தொல்லியல் எச்சங்களாக மாறிவரும் வன்னி வழிபாட்டு தலங்கள் | தினகரன் வாரமஞ்சரி

தொல்லியல் எச்சங்களாக மாறிவரும் வன்னி வழிபாட்டு தலங்கள்

ஜது பாஸ்கரன்

முல்லைத்தீவு மற்றும் வவுனியா எல்லையோரக் கிராமங்களில் பல்வேறு வகையில் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதுடன், தங்களுடைய வாழ்வாதாரம் முதல் வழிபடும் உரிமை வரை பறிக்கப்படுவதாக அப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கருது கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்கள் தேசிய வனங்களாகவும் கரையோரப்பாதுகாப்புப் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்படுவதோடு மேலும் பல இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்படுகிறது.

இதனால் தொன்று தொட்டு பாரம்பரிய வழிபாட்டு தலங்களாக இருந்து வந்திருக்கும் வந்த தமது பூர்வீகமான வழிபாட்டு இடங்களுக்குச் சென்று வழிபட முடியாதுள்ளது என்று பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரத்தில் இருக்கின்ற வெடுக்கு நாறி மலை, குருந்தூர் மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பன நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயங்கள். தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் குருந்தூர் மலை ஐயனார் ஆலயம் வெடுக்குநாறி மலை, ஆதிசிவன் ஆலயம், ஆகியவற்றுக்கு நீண்ட காலமாகவே சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இன்று இவை தொல்பொருள் திணைக்களத்தினால் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தங்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றான வழிபடும் உரிமை தடுக்கப்படுவதாகவும் மேற்படி ஆலயங்களின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட மக்கள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான மழையைப் பெற்றுக்கொள்வதற்கு வேள்விகளையும் யாகங்களையும் வழிபாடுகளையும் ஆற்றிவருகின்ற ஆலயங்களாக இவை காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டங்களில் தொன்று தொட்டு சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டு வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலயம், மாந்தை கிழக்கு பனங்காமம் ஆதிசிவன் கோவில் சிவபுரம் சிவாலயம், மூன்று முறிப்பு கண்ணகையம்மன் கோவில் போன்ற ஆலயங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த ஆலயங்களை அண்மித்த பகுதிகளில் அரசர்கள் ஆட்சிசெய்த அரண் மனைகளின் சிதைவுகள் செங்கற் சிதைவுகள் என்பவற்றுடன், சோழர் கால கட்டட கலையையொத்த கட்டட இடிபாடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு பண்டைய இடிபாடுகளும் சிதைவுகளும் காணப்படுகின்ற இடங்கள் தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் 16ம் பிரிவின் கீழ் புராதன சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, கடந்த 2013ம் ஆண்டு ஆவணி மாதம் 16ம்திகதி, வெளியிடப்பட்டது.

அக்காலப் பகுதியில் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த ஜெகத்பாலசூரியவின் உத்தரவிற்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியில் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கின்ற இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஆலங்குளம் புராதன தூபியும் கட்டடச் சிதைவுகளும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அம்பகாமம், இரணைமடு வட்டக்காலிக் குளத்திற்கு கிழக்காகவுள்ள சிதைவுகள் மண்மேடுகள், முத்து ஐயன்கட்டுக் குளத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சிதைவடைந்த கட்டடங்கள் – மதில் என்பனவும், கற்சிதைமடுக் கிராமத்தின் பேராறு கட்ட டச் சிதைவுகளும் கற்தூண்களும், கொட்டியமலைக் கிராமத்தில் உள்ள கொடிக்கற்சி கொட்டியாமலை என்ற இடத்தில் உள்ள நீர் வடி வெட்டப்பட்ட கோபுர மேடும் கட்டடத் சிதைவுகளும், பண்டாரவன்னியன் கிராமத்தில் அமைந்துள்ள புதையல் பிட்டி, கனகரத்தினபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தொல்லியல் சிதைவு, பேராறு பழமையான அணைக்கட்டு மன்னாகண்டால் புராதன கட்டடச் சிதைவு, ஒதிய மலைக் குகைத் தொகுதி என்பனவும் ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலயப்பகுதியில் உள்ள தொல்லியல்சிதைவுகள் கரைந்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் செம்மலை கிழக்கில் உள்ள தாதுகோப மேடுகளும் தொல்லியல் சிதைவுகளும், குமுழமுனை தண்ணிமுறிப்புக் குளத்தில் காணப்படுகின்ற கோபுர மேடுகளும் சிதைவுகளும் குமாரபுரத்தில் உள்ள சிறிசித்திர வேலாயுத முருகன் ஆலயத்தின் தொல்லியல் சிதைவுகளும், குமுழமுனை பிள்ளையார் கோவிலை அண்மித்த சிதைவுகளும் ஆண்டாங்குளத்தில் உள்ள கோபுரமேடுகளும் கட்டடச் சிதைவுகளும் கொக்கிளாய் வண்ணாத்திக்குள தொல்லியல் சிதைவுகளும் முல்லைத்தீவு பொதுச்சந்தை வளாகம், இதேபோன்று மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் வவுனிக்குளம் சிறிமலை கோவிலும் சிதைவுகளும், கீரிசுட்டான் பறங்கியாற்று கோபுரங்களும் சிதைவுகளும், சிறாட்டிகுளம் வெட்டுநீராவி தாதுகோபுர மேடுகளும், மூன்று முறிப்பு கொம்பு அச்சுக்குளம் கிராமத்தில் உள்ள கட்டடச்சிதைவுகளும், வன்னி விளாங்குளம் பெரியகுளம் கட்டடச்சிதைவுகளும், செங்கல் மதில் சிதைவுகளும், பூவரசன்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் கல்வெட்டும் சிதைவுகளும், பாண்டியன் குளம் சிவன்கோவில் கட்டடச் சிதைவுகளும், விநாயபுரம் கோபுர மேடும், நட்டாங்கண்டல் கட்டடச் சிதைவும், துணுக்காய் வன்னாரிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த வெல்லியாவில்லு, சிதைவுகளும், இவ்வாறு பல்வேறுபட்ட இடங்கள் வர்த்தமானி தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் கூடுதலான இடங்கள் பொதுமக்களால் பூர்வீகமாக வழிபட்டு வந்த வழிபாட்டிடங்களாக காணப்படுகின்றன.

பூர்வீகமாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்த இந்த இடங்கள் தொல்பொருள் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் காலப்போக்கில் தங்களுடைய வழிபாட்டுரிமை தடுக்கப்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களில் முல்லைத்தீவு எல்லையோரத்திலும் வவுனியா வடக்கு ஒலுமடுக் கிராமத்தில் இருக்கின்ற வெடுக்குநாறி மலை சிவன்கோவிலை தொல்லியல் திணைக்களம் ஆதிக்கம் செலுத்தியமை, அதேபோல குருந்தூர் மலையிலும் குருந்தூர் மலைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு என்பன எதிர்காலத்திலும் மேற்கண்ட இடங்களிலும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுமோ என்ற சந்தேகத்தை இம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் அவன் தன்மதம் சார்ந்து வழிபடுகின்ற உரிமையையும் உள்ளடக்குகிறது. இந்த வழிபாட்டு உரிமைக்காக நீதிமன்றங்களை நாடி நீதிகேட்க வேண்டிய ஒரு நிலை கடந்த காலங்களில் துரதிர்ஷ்ட வசமாக ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எங்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென பலரும் கோரியுள்ளனர்.

Comments