நெற் செய்கை பாதித்திருந்தால் ஏக்கருக்கு ரூ. 40,000 கொடுப்பனவு | தினகரன் வாரமஞ்சரி

நெற் செய்கை பாதித்திருந்தால் ஏக்கருக்கு ரூ. 40,000 கொடுப்பனவு

பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி, முரசுமோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று அழிவடைந்த நெற்பயிர்களை அமைச்சர் பி. ஹரிசன் அதிகாரிகளுடன் பார்வையிட்டபோது... (படம்: பரந்தன் குறூப் நிருபர்)

கிளிநொச்சி குறூப் நிருபர்

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் நெற்செய்கை முழுமையாக அழிவடைந்திருப்பின் ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் காப்புறுதி சபையால் வழங்கப்படும் அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் என விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ. ஹரிசன் நேற்று தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவது அனைவரதும் கடமை என்றும் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

விவசாயம், கிராமப்புற பொரு ளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ. ஹரிசன் நேற்று (05) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர் பீ.ஹரிசன், அமைச்சின் செயலாளர், மற்றும் கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கமநல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் சகிதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற நிலைமைகளை ஆராயும் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இதன் போது வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடைகள், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள், அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் ஏக்கருக்கு 40,000 ரூபா காப்புறுதி சபையால் வழங்கப்படும். அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர்,

வெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு. எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்தோடு இரண்டு வார காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக அவர்களுக்கு அந்த அழிவுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக, வெள்ளம் எற்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களையும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களையும் வைத்து இந்த நட்டஈடுகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களை அமைச்சின் கீழான அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுவார்கள், அதன்படி கட்டம் கட்டமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் வெள்ளத்தினால் அழிவடைந்த நெல் வயல்களைப் பார்வையிடுவதற்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிளிநொச்சி பன்னங்கண்டி மற்றும் முரசுமோட்டை பிரதேசங்களுக்கும் சென்றிருந்தனர்.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளம்;

43,048 ஏக்கர்

பயிர்ச் செய்கை அழிவு

குளங்கள் புனரமைப்பு

ரூ. 31 மில் தேவை

வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43,048 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளதாக கிராமிய பொருளாதார விவசாய மற்றும் கால்நடை கமத்தொழில் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பார்வையிட்டனர்.

வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் 43,048 ஏக்கர் பயிர்செய்கைகள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதுடன் 1,500 ஏக்கர் கடலை, 10 ஹெக்டயர் சோளப்பயுர்ச் செய்கையும் அழிவடைந்துள்ளன.

இது தொடர்பான மதிப்பீடுகள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளமுடியுமென அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2018ஆம் ஆண்டிலே புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள 10 வரையான குளங்களின் புனரமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 31 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழு வரையான குளங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments