கொழுகொம்பும் ஊன்றுகோலும் | தினகரன் வாரமஞ்சரி

கொழுகொம்பும் ஊன்றுகோலும்

“ஒரு கம்புக்குச்சியென்றாலும் பரவாயில்ல பேருக்கென்றாலும் புருஷன் இருக்கணும்” இது சடுதியாய் என் காதில் விழுந்த வார்த்தைகள். அவை நின்று என்னை நிதானிக்க வைத்தன.

அவளது கணவன் இறந்து மாதங்கள் சில கடந்திருந்தன. சொந்தக்காரிதான். என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.

அறுபதை அண்டிய வயதுடையவள். படித்தவள். உலகமறிந்தவள். ஒரு மாபெரும் இழப்பைத் தாங்கமாட்டாது பேசினாள். கண்கள் பனித்துச் சில வினாடிகளில் கொட்டித்தீர்த்தன.

ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள். நகமும் சதையும் என்றில்லா விட்டாலும் பொதுவாக எல்லாரும்போல் இணைந்து வாழ்ந்தார்கள். விட்டுக்குவீடு வாசற்படி என்பதுபோல பிணக்கு. கோபதாபம் ஊடல் கூடல் எல்லாமே எல்லாருக்கும் போல்தான்.

பிறந்த பிரதேசங்கள் வேறுவேறு என்றாலும் படித்தவர்கள் என்பதால் புரிந்துணர்வு அவர்களைப் பிணைத்திருந்தது.

கணவன் தனது பின்னிட்ட காலத்தில் ஆத்மீகத்தில் அதிகம் தன்னை அடிப்படுத்திக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் நாகரீகத்தில் ஓரளவு ஒன்றியிருந்த மனைவி காலங்கழியக்கழிய கணவன்வழி தன்னையும் மாற்றிக்கொண்டாள்.

ஒற்றைக் குழந்தை பேரன், பேத்திகள். பெற்றபிள்ளை போல் பாசங்காட்டும் மருமகன். சொந்தக்காலில் நிற்கும் பொருள் வளமுமிருந்தது. எல்லாமே நிறைவாய் இருந்தும் ஏனோ கணவனின் பிரிவு அவளது ஆழ்மனத்தை அவ்வப்போது கிளறிக்குதறும். அன்றும் அதுதான் நடந்தது.

அவளுக்கு உடன் உறவுகள் அதிகம் இருந்தனர். விதிவசத்தால் பலர் அக்காலத்திலேயே வாழ்வுக்கு விடைதந்திருந்தனர். இப்போது மிக அருகில் இருக்கும் ஒரே இரத்த உறவு என் மனைவிதான்.

முன்னர் போலல்லாது இப்போது அடிக்கடி தொலைபேசியில் பேசுவாள். பல நிமிடங்கள் தொலைபேசி துண்டிக்கப்படமாட்டா. காதலிக்குங் காலத்தில் காரணமில்லாமல் எதையெதையோ கதைக்குங் காதலர்கள்போல இருவரும் காதைக்குடைவர். நான் செவிகொள்ளாத தொலைக்கு என்னை நகர்த்திக்கொள்வேன்.

சிலபோது அழைப்பு மணிக்கு நான் செவிகொடுத்தால் குரலைப் புரிந்துகொண்டு தகவல் தருவேன். அப்போது புரியும் இனி குறைந்தது அரைமணியாவது பழைய கரிக்கோச்சியின் நெடும் பயணம்தான் என்று.

என் மனைவியொன்றும் சளைத்தவரல்ல. சிறுபராயந் தொட்டு இன்றுவரையுள்ள அத்தனை விடயங்களையும். மீட்டுருச் செய்வார். கீறுண்ட ஒலித்தட்டுபோல ஒன்றே பலமுறை மீண்டும் மீண்டும். அலுப்பேயில்லாமல்.

அன்று அவள் சொல்லிவிட்டு வந்திருந்தாள். கண்டதும் என் மனைவி கட்டிக்கொண்டாள். உறவின் அன்னியோன்னியம் அணைப்பில் புரிந்தது.

அவள் கணவன் நல்ல சுபாவங் கொண்டவர். யாருடைய அல்லுத்தொல்லுக்கும் போகமாட்டார். தானுண்டு தன்பாடுண்டு என்றிருப்பவர். இயன்றால் யாரென்று பாராமல் உதவும் பரோபகாரி.

எந்தவித பாரதூரமான நோயினாலும் அவர் பீடித்திருந்ததாக நானறிந்திருக்கவில்லை. செய்தவப்பயனோ தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் சில மணித்துளியில்; ஏற்பட்ட உடல் உபாதையால் கண்களை மூடிக்கொண்டார். ஊரே வருந்தியது. அவரது நல்ல செயற்பாடுகளைச் சொல்லிச்சொல்லி குடும்பமே அழுதது.

இறைவன் மனிதருக்குக் கொடுத்த அருட்கொடைகளில் ஒன்று மறதி. அது இல்லையென்றால் பிரிவுத்துயர்களை எண்ணியெண்ணியே மக்கள் உயிர்போக்கிக்கொள்வார்கள். அதற்கிணங்க விதிவிலக்கற்று சில நாட்களில் அவரது இழப்பு கனவாகிப்போயிற்று.

***

பகலுணவுக்கான நேரம் வந்தது. உணவும் பரிமாறப்பட்டது. நீண்ட நாட்களின் பின் வந்த உறவுக்காரிக்காக சற்றுத் தூக்கலாகவே எல்லாம் தயாரிக்கப்பட்டிருந்தன.

மனைவி விருந்தாளியை அழைத்ததும் அவள் சற்றுச் சங்கோஜப்பட்டாள். நானும் அழைத்ததால் என்னுடன் அவர்களும் சேர்ந்துகொண்டனர். அப்போதும் அவளது முகம் கவலை தோய்ந்தே இருந்தது.

உணவு மேசையில் இருந்தபோதும் முன்னர் பாடிய பல்லவி முடிந்து சரணம் தொடர்ந்தது. கடந்த காலங்களில் நான் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்துவிட்டேன். என் உடன்பிறப்புகளை அவர்களின் பிள்ளைகளை என் கணவனின் சொந்தங்களை எனப் பற்பல இழப்புகளை.

அவையனைத்துமே என்னைச் சோகத்தில் ஆழ்த்தினாலும், நாட்கள் செல்லச்செல்ல என் நினைவில் நின்றும் அழிந்துபோயின. ஆனால் என் கணவனின் இழப்பை என்னால் சற்றும் மறக்க இயலவில்லையே என்றாள்.

ஒரு காலத்தில் கொழும்பில் எங்களுக்குப் பொருத்தமான வீடு கிடைக்காத போது அவர்கள் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை சில நாட்கள் எங்களுக்காக ஒதுக்கித் தந்திருந்த நன்றி வாய்ப்பாக என்னுள் அப்போது முளையிட்டதும் அவளுடைய மனநிலையை மாற்ற நானதனை நினைவூட்டினேன். எண்ணப்படி பேச்சுத் திசை திரும்பியது.

உறவோடு கூடியுண்டதால் பகலுணவு என் மனைவிக்கு தேவாமிர்தமானது. ஆளுக்குஆள் உபசரித்து உண்டனர். நானும் அவர்களுடன் உணவைப் பரிமாறிக்கொண்டு கடந்தகால நல்லவைகளை நினைவூட்டிக் கொண்டேன்.

பகல் தேநீர் பருகிய பின்னரும் பெண்கள் பழையவை மீட்டுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அழுகையும் சிரிப்பும் மாறிமாறி நிகழ்ந்தன. மாலை மயங்கியதும் அவள் புறப்பட்டாள். பெரியதொரு மனச்சுமையை தற்காலிகமாக இழந்தவளாய்.

***

காலை பத்து மணியிருக்கும். எனது இளமைக்கால நண்பன். உறவினனுங் கூட. வீடு தேடி வந்தான். வயதொத்தவன். மிகவும் களைத்திருந்தான். நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு வருடத்தின் முன்தான் நான் ஊரில் அவனைச் சந்தித்தேன். வயதுக்கேற்ற மாற்றங்கள் இருந்தாலும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தான்.

இன்று என்னை ஆச்சரியங் கொள்ளத்தக்க வகையில் அவன் தோற்றமிருந்தது. வலிந்து ஒரு புன்னகையை அவன் வரவழைத்துக் கொண்டபோது பார்க்கக் கவலையாக இருந்தது.

எப்போது ஊரிலிருந்து வந்தாய் என்றேன். நான்கு நாட்களாகின்றது. மருமகள் வீட்டில் தங்கியிருந்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்படியிருக்கின்றாய் என்றான்.

இப்போது வயதான பெரும்பாலார்போல் நானும் மருந்துப் பெட்டியுடன் சங்கமித்திருந்தாலும் தோற்றத்தில் செயற்கையின் ஆதிக்கம் என்னை அவனிலும் இளமையாய்க் காட்டியது.

அத்தோடு அவ்வப்போது தேவைக்கேற்றபடி உடலில் வெட்டுக்குத்துக்களும் புதிய செயற்கைப் பாகங்களும் காலத்தின் நீழ்ச்சிக்கு உதவின. நண்பனுக்கு நன்றாக இருக்கின்றேன் என்று பதிலிறுக்கவும் பலமாகின.

நண்பன் பெருங்குடும்பக்காரன். பக்கபலத்திற்கு ஆட்களும் பிற அனைத்தும் இருந்தன. இருந்தும் திடீரென அவன் ஒடிந்துபோயிருந்தான். அதுவே அவனைக் கண்டதும் என்னை அதிசயிக்க வைத்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்தான் அவனது மனைவி இறந்து போயிருந்தாள். பெரிதாக நோயொன்றும் இல்லைத்தான். கால முடிவு மரணத்திற்குக் காலாகியிருக்க வேண்டும்.

எப்படி இருக்கின்றாய் என்றேன். வழக்கமான குசல விசாரிப்பில். அவன் அலுத்துக்கொண்டான். ஏதோ உயிர் இருப்பதால் உடலைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன் என்றான்.

மனைவியின் மரணத்தின்பின் மக்கள் மருமக்கள் அனைவரும் முன்பிலும் தன்னை நன்றாகக் கவனிப்பதாகவும் தனக்கு உபசரிப்பில் எந்தக் குறைபாடும் இல்லையென்றும் சொன்ன அவன், தொடர்ந்து நீண்தொரு பெருமூச்சுவிட்டான். பின்னர் தொடர்ந்து பேசினான். நான் பொறுமையாக அவனைச் செவிமடுத்தேன்.

யாரையும் குறைசொல்லக் கூடாது. காலைத் தேநீரிலிருந்து இரவு படுக்கைக்ககுப் போகும்வரை என் மனைவி செய்தது போல ஏன் நான் குறைப்பட்டுவிடக் கூடாதே என்பற்காக அதற்கும் மேலாகவும் எல்லாம் நடக்கின்றது. ஆனால் ஏனோ என்மனம் எதிலும் திருப்தியடைய மறுக்கிறது.

அவர்கள் மனநிறைவுடன்தான் செய்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தாலும் அடிமனத்தில் எல்லாம் கடமைக்குச் செய்வது போன்ற மாயயைத் தருகிறது.

அவள் இருக்கும்போது தந்த ஒவ்வொரு கோப்பைத் தேநீரைப் பருகும்போதிலும் இருந்த மனநிறைவை என்னால் இப்போது உணரமுடியாதிருக்கிறதே என உளம்நெகிழ்ந்தான்.

இப்போது அவனது இன்றைய நிலைக்கான காரணத்தை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னில் பாதியாக வாழ்ந்திருந்து தனது சுகதுக்கங்களில் பங்கேற்று வாழ்ந்தவள்.

மனித உணர்வுத் தேவைகளில் தனக்குத் துணையாகவும் போஷித்துப் பராமரிப்பதில் தாயாகவும். சோர்ந்து போகும்போது தோள் தாங்குந் தூணாகவும் இருந்தவள்.

எந்தவித பிரதியுபகாரமும் நோக்காது அவனின் கோபதாபங்களைத் தாங்கி இட்டபணியை இசைவோடு செய்தவள்.

குடும்பச்சுமையை முற்றிலும் தாங்கி நல்மக்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி தனித்தனி அவர்களுக்குப் பொருத்தமான சோடிகளைத் தேர்ந்து வாழக் கடமை செய்தவள்.

மொத்தமாய் தனது வாழ்வில் எல்லாமே என்றிருந்தவள் இப்போது இல்லையே என எண்ணும்போது அவனால் அந்த இழப்பை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்.

அன்று முழுநாளும் நானவனை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். அவனது மனச்சுமையைச் சற்றேனுங் குறைக்க என் மனம் அங்கலாய்த்தது.

***

தொலைபேசி உரையாடலைத் தொடர இயலவில்லை. மறுபுறத்தில் அழுகையொலி என்னைத் திணறச்செய்தது. படித்தவர். வயதானவர். உயர்தொழில் பலவற்றின் அதிகாரியாகக் கடமை செய்தவர். ஓய்வுபெற்றும் வருடங்கள் சில கழிந்திருந்தன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது மனைவி அவரைத் தனிக்க விட்டு வாழ்ந்த காலத்திற்கு விடைகொண்டிருந்தார். நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். குழந்தை குட்டிகள் இருந்தனர். பொருளாரத்திற்குக் குறைவில்லை.

எது எவ்வாறாயினும் கணவனின் கண்காணிப்புக்கு நிகராய் எவரது பங்களிப்பும் ஈடுகொடுக்கவில்லை.

குழந்தையாய் எண்ணி விரைவில் குணமடைய வேண்டுமெனும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையோடும் அவர் தாய்போல் மனைவியை அரவணைத்தார்.

எத்தனைதான் மனிதன் முயன்றாலும் முடிவு இறைவன் கரத்தில்தான் என்பது உறுதியானதுபோது எல்லோரும்போல் அவர் முடிவும் ஆனது. அவரோடு நெருக்கமான நட்பிருந்தும் திடீரென்று ஏற்பட்ட தொலைதூரப்பயணம் எனது உடலுக்குப் பொருந்தாததால் இறுதிக் கிரிகையில் என்னால் பங்குகொள்ள முடியாது போயிற்று.

உடனடியாக அவருடன் தொடர்புகொண்டு எனது அனுதாபத்தைத் தெரிவித்திருக்கலாம். நான் செய்யவில்லை. காரணம் சூட்டோடு சூடாகப் பேசி அவர் சோகத்திற்கு நெய்யிட நான் விரும்பவில்லை. இருப்பினும் அது இப்போது நடந்தது.

நண்பர் மனைவிமீது அளவுகடந்த பாசங்கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அண்மைக் காலங்களில் அவ்வப்போது அவரைச் சந்திக்கும்போது. மனம்விட்டுப் பேசுவார். பெரும்பாலும் அது அவரது மனைவியைப் பற்றியதாகவே இருக்கும். அவர்களின் தாம்பத்திய உறவின் நெருக்கத்தை நான் அறிந்திருந்ததால உடன்; பேசுவதைத் தவிர்த்தேன்.

காலங்கடந்த என் அழைப்புக்கு அவர் செவிகொண்டபோது. அவரின் வார்த்தை இயல்பாகவே இருந்தது. என்குரலை அவர் இனங்கண்டு கொண்டதும்தான். தனது மனக்குமுறல் என்னிடம் வெடித்துச் சிதறியது.

“என்னைத் தனிக்கவிட்டுப் போயிட்டாளே” எனச் சொன்ன வார்த்தைகளோடு பேச்சை அவரால் தொடர முடியவில்லை. அவரது அழுகையடங்க நீண்ட நேரமானது. அது அடங்கும்வரை நான் என்செவியை வாங்காதிருந்தேன்.

***

“சொர்க்கம் அவளுக்குச் சொந்தம்” என்றது மனம். ஒன்றி வாழ்ந்த தம்பதிகளில் ஒருவருக்கு ஒன்றென்றால் மற்றவர் தாங்குவது இயல்பே. அது நாட்களாக வாரங்களாக இருப்பின் பொறுமையோடு தாங்கிக்கொள்ளலாம். அதுவே வருடங்களானால்.

கண்படு தூரத்தில்தான் வாழ்ந்தார்கள். நன்றாக இருந்த மனிதன். இரவுபகல் பாராது குடும்பத்துக்காய்ப் பாடுபட்டவர். திடீரென ஒருநாள் பக்கவாதத்தால் படுக்கைக்குத் துணையானார். முடிந்தவரை முயன்றார்கள். குறைந்தது அன்றாடக் கடமைகளையாவது தான்செய்யும் அளவுக்கேனும் கொண்டுவர. இயலாதுபோனது.

அன்றிலிருந்து மனைவி வீட்டோடு தன்னைச் சுருக்கிக் கொண்டாள்.

வீட்டுப்பணியோடு கணவனின் பராமரிப்பு அவளுக்குப் பெருஞ் சுமையானது.

காலைக் கடனிலிருந்து கண்மூடும்வரை அனைத்துப் பணிகளும் அவளால் ஆகின.

பிறரின் அனுதாபத்துக்குள்ளானாலும் அவள் அலுப்படையவில்லை. தனக்குத்தான் பணிசெய்வதுபோல காரியங்களாகின.

ஓடியாடித் திரிந்த கால்கள் ஓய்வுற்றுப்போனால். மனமும் சோர்வடைந்து போவது இயல்பே. அதுவும் படுக்கையோடு விழுந்து விடும்போது ஏற்படும் விரக்தி சிலவேளை பொறுமைக்குந் தாழ்பாடிடும்.

அவர் அடிக்கடி சிறிய விடயங்களுக்கும் கோபப்படுவார். அவள் பொறுமையின் கதவுகளை அகலத்திறப்பாள். வயதில் அவரைவிட பத்துவருடம் இளையவள் என்றாலும் மனப்பக்குவம் மிக அதிகம்.

சிலவருட போராட்டத்தின்பின் மரணம் அவரை அணைத்துக்கொண்டது. அப்போது நான் நாடு கடந்திருந்தேன். தகவல் அறிந்தபோது எனது வாயில் வந்த வார்ததைகளே “சொர்க்கம் அவளுக்குச் சொந்தம்”.

 

Comments