சவால்களே ஒருவனுக்கு திராணியை கொடுக்கும் | தினகரன் வாரமஞ்சரி

சவால்களே ஒருவனுக்கு திராணியை கொடுக்கும்

எஸ். தவபாலன் - புளியந்தீவு தினகரன் நிருபர்

கிழக்கு மாகாணம் வளங்கள் பல நிறைந்த ஒரு  பூமி. முறையான திட்டமிடலும், அர்ப்பணிப்போடு கூடிய சேவை மனப்பாங்கும் நோக்கத்தை நோக்கிய ஒற்றுமையோடு கூடிய நகர்வும் நம் எல்லோருக்கும் தேவை. ஒட்டுமொத்தமாக எவ்லோரும் நமது நோக்கத்திற்கு உதவுவார்கள் என்றோ ஒத்துழைப்பார்கள் என்றோ எவரும் எதிர்பார்க்க முடியாது. மொத்த சனத்தொகையில் 80 அல்லது 90 விகிதத்தினர் எனது கருத்தை ஆதரிப்பர். எந்த ஒரு விசயத்தை எடுத்தாலும் அது இலகுவாக இருக்கும் என எண்ணிவிட முடியாது. அது தெரிந்த விடயம். சவால்கள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான்  வெற்றிக்கனியை சுவைக்க முடியும் என கிழக்கின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வாரமஞ்சரியுடனான நேர்காணலில் தெரிவித்தார். அவரது கருத்துக்களை   வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.... 

கே: கிழக்கு மாகாணத்தின் சிறந்த முறையில் இயங்கிய ஸ்தாபனம் கடற்தொழில் கூட்டுத்தாபனம். அது கடந்த வருடம் இழுத்து மூடப்பட்டது. நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலை இழந்தார்கள். மீனவர்களும், இறால் பண்ணையாளர்களும், தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதோடு, விற்பனையில் நட்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனை மீளவும் இயங்கவைப்பது பற்றிய உங்கள் கருத்து?  

ப: மீளவும் இயங்கவைக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது. கிழக்கைப் பொறுத்தவரையில் எனக்கு இரண்டு வகையான பொறுப்புக்கள் உள்ளன, நான் பிறந்து வளர்ந்த மண் கிழக்கு, அடுத்தது எனது பதவிக்குரிய பகுதி. ஆதலால் அதனை அபிவிருத்தி செய்வதில் நான் சந்தோசமடைவேன். இழுத்து மூடியவைகள் யாவும்,  திறக்கப்பட வேண்டும். இதுபற்றி இப்போதைய கடற்தொழில் அமைச்சரோடு கலந்துரையாடினேன். இதற்கான இடம், கட்டிடம், தளபாடங்கள், இயந்திர சாதனங்கள் யாவுமே பவுத்திரமாக இருக்கும்போது அதனை இயங்கவைப்பதில் சிரமம் ஏற்படப்போவதில்லை. அக் கட்டிடத்தை தனியாருக்கு கொடுத்து” ஐஸ்”. தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம் என்ற ஆலோசனை அவர்களிடம் இருந்தது. அதை கைவிட்டு விட்டு இப்போது பழையபடி இயங்கவைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.  

கே: கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர்களின் இடமாற்றம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல ஆசிரியர்கள் தங்களது இடமாற்றத்தை நியாய மானதென  எற்றுக்கொள்வதாக தெரியவில்லை. இதனை ஒரு வரையறைப்படுத்தி நிலைமையை சுமூகமாக்க முடியாதா? 

ப: ஆசிரியர்களின் இடமாற்றம் அவர்களது தொழிற்சங்கங்களுக்கு பல சிக்கல்கனை தோற்றுவிக்கும். கிழக்கு மாகாணம் அவ்விசயத்தில் முன்னணியில் திகழ்கிறது. இவ் இடமாற்றங்களில் அவை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கவாதிகள் தத்தம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயற்பட்டு பழிதீர்த்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசியர்கள் பலர் என்னை நேரில் சந்தித்து முறையிட்டார்கள்.  

இலங்கையில் அதிக ஆளணியைக் கொண்டது கல்வி அமைச்சாகும். அதிலும் பிரதானமாக ஆசிரியர்களைச் சார்ந்தது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒழுங்கு செய்யப்படும்போது கல்வித் திணைக்களம் அது தொடர்பான தொழிற் சங்கங்களின் ஆலோசனைகளைப் பெறுவதும் அவைபற்றி ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பதும் ஒரு வழக்கமான செயற்பாடு. 

இவ் விடயத்தில் கஷ்டப் பிரதேசத்தில் கடமையாற்றியவர்களுக்குக்கூட மீண்டும் அதே கஷ்டப் பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாகவும், முது நிலை பட்டப்படிப்பை முடித்தவர்களை ஆரம்பப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும்,  பல நோயாளி ஆசிரியர்கள்கூட துார இடங்களுக்கும், கஸ்டப் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பல ஆசிரியர்கள் என்னிடம் நேரில் வந்து முறையிட்டனர். அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை ஒரே தடவையில் இடமாற்றம் செய்யும்போது ஒரு சில கவலையீனப் பிழைகள் ஏற்படக் கூடும் மாணவர்களின் எண்ணிக்கை, பாடங்களும் அதற்கான விசேட ஆசிரியர்களும், கஷ்டப்பிரதேசங்களும், அங்கு ஆசிரியர்கள் சேவையாற்றிய காலங்களும் என்று பல விடயங்களை கவனிக்க வேண்டும். அத்தோடு, அவற்றை சமநிலைபபடுத்தவும் வேண்டும். இது இலகுவான விடயமல்ல. ஒவ்வொரு ஆசிரியரும் தத்தமது வாய்ப்பையும் வசதியையுமே கவனிக்கிறார்கள். 

அதனை மாகாண கல்வித் திணைக்களம் கவனத்தில் எடுத்து சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதிய ஆதாரமின்றி ஆசிரியர்கள் யார்மேலும் குற்றம் சுமத்தக் கூடாது. பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளும், முறைகளும் நிறைய இருக்கின்றன. பாதிப்புக்குள்ளானவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் பற்றி ஆராய வேண்டியுள்ளது. இதனை ஆராயுமாறு கல்வித் திணைக்களத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளேன் எதிலும் நியாயத்தன்மை  இருக்க வேண்டும். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் விரிவான தகவல்களோடு என்னை சந்திப்பதை தான் தவறாகக் கருதமாட்டேன். 

கே.தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் பெரிதாக தோற்றம் பெற்றுள்ளது. இது ஒரு நீண்டகாலப் பிரச்சனை இதனை ஒரு கட்டமைப்பின் கீழ் ஒழங்கு படுத்த வேண்டியுள்ளது இதில் ”சக”வோ, ”சய” வோ ஏற்படுத்தக் கூடாது. ஆசிரியர்களே இல்லாத காலத்தில் ஆயுதப் பொராட்டத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கஸ்டப்பிரதேசத்தில் அவர்கள் சம்பளமின்றி மாணவர்களுக்கு கல்வியூட்டியவர்கள் ஆதலால் இவர்களை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என்று சமூக பெரியவர்கள் உட்பட பல தரப்பினர் கருதுகிறார்கள். இதுபற்றிய தங்களின் செயற்பாடு எவ்வாறிருக்கப் போகிறது? 

ப: கேள்வியில் பல விசயங்கள் பொறுத்திருக்கிறது, அதனை யாருமே மறுப்பதற்கோ மறப்பதற்கோ இல்லை. ஆசிரியர்களை உள்ளிர்ப்பதற்கும் ஆளணியை கூட்டுவதற்கும் சில விதி முறைகள் இருக்கின்றன. அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்க வேண்டும். இதற்கு திறைசேரி அனுமதிக்க வேண்டும்.

அடுத்தது கல்விச்சேவை ஆணைக்குழு, இதுவும் அனுமதிக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு அமைச்சரவையின்  அங்கீகாரத்தை பெற வேண்டும். இப்போது 445 தொண்டர் ஆசிரியர்களை உள்ளீர்ப்புச் செயவதற்கு கல்வி அமைச்சு அமைச்சரவையின்  அங்கீகாரத்தை பெறுவதற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க இருப்பதாக எனக்கு  தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்ததும் மாகாண கல்வி அமைச்சு அதனை நிறைவேற்றும். 

கே: கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் முகாமைத்துவ உதவியாளர்களை நியமிப்பதற்கான ஒரு படிமுறையொன்று இருக்கிறதா? இதனை மாற்றி அமைப்பதற்கான உத்தேசம் உண்டா என்பதுபற்றி? 

ப: ஒரு நியமனத்தை வழங்கும்போது அதில் தரமும் எண்ணிக்கையும் முக்கியம். எண்ணிக்கை இன ரீதியாகவும், சனத்தொகைக்கு ஏற்பவும் இருத்தல் வேண்டும். இவை யாவுமே கடைப்பிடிக்கப்படும். இதில் நழுவலோ, வழுவலோ ஏற்படாது. இது சம்பந்தமாக முன்னைய ஆளுநர் நால்வர் கொண்ட குழுவொன்றை நியமித்தள்ளார். சம்பந்தன் ஐயாகூட அக் குழவிற்கு முன்னைேய ஆளுநரின் வேண்டுகோளுக்கு எற்ப ஒருவரை சிபாரிசு செய்துள்ளார். அக்குழுவினர் சரியானதும், பொருத்தமானதுமான முறையினூடாக அந் நியமனங்களை செய்வார். மாகாண சபையினது கொள்கையிலிருந்து  பிறழ்வுபடாமல் இருந்தால் போதும். ஆதலால் அதுபற்றி கவலைப்படவோ அல்லது அலட்டிக்கொள்ளவொ தேவையில்லை. 

கே: கிழக்கு மாகாண சபை போட்டிப் பரீட்சையினூடாக ஆசிரியர்களை தெரிவு செய்து நியமனம் வழங்க இருப்பதாக அறிய கிடைக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிப்போர் கிழக்கு  மாகாணத்தை வசிப்பிடமில்லாதவர்களாகவும் இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதற்குப்  பலர் எதிர்புத் தெரிவித்திருந்தனர். இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? 

ப: ஒரு மாகாண சபை போட்டிப் பரீட்சை மூலம்  ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு அதிகாரத்தை கொண்டிருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அவ்வாறு போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு விண்ணப்பங்களை கோரும்போது அது பல நிபந்தனைகளை விதிப்பதற்கு உரித்துடையது. வேறு மாகாணங்களிலுள்ளோர் அப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாதவாறு ஒரு நிபந்தனையொன்றை விதித்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இவை யாவும் நான் பதவியேற்பதற்கு முன்பு நடைபெற்றவை அதுபற்றி நான் ஆராய வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் எது பொருத்தமோ அதை செயவதற்கு நான் பின்னிற்கப் போவதில்லை. ஆனால் நான் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் எனது மாகாண மக்களுக்கு நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும்.  

கே: கிழக்கு மாகாணத்திலுள்ள பல பிரிவுகள் நிரந்தர  பிறப்பு/ இறப்புப் பதிவாளர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. சில பிரிவுகளுக்கு பதிவாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் அவை தொடர்பான தொடர் நடவடிக்கை இடம்பெறவில்லை இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆளுனர் என்ற வகையில் இதனை உங்களால் நிவர்த்தி செய்யமுடியும். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

ப:  ஒரு பகுதியின் தலைவரொருவர் இல்லையென்றால் அவரது கடமையைச் செய்வதற்கு பதிலாள் நியமிக்கப்படுவது வழக்கம். நிரந்தரமாக பதவியில் இருக்கின்ற ஒருவரைப்போல் பதில்கடைமையில் இருப்போரால் திறமான சேவையை வழங்க முடியாது. இது யதார்த்தம். இவ்விசயத்தில் பதிவாளர் நாயகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றிய தரவுகளை எமது மாகாணத்திலுள்ள 3 அரசாங்க அதிபர்களிடமிருந்து திரட்டி பதிவாளர் நாயகத்தை இப் பிரிவுகளுக்கு பதிவாளர்களை நியமிக்குமாறு கோரவும் முடியும், அத்தோடு அதனை விரைவு படுத்தவும் முடியும்.    

Comments