அதிகாரப்பகிர்வை தமிழர்கள் கேட்கும்போது கொடுக்க மறுப்பதில் எந்த நியாயமுமில்லை | தினகரன் வாரமஞ்சரி

அதிகாரப்பகிர்வை தமிழர்கள் கேட்கும்போது கொடுக்க மறுப்பதில் எந்த நியாயமுமில்லை

எம்.ஏ.எம். நிலாம்  

அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரும் விடயத்தில் அதன் தலைவிதியை தீர்மானிப்பது பாராளுமன்றமாகும். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் எமக்கு அரியதொரு வாய்ப்புக்கிட்டியுள்ளது. இதனை நாம் தவற விட்டுவிடக்கூடாது எனப் பாராளுமன்ற சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.  

தமிழ் மக்கள் அன்று நிராகரித்த ஒரு விடயத்தை இன்று அவர்களாகவே கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இது சிங்கள மக்கள் விட்ட தவறாகும். அன்று நகத்தால் கிள்ளியெறியக்கூடியதாக இருந்த விடயத்தை இன்று கோடரிகொண்டு வெட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

அரசியலமைப்பு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில்அது தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு கருத்துத்தெரிவித்த போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறினார்.  

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது,  

அன்று எமது நாடு சுதந்திரமடைந்த போதே அதிகாரப்பரவலாக்கலை மேற்கொண்டிருந்தால், இன்றைய நெருக்கடி நிலையை நாடு எதிர்கொண்டிருக்கமாட்டாது. அன்று தமிழ் மக்கள் நிராகரித்த ஒரு விடயத்தை அவர்களாகவே இன்று கேட்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு பிரதான காரணம் சிங்கள மக்கள் விட்ட தவறேயாகும்.  

தமிழ் மக்கள் தமக்கான மொழி உரிமையைத்தான் அன்று கேட்டார்கள். அதைக்கூட கொடுக்க முடியாத வஞ்சத்துடன் நாம் செயற்பட்டிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பை உருவாக்கும்போது தமிழ் தரப்பினர் அதில் சம்பந்தப்படவில்லை. இன்று அதில் அவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். உண்மையிலேயே இது வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்.  

இந்த வாய்ப்பை நாம் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் நாம் விளையாடிக்கொண்டிருக்க முடியாது. நாம் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டிருக்கின்றோம். தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது. அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். கடந்த கால கசப்பான சம்பவங்களை நாம் மறந்து விட முடியாது.  

40இற்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்தியா இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டது. ஆனால் நாங்களோ நீண்டதூரம் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இன்று எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

நாமெல்லோரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். அன்று அதிகாரப்பகிர்வை சிங்களவர்களே கேட்டனர்.

ஆனால் தமிழர்கள் அதனை வேண்டாமென்றார்கள் இன்று அவர்கள் கேட்கும் போது கொடுக்க மறுக்கின்றோம். இது நியாயமானதா? எனக் கேட்கின்றேன்.  

இனிமேலும் நாம் தாமதம் காட்ட முடியாது. உரியமுறையில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருப்பது அனைத்துத்தரப்புகளதும் யோசனைகளைத்தான், இதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதனை எமது நாளைய சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது. 70 ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாகிவிட்டோம் இது பெரும் இடைவெளியாகும் என்பதை தாம் மறந்துவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.  

Comments