பல நலன்களைக் கொண்டுவரும் ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

பல நலன்களைக் கொண்டுவரும் ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம்

ஆட்சி பீடம் ஏறிய இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவர் அதிக தடவைகள் வடக்குக்கு விஜயம் செய்திருப்பின் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே ஆகும். அவரை அப் பதவியில் அமர்த்துவதற்கு அம்மக்கள் பெற்றுக்கொடுத்த பெரும் ஆதரவு மீதான அவரது நன்றி உணர்வும் தமிழ் மக்கள் தம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் அதேவேளை அவர்களுக்கு நீதியையும் நிம்மதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அதன்பால் அவர் கொண்டிருக்கும் உறுதிப்பாடுமே அவரை அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்ய தூண்டிக்கொண்டிருக்கின்றது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போது உடனடியாக களத்தில் இறங்கி தேவையான அனைத்து நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விடுத்த பணிப்புரையே முப்படையினரின் அர்ப்பணிப்புமிக்க அதிவேக மீட்பு பணிகளுக்கு காரணமாக அமைந்தது.

உரிய நேரத்தில் படையினர் தகுந்த உத்திகளுடன் மீட்பு பணியை ஆரம்பித்திருக்காவிடின் கடந்த வெள்ளத்தின் போது பெருமளவு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஊடகங்களுக்கு கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நாட்டின் அரசியல்வாதிகளின் வரலாற்றை அறிந்த ஒரு அரசியல்வாதி என்ற வகையிலேயே சுமந்திரனின் அந்தக் கருத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. செயற்திறன்மிக்க படையணி அரச தலைவன் வசம் இருந்தபோதிலும் அதனை உரிய நேரத்தில் செயற்பட வைப்பதற்கான தீர்க்க தரிசனமும் மனித நேயமும் அந்த தலைமைத்துவத்திடம் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரன் வெளியிட்டிருக்கும் அக்கருத்தின் உள்ளார்ந்த அர்த்தமாகும். ஓரிரு காடையர்கள் தமிழர்களுக்கு எதிராக ஆரம்பித்த வன்செயலை உரிய நேரத்தில் தகுந்த விதத்தில் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை அப்போதைய அரச தலைவர் எடுக்காததனாலேயே 83 ஆம் ஆண்டின் ஆடிக் கலவரம் தமிழ் இனத்திற்கு எதிரான வன்முறைகளாக காட்டுத்தீயைப் போல் பரவியது என்பதை சுமந்திரன் போன்றவர்களே நன்கறிந்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் இந்த வெள்ளத்தினால் வடக்கு தமிழ் மக்களுக்கு வரவிருந்த பேராபத்திலிருந்து அந்த மக்களைப் பாதுகாத்தவர் என்ற வகையிலேயே ஜனாதிபதி நாளை வடக்கிற்கு விஜயம் செய்கின்றார்.

இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணப் பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பின்னணியில் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட எதிர்கால சந்ததியினரின் கல்வி செயற்பாட்டை சீர்திருத்த வேண்டும் என்பதும் அதற்கு அஸ்திவாரம் இடவேண்டும் என்பதும் ஜனாதிபதியின் இந்த முல்லை விஜயத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்கின்றது. ஆகையால் பௌதீக ரீதியில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட 11 பாடசாலைகளின் புனரமைப்பு பணிகளுக்கான நிதியை ஒதுக்கிக்கொடுத்திருக்கும் அதேவேளை, அப்பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதால் தேவையான மனித வளங்களை முப்படைகளிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

இதனால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மிகக் காத்திரமான முறையிலும் துரித கதியிலும் புனரமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் விசேட நிதியிலிருந்து 31.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு சமூகம் ஏதேனுமொரு வகையில் பாதிக்கப்படுகின்றபோது அச்சமூகத்தைச் சார்ந்த இளம் பருவத்தினரே அப்பாதிப்பின் இலகுவான அதேநேரத்தில் முதன்மை இலக்காக மாறிவிடுகின்றனர். இதன் காரணமாக உள ரீதியாக வெகுவாகப் பாதிக்கப்படுகின்ற இந்த இளம் சமுதாயத்தை வெகு இலகுவாக போதைப்பொருள் அடிமையாக்கிக் கொள்கின்றது. மூன்று தசாப்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை போதைப்பொருள் மேலும் மோசமாக்கியிருக்கின்றது என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வட மாகாணம் குடிபோதையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தெரிய வருகின்றது. வறுமை, வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் இன்மை, மன உளைச்சல் ஆகியனவே சாதாரண மக்களை குடிபோதைக்கு அடிமையாக்கும் முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன. மறுபுறத்தில் பாடசாலை சமுதாயத்தை இலக்கு வைத்து மிக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நாளை முல்லைத்தீவு வித்தியானந்தா வித்தியாலயத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் மூலம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. போதைப்பொருள் உபயோகத்தால் ஏற்படக்கூடிய தனிநபர் மற்றும் சமூக சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வே போதைப்பொருள் உபயோகத்தைத் தடுப்பதற்கான அஸ்திவாரமாக அமைகின்றது. அவ்வாறு சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வு காரணமாக பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்ற அதேநேரம், தமது பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றார்களா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு பெற்றோருக்கு கிடைக்கின்றது. மேலோட்டமாக போதைப்பொருள் என்பதை எளிதில் கண்டறிய முடியாத விதத்திலான உத்திகளைக் கையாண்டு போதைப்பொருள் விநியோகம் சம்பந்தப்பட்டவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் போதைப்பொருள் வியாபாரத்தில் உபயோகப்படுத்தும் உத்திகள் பற்றி அறியக் கிடைக்கின்ற மாணவர்களுக்கு தம்மை நோக்கி வருவது போதைப்பொருளா என்பதை அறிந்து கொள்வதற்கான அறிவும் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கப் பெறவிருக்கின்றது.

ஜனாதிபதியின் தலைமையில் நாளைய தினம் முல்லைத்தீவில் இடம்பெறும் நிகழ்வுகளில் இன்னுமோர் சிறப்பம்சமாக கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அரச படைகள் வசம் இருந்துவரும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு துறைக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றது. அதற்கமைய இதுவரை காலமும் படையினர் வசம் இருந்து வந்த, கிளிநொச்சி ஜயபுரம் வடக்கு நாச்சுக்குடாவின் இரு விவசாயப் பண்ணைகளுக்கு சொந்தமான 479 ஏக்கர் நிலப்பரப்பும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் 120 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட விவசாயப் பண்ணையும் மன்னார் மாவட்டத்தின் வெள்ளங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்திருக்கும் 600 ஏக்கர் விஸ்தீரணமுள்ள விவசாயப் பண்ணையும் அடங்கிய வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 1099 ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்ட பாரிய நிலப்பரப்பு விடுவிக்கப்படுகின்றது.

இந்த பெரும் நிலமானது பெயரளவிலான வெற்று நிலம் அல்ல. மாறாக அவை இதுவரை காலமும் அரச படைகளுக்கு பக்கபலமாக இருந்து வந்த பெரும் விளைச்சல் நிலங்களாகும். ஆகையால் அவற்றை 'விடுவி.... விடுவி....Ó எனக் கூறிவந்தோர் இந்த பெறுமதி மிக்க நிலத்தை வீணடிக்காது இப்போது இருப்பதை விட செழுமைமிகு விளைச்சல் நிலங்களாக உயர்த்த கடமைப்பட்டிருக்கின்றனர். அப்படி செய்யும் பட்சத்திலேயே இந்த நில விடுவிப்பானது ஒரு அர்த்தபுஷ்டியான செயற்பாடாக அமையும்.

நிலத்தை தக்கவைப்பதற்காக முன்னெடுத்த போராட்டம் முடிவுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அன்று இழந்த நிலங்கள் இன்று மீளக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இந்த நிலங்களை மீளப் பெறுவதற்காக பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட சகலவித சாத்வீகப் போராட்டங்களும் ஏழு ஆண்டு காலமாக செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வந்த நிலையில் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் அடைந்த வேதனைகளுக்கு இன்று கைமேல் பலன் கிடைத்திருக்கின்றது.

ஆகையால் இதன் உரிய பயனை அடைவதற்கு பொது மக்களுக்கான வழியை வகுத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் வட மாகாண ஆளுநருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்குமே இருக்கின்றது. இதுவரை இந்த நிலத்திற்காக போராடியவர்கள் இவர்களுடன் இணைந்து தகுந்த திட்டங்களை வகுத்து செயற்படுவார்களாயின் அன்று விவசாயத்திற்கு பெயரையும் புகழையும் பெற்று மக்களின் கைகளில் விளைச்சலை வாரி வழங்கிய இந்த வன்னி நிலம் மீண்டும் செழித்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

Comments