அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை பலவந்தமாக திணிக்கும் முயற்சியா? | தினகரன் வாரமஞ்சரி

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை பலவந்தமாக திணிக்கும் முயற்சியா?

அருள் சத்தியநாதன்

[email protected]

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அடுத்த நான்கு மாத காலத்துக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசியலின் பார்வை தற்போது நாடாளுமன்றத் தேர்தலின்பால் குவிந்திருக்கிறது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராகுல் காந்திக்கும் ஒரு அரசியல் வெற்றி தேவையாக இருக்கிறது, தன்னை நம்பகத்தன்மை கொண்ட உறுதியான நேரு குடும்பத்துத் தலைவர் என்பதை மக்கள் முன்பாக நிரூபித்துக் கொள்வதற்கு. எனவே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை அவர் நீயா நானா பலப்பரீட்சையாகவே கருதுகிறார்.

சமீபத்தில் ஐந்து இந்திய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது. இந்து கோட்டை என அழைக்கப்படும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தில் பா.ஜ.க அதிக இடங்களைப் பிடித்தபோதும் காங்கிரஸ் அக் கட்சியை ஆட்சியமைக்க விடவில்லை. மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய மோடி அலை பெருமளவுக்குக் காணாமல் போயிருக்கிறது. எனினும் பா.ஜ.க. மீதான மக்களின் பற்று ஒன்றும் பூஜ்ஜியத்துக்கு குறைந்துவிடவில்லை. ராகுல் அலை வீசாத ஒரு தருணத்தில், கடும் போட்டிக்கு மத்தியில், சரியான அணுகுமுறைகள் நகர்வுகளை மேற்கொண்டால்தான் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

இலங்கையில் ஐ.தே.க.வும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றை ஒன்று அரசியல் எதிரிகளாகக் காட்டிக் கொண்டாலும் ஆட்சிக்கு வந்ததும் இரண்டுக்கும் இடையே பெரிதாக எந்த வித்தியாசத்தையும் காண முடியாது என்பது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வாறே தான் காங்கிரசும் பா.ஜ.க.வும் இந்திய அரசியலில் அரசியல் செய்கின்றன. ஆனால் பா.ஜ.கவுக்கும் காங்கிஸுக்கும் இடையில் சில கொள்கை வேறுபாடுகளை காண முடிகிறது.

மஹிந்த ராஜபக்ச, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர், அவர் என்ன சொன்னாலும் அதை ஆமாம் என ஏற்றுக்கொள்ளும் ஒரு மனநிலைக்கு சிங்கள மக்கள் மட்டுமன்றி பௌத்த உயர் பீடங்களும் வந்திருந்தன. அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை செய்திருக்கலாம். அரசியல் அதிகாரங்கைள அளித்திருக்கலாம். தமிழர்களும் அச் சந்தர்ப்பத்தில், எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருந்தார்கள். ஆனால் ராஜபக்ச, இலங்கையில் இனிமேல் சிறுபான்மை என்ற ஒரு பிரிவே கிடையாது; அனைவரும் இந்நாட்டு மக்களே என வீர வசனம் பேசியதோடு நிறுத்திக் கொண்டு வழமையான எலி- பூனை விளையாட்டுக்கே சென்று விட்டார். ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான ஒரு மிகச் சாதகமான நிலையில் இருந்திருந்தால் சில சமயம் இனப் பிரச்சினையை தீர்க்க முன்வந்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு. எனினும் சந்திரிகா பண்டாரநாயக்க ஒரு அரசியலமைப்பு ரீதியான தீர்வை முன்வைக்க முனைந்தபோது அதை எதிர்த்து குட்டிச் சுவராக்கியவர் இதே ரணில் விக்கிரம சிங்கதான் என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

இந்திய அரசியலில் காங்கிரசுக்கும் பி.ஜே.பிக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் அடிநாதமே மதவாதமாக இருக்கையில் காங்கிரஸ் மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே இரண்டுக்கும் இடையிலான பிரதான வித்தியாசமாகும். பா.ஜ.க. இதுவரை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ததில்லை. முதல் தடவையாக இந்தியர்கள் ஒரு மதவாத ஆட்சி எவ்வாறிருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இராமருக்கு உலகிலே உயரமான சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு பிரதான இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை அமுல் செய்யப்பட்டுள்ளது. இராமர் கோவிலை அயோத்தியில் அமைத்தே தீருவது என்ற முழக்கம் மீண்டும் வீரியத்துடன் எழுந்துள்ளது. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தை பா.ஜ.க ஆட்சி வஞ்சித்து வருவதாகவே தமிழ் நாட்டு மக்கள் பரவலாக நம்புகிறார்கள்.

எனினும் காங்கிரஸ் ஆட்சியில் மதம், மொழிக்கொள்கைகள் வலிந்து புகுத்தப்படுவதில்லை. மேலும் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் தமிழக அரசை பா.ஜ.க ஆட்சி படிப்படியாகத் தன் வசப்படுத்திக் கொண்டதோடு எதிர்வரும் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கவும் உத்தேசித்திருக்கிறது. அ.தி.மு.க தலைவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இக் கூட்டணி அமையத்தான் போகிறது என்று தமிழக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இக் கூட்டணியில் கமலையும், ரஜினியையும் கொண்டுவரவும் பா.ஜ.க முயற்சித்து வருகிறது. பெரும்பாலும் ரஜினியை வளைத்து போடலாம்.

இவ்வாறு கருத்துக்களும் யூகங்களும் இறக்கைக் கட்டி எழும்பித் திரியும் போது தான், கொடநாடு, பங்களா திருட்டு தொடர்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருப்பதை கடந்த வாரம் இப் பக்கத்தில் விரிவாகப் பார்த்தோம். பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒரு விரிவானதும் சக்தி கொண்டதுமான கூட்டணியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அரசியல் கணிப்புகளின் பிரசாரம் அடுத்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதே யதார்த்தமானாலும் கூட, அது மகோன்னத வெற்றியாக அமைவதைத் தடுக்கும் வகையில் தனது கூட்டணி அமைய வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. தி.மு.க.வும், பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் எனக் கருதுகிறது. மாறாக, முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதில் தி.மு.க அமோக வெற்றி பெறுமானால், அது சட்ட சபைக் கலைப்புக்கு சில சமயம் வழிவகுக்கலாம் என்றும், தமிழகத்தேர்தல் 2021இல் நடத்தப்படுமானாலும் கூட, தி.மு.க தன் செல்வாக்கை மேலும் பெருக்கிக் கொள்ளவே அது வழிவகுக்கும் என்பதோடு அ.தி.மு.க அரசு படுதோல்வியைச் சந்திக்க இந்தக் கால அவகாசம் உதவலாம் என்றும் அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கிறது. ஆகவே, பாராளுமன்றத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் மோடி செல்வாக்கையும் இணைத்துக் கொண்டு தி.மு.க கூட்டணியோடு மோதலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்காக இருக்கும் என்று கருத இடமுண்டு.

தி.மு.க. ஏற்கனவே விரிவான கூட்டணியை அமைத்திருக்கிறது. தி.மு.கவுடன், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், வை.கோ வின் மறுமலர்ச்சி தி.மு.க, காதர் முகைதீனின் முஸ்லிம் லீக், முத்தரசனின் கம்யூனிஸ்ட் கட்சி என்பன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. தவிர, வேறு பல அமைப்புகளும் சிறு கட்சிகளும் தி.மு.கவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. திராவிடர் கழகத்தின் கி.வீரமணி தி.மு.கவின் போர்வாளாக செயல்பட்டு வருகிறார். கூட்டணியின் பிரதான பங்காளியாக காங்கிரஸ் விளங்குகிறது. மதவாதத்துக்கு எதிரான, பா.ஜ.க எதிர்ப்பு, சாதீய எதிர்ப்பு சக்திகளுக்கு, கொள்கை ரீதியாக தி.மு.க.வுடன் முரண்பாடுகள் இருந்தாலும் கூட, அவை அ.தி.மு.கவும் பா.ஜ.க.வும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. செய்ய வேண்டியதெல்லாம், தி.மு.கவுக்கு, ஒன்றுதான். பிரச்சினைகளின்றி தொகுதி உடன்பாட்டை முடித்து வைப்பதும் தோழமை உணர்வுடன் கூட்டணிக் கட்சிகளை நடத்துவதும்தான். இவ் விடயத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதி சாதுரியமாக நடந்து கொள்ளக் கூடியவராக பெயரெடுத்திருந்தார். ஸ்டாலினி்டம் இந்தத் திறமை குறைவு என்பது பொதுவான கணிப்பீடாக இருந்தாலும் அவர் தனது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் கட்சிகளிடம் இருக்கவே செய்கிறது.

தி.மு.க. கூட்டணி இவ்வாறிருக்க, பா.ஜ.க.வின் தமிழக அணுகுமுறை, அ.தி.மு.கவை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. தி.மு.க.வும், தினகரனும் இல்லை என்றதும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர பா.ஜ.கவுக்கு வேறு வழி கிடையாது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்ற அ.தி.மு.க பிரதித் தலைவரான தம்பித்துரை, பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தூக்கிக் சுமக்க வேண்டும்? இந்தப் பாவம் எங்களுக்குத் தேவைதானா? என்றெல்லாம் பேசி இருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார், எம்முடன் இணைவது பா.ஜ.க.வின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் எமது தொண்டர்கள் அதை ஏற்பார்களா? என்று பேசியுள்ளார்.

சோ நடத்தி வந்த துக்ளக், அவரது மறைவின் பின்னர் ஒடிட்டர் குருமூர்த்தியின் கைக்கு வந்திருக்கிறது. இவர் இந்துத்துவாவின் பகிரங்க ஆதரவாளர் என்பதோடு பா.ஜ.க.வின் ஊது குழலாகவும் செயல்படுபவர். சமீபத்தில் இவர், பா.ஜ.க. தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் இணைய வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தம்பித்துரையும் ஜெயக்குமாரும் எதிர்வினையாற்றி இருந்தனர். ஆனால் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச் சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி பற்றி இதுவரை உத்தியோகபூர்வமாக வாயே திறக்கவில்லை. தம்பிதுரையின் கடந்த வாரக் கூற்றுக்கும் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்பதோடு இவ்வாறெல்லாம் கருத்து சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புக் காட்டவும் இல்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது, அ.தி.மு.க, இரண்டு பிரிவுகளாகச் செயல்படுவதாகக் கணிக்க முடிகிறது. பா.ஜ.க.வை கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி, பன்னீர் தரப்பு கருதுவதாகவும், பா.ஜ.கவை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தால் அது அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்புகளுக்கு குந்தகமாகவே முடியும் என்பதால் பா.ஜ.க.வை தோழமைக் கட்சியாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று தம்பித்துரை போன்றோர் கருதுவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அ.திமு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு பா.ஜ.க. வந்த சமயத்தில்தான், சயன் என்பவர் டெஹல்காவுக்கு பேட்டி அளிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி, கொடநாடு பங்களா திருட்டுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்று அப் பேட்டியில் கூறுகிறார். அதைப்பற்றி எடப்பாடி மூச்சும் விடவில்லை. தமிழக பொலிசாரும் எடப்பாடியை விசாரிக்காமல், புகார் தெரிவித்த சயனையும் அவருடைய தோழரையுமே கைது செய்தனர்.

இவ் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், மர்மம் இருக்கிறது. விசாரணை செய்யத்தான் வேண்டும் என்றார். பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், மர்மம் இருப்பதாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, எடப்பாடியை தமது விருப்பத்துக்கு வளைத்து அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு எடப்பாடியை நிர்ப்பந்தம் செய்யும் ஒரு முயற்சியா இக் கொலைக் குற்றச்சாட்டு? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஏனெனில், ஸ்டாலினில் இருந்து பல கட்சித் தலைவர்கள் வரை சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பந்து இப்போது மத்திய அரசிடம் உள்ளது. உத்தரவிடுவதா இல்லையா என்பதை மோடியே தீர்மானிக்க வேண்டும். பா.ஜ.க.வை தோழமைக் கட்சியாக அ.தி.மு.க, அங்கீகரித்தால் சி.பி.ஐ விசாரணை வராது. முடியாது என்றால்...

ஆனால் தம்பித்துரை கொண்டிருக்கும் நிலைப்பாடு கட்சியின் எதிர்காலம் தொடர்பானது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் கலகலத்துப் போயிருக்கும் இக் கட்சி, எடப்பாடி – பன்னீரின் ஆட்சியில் மேலும் பலவீனப்பட்டுப் போயுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களைத் தவிர மக்களிடம் சொல்வதற்கு பெரிதாக இவர்களிடம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், மக்களிடம் செல்வாக்கு இழந்த பா.ஜ.க.வை தம்முடன் கூட்டு சேர்த்துக்கொண்டு மோடிபுகழ்பாடி வாக்கு கேட்டால், உள்ள வாக்கு வங்கியும் கரைந்து, வரலாறு காணாத தோல்வியைத் தழுவ நேரிடலாம் என்பது கட்சி நலன் சார்ந்து சிந்திப்போரின் நிலைப்பாடாக இருக்கிறது.

இங்கே பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கைப்போல இக்கட்டான நிலையில் இருப்பவர்கள், இரட்டையர்களான எடப்பாடியும் பன்னீரும்தான்!

Comments