ஜனவரி 01: தோட்டங்களுக்கு வழங்கிய விடுமுறை தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் முயற்சி? | தினகரன் வாரமஞ்சரி

ஜனவரி 01: தோட்டங்களுக்கு வழங்கிய விடுமுறை தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் முயற்சி?

சி.கே. முருகேசு

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியை வழமைக்குமாறாக தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்ததால் அன்றைய நாள் சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டுமென தற்போது கோரிக்கை விடப்படுகின்றது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்க விடுமுறை தினங்களாகிய ஞாயிறு மற்றும் போயா தின விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. நாள் சம்பளத்தால் தொழிலாளர்கள் வேதனமற்ற விடுமுறையாக தமது தின வருமானத்தை இழக்கின்றனர். எனினும் வீட்டில் விடுமுறையை கழிக்காது தொழில் புரியும் பட்சத்தில் அவர்களுக்கு அப் போயா மற்றும் ஞாயிறு தினங்களில் ஒன்றரை நாளுக்குரிய வேதனம் வழங்கப்படுகின்றது.

பெரும்பாலும் இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் சேகரிக்கும் தொழிலாளர்களே இவ்வாறு ஒன்றரை நாள் சம்பளத்தைப் பெற்று வருகின்றனர். போயா தினங்களிலும், ஞாயிறு தினங்களிலும் தொழில் வழங்குவதற்கு தோட்ட நிருவாகங்கள் மறுப்பு தெரிவிக்கும்போது அதனை எதிர்த்து அந்நாட்களில் வேலை வழங்கவேண்டுமென கோர முடியாது. காரணம்: அத்தினங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினங்களாகும். அதேவேளை சித்திரைப் புத்தாண்டு தினம் மற்றும் மேதினம் ஆகிய இரண்டு விடுமுறை தினங்களிலும் தொழிலாளர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். இவை தவிர ஏனைய அனைத்து நாட்களும் நாட்கூலி பெறும் தொழிலாளர்களின் வேலை நாட்களாகும். அவர்களது வாழ்வாதாரத்திற்கு கைகொடுக்கும் நாட்களாகும்.

தொழிலாளர்கள் வியாதி மற்றும் சொந்த தேவைகளுக்காக தாமாக தொழிலுக்கு சமூகமளிக்காதபோது அத்தின வருமானத்தை அவர்கள் இழக்கின்றனர். குறிப்பிட்ட தினங்களுக்கு மேலதிகமாக வேலைக்குச் சமூகமளிக்காதவர்கள் வைத்திய அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு தொழில் புரியும் நிறுவனத்தில் இத்தகைய ஒழுங்கமைப்புகள் தேவையே. ஆனால் நாள் சம்பளம் பெறுவதற்காக தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய சீரான நாட்களில் தோட்ட நிர்வாகம் அவர்களுக்கு தொழில் வழங்க மறுபது நியாயமற்றதாகும்.

பெருந்தோட்ட மக்கள் மத்தியில் எத்தனை தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, நத்தார் பண்டிகை என பெருநாட்கள் வந்து போயினும் ஜனவரி முதலாம் திகதி போன்ற சுறுசுறுப்பும், கலகலப்பும், சினேகபூர்வமும் கொண்ட நாள் வேறில்லை எனலாம்.

ஆங்கிலேயர் காலம் முதல் தோட்ட நிர்வாகமும், பெருந்தோட்ட உத்தியோகத்தர்களும், தொழிலாளர்களும் பரஸ்பரம் வாழ்த்துகள் கூறியும் கைலாகு கொடுத்தும், சம்பிரதாய பூர்வமாக வணக்கம் தெரிவித்தும் தமது பிணக்குகளை மறந்து ஒன்றிணையும் நன்னாள் ஜனவரி முதலாம் திகதி. வேறெந்த தொழிற்றுறையிலும் காண முடியாத பல சிறப்புகளை ஜனவரி முதலாம் திகதி பெருந்தோட்டங்களுக்குள் கொண்டு வருகிறது. வேலைத்தளம் தோறும் தெய்வ ஆசி வேண்டி பிரார்த்தனைகள் மேற்கொள்வதும், தமது தோட்டம் சிறப்பாக அபிவிருத்தியடைய வேண்டுமென இறைவனை வழிபடுவதும் தோட்ட நிருவாகம், தொழிலாளர் என்ற பேதமின்றி பாற்சோறும் பலகாரங்களும் உண்டு மகிழ்வதும் பிரிட்டிஷ் காலம் முதல் பெருந்தோட்டங்களில் பேணப்பட்டுவரும் பாரம்பரியமாகும்.

வருடத்தின் முதலாவது தினம் செக்ரோலில் தமது பெயர் பதியப்பட்டு அன்று சம்பளம் பெறும் தகுதியை அவர்கள் பெற்றுக்கொள்ள தொழிலாளர்கள் ஆவல் கொள்கின்றனர். முதல்நாள் போன்று முழு வருடமும் அமையுமென்பது அவர்களின் நம்பிக்கை. புதிய வாழ்க்கையை தொடங்குவதாக எண்ணி முதல் நாளில் மகிழ்ச்சியோடு வேலைத்தளம் செல்லும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு இம்முறை சிதறடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி எனப்படுவது அரசாங்க விடுமுறை தினமன்று. சகல நிறுவனங்களிலும் தொழில்கள் நிகழும்போது பெருந்தோட்டங்கள் முதல் நாளில் முடக்கப்பட்டது நியாயமற்றதாகும்.

இவ்வருட ஜனவரி முதலாம் திகதி களனிப் பள்ளத்தாக்கு (Kelani vally) பிராந்தியத்தில் இயங்கும் பெருந்தோட்ட கம்பனியின் நிருவாகங்கள் தொழிலாளர்களுக்கு தொழில் வழங்க மறுப்பு தெரிவித்தன. இதுபற்றி வினவியபோது தோட்ட நிர்வாகங்கள். ‘கம்பெனியின் கட்டளை’ என கைவிரித்தன.

குறிப்பிட்டபெருந்தோட்ட கம்பனியின் பொதுமுகாமையாளரிடம் வினவியபோது ‘இப்போது எதுவும் செய்யமுடியாது. உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்களிடம் வேலைபெற இயலாது’ என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தோட்ட உத்தியோகத்தர்கள் மாதாந்த வேதனம் பெறுபவர்கள். அவர்களுக்கு விடுமுறை வழங்குவதனால் வேதனம் இழக்கப்படுவதில்லை. ஆனால் சம்பளத்தோடு அவர்கள் விடுமுறையை அனுபவிக்கும்போது அப்பாவி தொழிலாளர்கள் தமது நாளாந்த வருமானத்தை இழப்பதா?

மேலும் கடந்த வருடம் (2018) ஜனவரி மாத முதலாம் திகதியும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லையெனவும் அதன் பிரகாரம் இவ்வருடமும் ஜனவரி முதல்நாள் தொழில் வயழங்கப்படவில்லை என்றும் பிறிதொரு காரணமும் கூறப்பட்டுள்ளது.

இப்பெருந்தோட்ட கம்பனி ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாத முதலாம் திகதி ஒரு திங்கட்கிழமை. ஆனால் போயா விடுமுறை தினம்.

போயா விடுமுறை தினத்தில் தொழில் வழங்க மறுப்பது தவறென கூறவில்லை. அன்றைய தினம் ஒன்றரை நாளுக்குரிய சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே கடந்த வருடத்தை முன்மாதிரியாகக் கொண்டு இம்முறை செல்வாய்க்கிழமை நாளில் தொழில் வழங்காதிருப்பது எங்ஙனம் நியாயமாகும்?

இவ்வருட ஜனவரி மாத முதலாம் திகதி சீரான கால நிலை கொண்டதாக அமைந்திருந்தது. இறப்பர் தோட்டங்களில் அதிக பால் உற்பத்திக்கான மாதமாகவும் இந்நாட்கள் கணிக்கப்படுகின்றன. இறப்பர் மரங்களின் இலைகள் முதிர்ச்சி கண்டு பழுக்க தொடங்கும் போது பால் முழுவதும் மரத்தின் அடிப்பகுதியில் நிறைவதனால் இம்மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும். இத்தகைய காலநிலை கொண்ட ஒரு நாளை வீணாக்கியதன் மூலம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது.

அண்மைக்காலமாக ஆயிரம் ரூபா சம்பளம் கோரி பெருந்தோட்ட மக்கள் பரவலாக மேற்கொண்ட போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், முகாமைத்துவ கம்பனியின் பொது முகாமையாளரின் உருவ பொம்மையை எரித்தமை போன்ற சம்பவங்களுக்காக தொழிலாளர்கள் இவ்வாறு பழிவாங்கப்பட்டார்களென அப்பட்டமாக தெரிகின்றது. ஜனவரி முதலாம் திகதி பெருந்தோட்ட வேலைத்தளங்களின் தெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்காக காலம் விரயமாவதாகவும், அதன் காரணமாக அன்றைய உற்பத்தியில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது. பெருந்தோட்டத்துறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நிகழ்ந்து வந்த இந்த வழிபாட்டு சம்பிரதாயத்தினால் இப்போதுதான் நட்டம் ஏற்பட்டு விட்டதா? அன்றைய தினம் உற்பத்தியில் குறைவற்ற விதமாக ஒழுங்குகளை மேற்கொள்ள ஏன் முடியாது? பெருந்தோட்ட மக்கள் ஒருபோதும் குறைந்த உற்பத்தியை ஈட்டிக்கொடுத்து நிறைந்த வருவாயை எதிர்பார்ப்பவர்கள் அல்லவென்பதை பெருந்தோட்ட கம்பனிகள் உணரவேண்டும். மேலும் அவர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் தாம் தொழில் செய்யும் தோட்டங்கள் மேலும் சிறக்க வேண்டும் என்பதற்காத்தானே!

வெள்ளத்துரைமார்களிடம் காணப்பட்ட மனிதாபிமானமும், பண்புகளும் இந்த கறுப்பு (இராஜ) துரைகளிடம் காணப்படுவதில்லையென்பது கவலைக்குரியதாகும்.

பழிவாங்கும் நோக்கில் அப்பாவித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கப்பட்டுள்ளது. எக்காரணமுமின்றி ஜனவரி முதல் திகதி செவ்வாய்க்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய நாட்சம்பளத்தை இத்தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு சகல தொழிற்சங்கங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் ஜனவரிகளிலும் இத்தகைய கெடுபிடிகள் நிகழாதிருக்கும் வகையில் சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments