இலங்கை-பிலிப்பைன்ஸ் உறவில் ஒரு மைல்கல் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-பிலிப்பைன்ஸ் உறவில் ஒரு மைல்கல்

ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான பிலிப்பைன்சுடனான கூட்டுறவினை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பிலிப்பைன்சுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் அரச தலைவர் ஒருவர் பிலிப்பைன்சுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்தது. இந்த வியத்தின்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டடே ஜனாதிபதி சிறிசேனவை மணிலாவில் உள்ள மலாகபியாங் மாளிகையில் வைத்து சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இராணுவம், சுற்றுலாத்துறை, விவசாயம் ஆகிய துறைகளில் ஐந்து உடன்படிக்கைகள் இந்த கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கறிகோ நகாஹோவுடன் ஜனாதிபதி சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது கைச்சாத்திடப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் மூலம் மொத்தமாக 445 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்க்கைக்கு கிடைக்கும்.

இந்த மூன்று உடன்படிக்கைகள் வருமாறு

துறைமுகத்தை அணுகும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைக்கு 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் தெற்காசிய உப பிராந்திய பொருளாதார கூட்டுறவு திட்டம் மற்றும் 145 மில்லியன் டொலர்களை வழங்கும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனிதவள அபிவிருத்தி திட்டம் அத்துடன் நகர்ப்புற தொழில்நுட்ப உதவித்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் டொலர்களை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்தது.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் போதைவஸ்து கடத்தலை குறைப்பதற்கு உதவ வேண்டுமென ஜனாதிபதி சிறிசேன கேட்டுக்கொண்டதையடுத்து அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகஹியோ நகசோ இணக்கம் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைவஸ்தை கண்டுபிடிக்க சுங்கத் திணைக்களத்துக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்த வங்கி தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கூறினார்.

மேலே கூறப்பட்ட உடன்படிக்கைகளின் கீழ் இவ்வருடம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதி உதவிகள் 815 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளன.

இதேவேளை இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இராணுவ துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்குமிடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவ கல்வி மற்றும் பயிற்சி அத்துடன் பாதுகாப்பு மற்றும் இராணுவ தூதுக்குழுக்களின் பரிமாற்றம் ஆகியவை இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கையின் கீழ் கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் வலுப்பெறவுள்ளன.

ராஜதந்திர உறவுகள்

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஜனவரி 1961இல் ஆரம்பமாகின. அப்போதுதான் பிலிப்பைன்ஸ் ராஜதந்திர அலுவலகமொன்றை கொழும்பில் திறந்துவைத்தது. அதனை இலங்கையும் பின்பற்றியது. இரு நாடுகளினதும் இருந்த ராஜதந்திர அலுவலகங்களும் 1964 இல் மணிலாவில் இலங்கை தூதரகமாகவும் 1966 இல் கொழும்பில் பிலிப்பைன்ஸ் தூதரகமாகவும் தரமுயர்த்தப்பட்டன. எவ்வாறெனினும் 1993 ஜூன் 30 ஆம் திகதி இரு நாடுகளும் தத்தமது தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்தன.

1998 இல் மணிலாவில் இருந்தவாறு ராஜதந்திர அலுவலகத்தை மீண்டும் திறந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் கூட்டிணைந்து செயற்பட விரும்பியதே இதற்கு காரணமாகும். ஆசிய அபிவிருத்தி வங்கி மணிலாவில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி சிறிசேனவின் கடந்தவார பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது இலங்கையின் பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை திறக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

பிலிப்பைன்ஸுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் விஜயம் இடம்பெறுவதற்கு முன்னரே இலங்கையில் வைத்து உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. சுற்றலாத்துறையில் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டுறவு ஆய்வு, கல்வி, பயிற்சி மற்றும் முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

தொலைதொடர்புகள் துறையில் ஊழியர் சேமநலன், உற்பத்தி, சேவை மற்றும் பாதுகாப்பு தரம் தொடர்பான உடன்படிக்கையை தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சமர்ப்பித்திருந்தார்.

நகர திட்டமிடல், நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்திருந்தார். மீன்பிடித்தல், கால்நடை ஆய்வுகள் தொடர்பாக விவசாய, கால்நடை மற்றும் கிராமப்புற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் பி. ஹரிசன் சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் பிலிப்பைன்ஸுடனான இணை இராணுவ பயிற்சி தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்படி பிலிப்பைன்ஸ் விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளில ஒரு சரித்திரபூர்வமான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டடே இலங்கையுடன் எதிர்காலத்தில் பரந்துபட்ட அளவில் நட்புறவைத் தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

இலங்கையும் பிலிப்பைன்ஸும் ஆசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் இரு நாடுகள். சட்டவிரோத போதைவஸ்தை ஒழிப்பது இரு நாடுகளுக்கும் சவாலாக உள்ளது. இதற்காக சர்வதேச மட்டத்தில் கிட்டிய உறவுகளை இரு நாடுகளும் அபிவிருத்திசெய்துகொள்ள வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுட்டடே மேலும் கூறினார்.

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதே தனது நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிசேன தனது அதிகாரபூர்வ விஜயம் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது என்று கூறியதுடன் இலங்கைகு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுட்டடேக்கு அழைப்பு விடுத்தார்.

Comments