நுவரெலியா ரேஸ்கோர்ஸ் குடியிருப்பாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியா ரேஸ்கோர்ஸ் குடியிருப்பாளர்கள்

நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவிலும் காணப்படும் நகரங்களில் மாநகரம் என்ற பெருமைக்குரிய நகரமாக நுவரெலியா மாநகரம் விளங்குகின்றது.

இந்த நகரத்தை குட்டி லண்டன் என ஆங்கிலேயர் வர்ணித்தனர். இந்த நகரத்தின் இயற்கை வளங்கள் அனைவரையும் கவர்வதோடு பல வீடுகளின் தோற்றங்கள் ஆங்கிலேய பாணியில் அமைந்திருப்பதும் குட்டி லண்டன் என்ற பெயர் வருவதற்கு காரணமானது.

அந்த வகையில் உல்லாசப்பயணிகள் ரசிக்ககூடிய ஒருபகுதியாக நுவரெலியா குதிரைப்பந்தைய திடலும் அமைகின்றது.

இக்குதிரை பந்தைய திடலை அண்மித்த பகுதியில் 54 குடும்பங்கள் கிட்டத்தட்ட 200 வருடங்களாக வசிக்கும் லயன் முறையிலான குடியிருப்பு பகுதியும் உள்ளது.

இங்கு பரம்பரையாக வாழ்த்து வரும் மக்கள் வாழும் இந்த குடியிறுப்பு நுவரெலியா மாநகரசபையின் முழுமையான கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.

இங்கு வசிக்கும் 260க்கும் அதிகமான மக்களில் ஒரு தொகையினர் குதிரை பந்தைய திடலை பராமரிப்பது குதிரைகளை பராமரிப்பது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். சிலர் நுவரெலியா மாநகர சபையிலும், மரக்கறி தோட்டங்களிலும் தொழிலாற்றி வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் நுவரெலியா மாநகர சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற போதிலும் வீட்டு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை நுவரெலியா மாநகர சபை பொருட்டாகக் கொள்வதே இல்லை. மாறாக இம் மக்களை தேர்தல் காலங்களில் வாக்களிக்கும் இயந்திரமாகவே இன்றுவரை பயன்படுத்தி வந்துள்ளது.

இந்த மாநகரத்தின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை தாமும் அனுபவிக்க வேண்டும் என்கின்ற ஆவல் கொண்டவர்களாக இவர்கள் காணப்பட்டாலும் இதனை கண்டறிந்து நிவர்த்திசெய்ய எவரும் முன்வருவதாக தெரியவில்லை. நேரில் சென்று பார்க்கும் போது உணர்ந்துக்கொள்ள முடியும்.

இதனடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள இந்த மக்கள் நுவரெலியா மாநகரில் சகல அபிவிருத்தி திட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். இங்குள்ள மக்களின் வாக்குகளை மாத்திரம் குறிவைத்து சுரண்டும் நோக்கில் இவர்கள் மத்தியில் வாக்குகளை கேட்டு வரும் அரசியல்வாதிகள் இதை செய்வோம் அதைச்செய்வோம் என ஆசைக்காட்டிவிட்டு வாக்குறுதிகளை வாறிக்கொடுத்துவிட்டு செல்கின்றனர். வாக்களிக்க தகுதியான 175 க்கும் அதிகமானவர்களின் வாக்குகளை பெறுவதற்கு பொய் கூறி செல்கின்றார்களே தவிர தேர்தல் முடிந்த பின் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என இக் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது உரிமைகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை இம் மக்கள் முன்வைக்கின்ற போதிலும் எவருமே அக்கறை கொள்தில்லை. இக் கிராமத்தில் இருக்கும் 54 குடியிருப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் இவ் வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அவதியுற்று வாழும் வீட்டுக்குரிய வசதிகளை திருத்தித் தாருக்கள், இந்த மக்கள் பாவிக்கும் வசதியற்ற மலசலக்கூடங்களை திருத்தி தாருங்கள், சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள வசதி செய்யுங்கள், மழைக்காலங்களில் வெள்ள நீரினால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என பல கோரிக்கைகளை இம் மக்கள் முன்வைத்து வந்துள்ளனர்.

அதற்கு அப்பால் தொழில் வாய்ப்புகளிலும், சுகாதார வசதிகளிலும், கல்வி மற்றும் கலாசார வசதிகளிலும் முற்றாக பாதிக்கப்படும் இக்கிராம மக்களை எல்லா சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகள், நுவரெலியா மாநகர சபை மற்றும் அரசாங்க திணைக்களங்களினால் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

நூற்றுக்கு அதிகமான வாக்காளர்கள் இந்த ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் உள்ளதாக தெரிவிக்கும் இங்குள்ள மக்கள் காலைக்கடனை கூட நிறைவேற்ற முடியாத மலசல கூடங்களே இங்குள்ள என்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பொது மலசல கூடம் போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இவை பாவனைக்கு உதவாதவை.

இரண்டு மலசல கூடங்கள் தமது சொந்த பணத்தில் அமைத்துள்ளனர். இவற்றையே 54 குடும்பங்களும் தினமும் பாவித்து வருகின்றனர். ஆனால் மாதம் ஒருமுறையேனும்

 

சுத்தமாக பராமரிப்பு செய்ய மாநகரசபை முன்வருவதில்லை.

அங்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் பாவனைக்கு உதவாமல் பல இன்னல்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாநகரசபைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுக்கொள்வதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேநேரத்தில் சமீபத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் இம் மலசல கூடத்தைப் பாவித்ததால் விஷக் கிருமி உடம்புக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளதை வீட்டார்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இவ்வாறு பல உட்கட்டமைப்பு வசதிகளின்றி பாதிக்கப்பட்டு புறம்தள்ளப்பட்ட இம்மக்களின் குறைகளை நிவர்த்திக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நுவரெலியா மாநகரத்தின் அழகுக்கு ஒரு கறும்புள்ளியாக காணப்படும் இந்த ரேஸ்கோஸ் குடியிருப்பு விளங்கிறது. உடனடியாக இதற்கு எதிர்வரும் ஏப்பிரல் மாத வசந்த கால விழாவுக்கு முன்னதாக நடவடிக்கை எடுத்து நிவர்த்திசெய்ய வேண்டுமென இக்குடியிருப்பு மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கவனிக்கப்படுகின்றனர் என்பதுதான் கடந்த எழுபது ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டுவரும் அரசியல் குற்றச்சாட்டு. அது நிவர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வியை தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் எழுப்புவது ஒரு புறம் இருக்க, நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், திலகராஜ், திகாம்பரம் ஆகிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க, இந்தச் சின்ன விஷயத்தை இவர்களால் ஏன் தீர்த்து வைக்க முடியாதிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? தை பிறந்தால் வழி பிறக்குமா?

Comments