புனித திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி

புனித திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம்

புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப் போன்று உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

புனித தேரவாத பௌத்த தர்மத்தின் மகத்துவத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பேணி பாதுகாக்கும் வண்ணம் புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு சங்கைக்குரிய மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் தலைமையில் நேற்று (05) மாத்தளை, வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களும், எதிர்கால தலைமுறையினரும் மிகச் சரியாக பாதுகாத்து பேணும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்காக ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட பணிக்கு மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

விசேட உரையாற்றிய சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அநுநாயக்க தேரர் வண. நியங்கொட விஜித்த சிறி தேரர், பௌத்த சாசனத்திற்கும் சம்பிரதாயங்களின் முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதியினால் ஆற்றப்பட்ட இந்தப்பணி பாராட்டுக்குரியதெனத் தெரிவித்தார்.

பௌத்த போதனைகள் தவறாக போதிக்கப்படும் இந்த காலகட்டத்தில் அரச தலைவர் என்ற வகையில் இவ் விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தி மேற்கொண்ட இந்த பணி அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு என இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்தார்.

இந் நிகழ்வைப் போன்றே 1818ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது தேசத் துரோகிகள் என அறிவிக்கப்பட்ட எமது தேசிய வீரர்களின் பெயர் பட்டியலை தேசத்தின் வீரர்கள் என்று அறிவிப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் மகா சங்கத்தினரின் பாராட்டைப் பெற்றுள்ளதாக தேரர் குறிப்பிட்டார்

நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் ஊடாக திரிபீடகத்தை தவறான முறையில் விவரிப்பவர்களிடமிருந்து அதனைப் பாதுகாப்பதுடன், திரிபீடகத்திற்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கக்கூடியதாகவும் இருக்குமென்று தெரிவித்தார்.

இன்று முதல் அரசாங்கத்தின் அனுமதியின்றி திரிபீடகத்தை திருத்துவதற்கோ, மொழிபெயர்ப்பதற்கோ அனுமதி வழங்கப்படாதென்றும் எதிர்வரும் காலங்களில் திரிபீடகத்தை மொழி பெயர்ப்பதற்கோ திருத்தங்கள் செய்வதற்கோ குறிப்பிட்ட வல்லுனர்கள் குழுவிற்கே அனுமதி வழங்கப்படுமென்றும், திரிபீடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வண்ணமே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

திரிபீடகத்தின் ஊடாக புத்த பெருமானின் போதனைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு பாரிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மகாசங்கத்தினரின் வழிகாட்டலின் கீழ் தனது ஆட்சி காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

மாத்தளை வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் உத்தியோகபூர்வ பிரகடனத்தை ஜனாதிபதி மகா நாயக்க தேரர்களிடம் கையளித்தார்.

ஆலோக்க விகாராதிபதி வண. கலாநிதி இனாமலுவே நந்தரத்தன தேரரால் விசேட நினைவுச் சின்னமாக “தம்ம சக்க தம்ம” உச்சாடனம் அடங்கிய ஓலைச் சுவடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஆக்கபூர்வமான அறிக்கை தொகுப்பு ஒன்றும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டதுடன், அம்முத்திரை ஜனாதிபதியால் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.

சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்க தேரர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்க தேரர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் வருகைதந்த 1,500 க்கும் மேற்பட்ட மகாசங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான அடியார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments