத்து விட்டு இருப்பதனால் எமது பிரச்சினை தீர்ப்போவதில்லை. எங்களுக்கு அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்து நாங்களும் இந்த நாட்டின் மனிதர்கள் என்ற வகையில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் அணிதரள வேண்டும். தொடர்ந்து மாதக்கணக்கில் நாங்கள் இவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும். இதில் எவ்வித பாதுகாப்பும் சுகாதாரமும் கிடையாது ஆகவே, தோட்ட நிரவாகமும் எமது தலைவர்களும் சிந்தித்து எமக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். எங்களுக்கு நிவாரணம் தருவதை விட நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுத்தால், நாங்கள் தையாவது செய்து எங்கள் பிழைப்பை ஏற்படுத்திக் கொள்வோம்" என இவர்கள் மேலும் தெரிவிக்கிற்னர். இதே வேளை, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 400 மேற்பட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புக்கள் தீ விபத்துக்கு இலக்காகி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள், இன்று தமது உடைமைகளை இழந்து தற்காலிக குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் நிவாரணங்களை மாத்திரம் தந்து விட்டு ஒதுங்கி விடுகின்றனர். இவற்றை தடுப்பதற்கு முறையான வேலை திட்டங்கள் அமைக்கப்படவில்லை. இன்று தனி வீடுகள் திட்டம் ஆரப்பிக்கபட்ட போதிலும் லட்சக்கணக்கான தனி வீடுகள் அமைக்க வேண்டியுள்ளதாக கணக்கீடு செய்துள்ளனர். ஆனால், ஓரிரு நாளில் அமைத்து விட முடியாது அதனால் தொடர் குடியிருப்புக்களை உடனடியாக நீக்கி விடவும் முடியாது. எனவே தொடர் குடியிருப்பு உள்ள தோட்டங்களில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் போது தடுப்பதற்கு பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஒரு சில நிமிடங்களில் தோட்டங்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகங்களும் அரசாங்கமும் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறித்த தீ விபத்தின் போது ஹற்றன் நகரசபையின் தீயணைக்கும் வாகனம் செல்லும் போது அனைத்தும் முடிந்து விட்டிருந்தது. மக்கள் அதிகாரிகளையே குற்றம் சுமத்தினார். ஆனால், அந்த தீயணைப்பு வாகனத்தை முகாமைத்துவப்படுத்துவதற்கு நிரந்த இடம் கிடையாது. நிரந்த பயிற்சி பெற்றவர்கள் கிடையாது, தண்ணீர் நிரப்பி வைப்பதற்கு பவுசர் கிடையாது. அதற்கென்று சாரதிகள் மற்றும் படைப் பிரிவு கிடையாது அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் அளவுக்கு நகரசபைகளுக்கு வருமானமும் கிடையாது. இந்நிலையிலேயே இந்தத் தீயணைப்பிரிவு இயங்கி வருகின்றது.

எனவே, ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும் என நகரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஆகவே ஒவ்வொரு தீ விபத்தின் போதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.இதனால் நிவாரணம் மற்றும் நஷ்டஈடு எனப் பல கோடி ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளன.

எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைக்க வேண்டிய மனித வளம் இல்லாது போகின்றது. எனவே, அரசாங்கம் குறிப்பிட்ட தோட்டங்களை ஒன்றிணைத்து ஒரு வலயமாக பிரகடனம் செய்து அதற்கு ஏற்றவகையில் தீயணைப்புப் படை பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம் தீ விபத்துக்களில் வீணாகும் சொத்துக்களையும் மனித உயிர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், இவ்வாறான தொடர் அழிவுகள் தடுக்க முடியாத தொடர்கதையாக மாறிவிடும் என்பதே நிலையான உண்மையாகும்

Comments