இடைப்பட்டியை அரசே முதலில் இறுக்கிக்கொள்ள வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

இடைப்பட்டியை அரசே முதலில் இறுக்கிக்கொள்ள வேண்டும்!

கலாநிதிஎம். கணேசமூர்த்தி

பொருளியல்துறை,

கொழும்புப் பல்கலைக்கழகம்.

கடந்த ஒக்டோபர்   26ஆம் திகதி முதல் டிசம்பர் 16 திகதி வரையான 51 நாட்களில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி இலங்கையின் மண்டையில் ஓங்கி விழுந்த ஒரு பலத்த அடியாகும். அந்த அடியினால் ஏற்பட்ட காயங்களின் பாரதூரமான தன்மை பற்றிய தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால் இக்காயங்களுக்கு உடனடி துரித மருந்து எதுவுமே கிடையாது. மாறாக படிப்படியாகவே அவை குணமடைய வேண்டும். படிப்படியாகவே காயங்களுக்கு மருந்திடவும் வேண்டும்.

அரசாங்கம் தற்போது அந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறுகிறது. முதலில் ஏற்பட்ட காயங்களின் பாரதூரமான  தன்மை பற்றி வெளிப்படுத்தும்போது மேற்படி நெருக்கடியினால் அக்காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் 1 பில்லியன் டொலர்களினால் வீழ்ச்சியடைந்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஒக்டோபர்   26ல் 799 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்குகளின்   கையிருப்பு டிசம்பர் 16 இல் 6985 மில்லியனாக குறைந்துள்ளது.

இதே காலப்பகுதியில் திறைசேரி உத்தரவாதங்கள் என்ற வகையிலும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணையங்கள் என்ற வகையிலும் 371.8 மில்லியன் டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேற்படி 51 நாட்களில் ரூபாவின் பெறுமதி 3.8%இனால் தேய்வடைந்து சென்றுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேற்கொண்ட தலையீடுகள் காரணமாகவும் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் குறைவடைந்துள்ளன. அதேவேளை 2019ம் ஆண்டில் இலங்கை இதுவரையில் மிகப்பெரியதொரு கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. நாளை 14ம் திகதி திங்கட்கிழமை 2600 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் ஒவ்வொருவர் மீதும் இச்சுமை வெவ்வேறு வழிகளில் வந்து விழத்தான் போகிறது. இக்கடன் மீளச் செலுத்தல் மட்டுமன்றி 2019 நடப்பாண்டில் மொத்தமாக 5900 மில்லியன் டொலர்கள் கடன்கள் மீளச் செலுத்தப்பட  வேண்டியிருப்பதாக     அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது   மிகப் பெரியதொரு  தொகையாகும்.  இத்தொகையை திரட்டுவது எளிதன்று. மேலும் கடன்பெறாமல் பெற்ற கடனை மீளச்செலுத்த இயலாத நிலையில் இலங்கையின் பொருளாதாரம் உள்ளதையே  இது நன்கு புலப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிறுவனத்துடன் நின்றுபோயிருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர குழுவொன்று வொஷிங்டனுக்கு சென்றுள்ளது. அதன் மூலம் கடன் தொகையொன்றை பெற்றுக்கொள்ள எத்தனிக்கப்படுகிறது.

சார்க் நாடுகளின் கடன் வசதிப்படுத்தல்களின் கீழ் இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவும்,  சீனாவின் ‘பண்டா (Panda Bond) பிணையம் மற்றும் ஜப்பானின் சமுராய் (Samurai Bond) பிணையம் மூலமாகவும் 500 மில்லியன் டொலர்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக சர்வதேச பணச்சந்தையில் சுமார் 1 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறும் நோக்கில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக உரிய தரப்பினர் எதிர்வரும் வாரத்தில் வொஷிங்டனுக்கு புறப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் நலிவடையச் செய்யலாம். உயர்வரி வீதங்களை குறைத்து வரி அடிப்படையை விரிவாக்குவதன் மூலமே அதிக அரசிறையை திரட்ட முடியும். உயர் வரி வீதங்களை விதித்து வரி இறுப்பாளர்களை கசக்கி சாறுபிழிய முற்பட்டால் அது  வேலை செய்வதற்கான விருப்பத்தை குறைக்கும் அதேவேளை, பொருளாதார நடவடிக்கைகளை விஸ்தரித்து அதிக வருமானம் உழைக்கும் நடவடிக்கைகளையும் குறைவடையச் செய்யும். இதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாயை திரட்ட முடியாது போகும் அதேவேளை, அரசியல் ரீதியாக பதவியிலுள்ள அரசாங்கத்திற்கு அதன் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.  51 நாள் அட்டகாசத்தின்போது வரிகுறைப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அழுத்திக் கூறவேண்டும். எனவே அதிக வரிச்சுமை அதிக அரச வருவாய் என்ற அணுகுமுறை பதவியிலுள்ள அரசாங்கத்திற்கு எதிர்வரும் தேர்தல்களில்   ஒரு பாடத்தை புகட்டலாம்.

மறுபுறம் அரசாங்கம் தனது இடுப்புப் பட்டியை இறுக்கக் கட்டிக் கொள்ள முன்வரவேண்டும். இந்நாட்டின் அரச செலவுகளில் வீண் விரயங்களுக்கும் ஆடம்பர வைபவங்களுக்குமே அதிகமான பணம் செலவிடப்படுகிறது. உதாரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இருபது மில்லியன் ரூபாவை செலவிட ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இன்னொரு  பக்கம் ஆடம்பர வைபவங்களுக்கு பெருந்தொகை செலவிடப்படுகிறது. 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் ஆடம்பர வைபவங்களில் கடன்களை பெறுவதன் மூலம் கடன் தவணைச் செலுத்தல்களை மேற்கொள்ள முடியுமென்றும் வெளிநாட்டு ஒதுக்குகளின் இருப்புகளின் அளவை அதிகரிக்க முடியுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் மூடீஸ் (Moodys) கடன் தரமிடல் நிறுவனம் கூறுகையில், நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகள் குறைவடைந்துள்ள அதேவேளை, கடன் பெறுவதற்கான தேவை அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களின் அளவு இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளை விட அதிகமாக இருக்கும் எனவும் இதனால் External Vulnerability Indicator (EVI) 5 160% மட்டத்தை விஞ்சியதாக இருக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

மூடீஸ் நிறுவனத்தின் கருத்தின்படி இலங்கையில் தொடர்ந்து செல்லும் அரசியல் அதிர்ச்சி நிலையும் அரசாங்கத்தின் இறைத்தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கை வகுப்பாக்கம் என்பனவும் சேர்ந்து நாட்டின் வரவு செலவுத்திட்ட நடவடிக்கைகளை உறுதியாகப் பேணும் முயற்சிகளை மந்தகதிக்கு தள்ளி விட்டுள்ளதுடன் உயர்ந்த மட்டத்திலான கடன் சுமையை நீண்டகாலத்துக்கு சுமந்து செல்ல வேண்டி ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள  2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 'மக்களுக்கு சிநேகபூர்வமான' ஒன்றாக இருக்கும் என அரசாங்கம் கூறுகிறது. இதனை எவ்வாறு செய்யப்போகிறது என்பதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரச வருவாய்களை ஒரு ஆடம்பர அரச வைபவத்திற்காக 100 மில்லியன் செலவிடவும் தயங்குவதில்லை. எனவே அரசாங்கம் இத்தகைய விழாக்கள் ஆடம்பரங்கள் படாடோபங்கள் என்பனவற்றை சற்று குறைத்து மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க முன்வரவேண்டும்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நியமனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய செலவுகள் புதிதாகத் தோன்றும் நிறுவனங்கள். அவற்றை நடத்திச் செல்லும் செலவுகள் பற்றி அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

அநாவசிய ஆடம்பரங்களையும் வீண்செலவுகளையும் விரயங்களையும் குறைத்தாலே வரவு செலவுத்திட்டத்தை ஸ்திரப்படுத்த முடியும். மாறாக பொதுமக்கள் மீது அச்சுமையை இனிப்பு பூசிய குளிகையாக கொடுக்க முயற்சித்தால் அதன் விளைவுகள் ஆட்சியாளர்களுக்கு இனிப்பாக இருக்கப் போவதில்லை.

Comments