பொங்'கள்' சாப்பிட்டால் வெறிக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

பொங்'கள்' சாப்பிட்டால் வெறிக்குமா?

பொங்கல் முடிஞ்சு மூணு நாளாச்சு. சரியாச் சொன்னால் ரெண்டு நாள். பதினேழாந்திகதி கடைசிப் பொங்கல், காணும்பொங்கல்.

போகிப்பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல். சில நண்பர்கள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் வாழ்த்துகளைச் சொல்லிக்ெகாண்டார்கள். 15ஆம் திகதி சூரியப்பொங்கல்தானே, உண்மையில் 16ஆம் திகதிதான் நண்பர்களின் பொங்கல். உழவர்களின் நண்பனுக்குரிய பொங்கல்! சிலேடையா நினைச்சால், நான் ஒண்டுஞ்செய்யேலாது!

சரி, பொங்கலா, பொங்கள்ளா?

பொங்கல் அன்றைக்குச் சில நண்பர்கள் ஃபேஸ்புக்கில், பொங்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். தமது அமைச்சர்கள் சார்பில் பத்திரிகைகளுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்திருந்த 'மீடியா செக்ரட்டரி' மாரும் பொங்கள் வாழ்த்துகளை அனுப்பியிருந்தார்கள். முதல் நாள் இரவு ஞாபகத்தில் அப்படி அனுப்பினார்களோ தெரியாது. கல்லுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எதற்குப் பொங்கல் வாழ்த்து என்று கேட்கிறார் நண்பர். நியாயமான கேள்வி. சரி விடுங்க; தவறுதலா நடந்திருக்கும்' என்றேன்.

தமிழுக்கு மட்டுந்தான் தவறுதலா நடக்குதா? ஆங்கிலத்தில் ஓர் 'ஏ' போட வேண்டிய இடத்தில் 'இ' போட முடியுமா? போடுவது அவமானம் இல்லையா? அப்படி நினைச்சுக் ெகாண்டு இருக்கின்றோம் அல்லவா! பேஸ்புக்கில் எழுத தெரியாவிட்டால், எதற்கு எழுத வரவேண்டும்? என்று கேட்கிறார் நண்பர். நானும் பார்த்திருக்கின்றேன், எனக்கும் ஒரு சில நண்பர்கள் பொங்'கள்' வாழ்த்துகள் அனுப்பியிருந்தார்கள். சிலர் வாழ்த்துக்'கள்' சொல்லியிருந்தார்கள்; அனுப்பியிருந்தார்கள்.

சாமானியமானவர்களுக்குத்தான் கள்ளைப்பற்றித் தெரியாது என்று வைத்துக்ெகாள்வோம், விசயம் தெரிந்த அநேக வானொலி, தொலைக்காட்சிகளிலும்கூடப் பொங்கல் தினத்தன்று 'கள்' விற்றுக்ெகாண்டிருந்தார்கள். எத்தனைபேர் அவதானித்தீர்களோ தெரியாது. பொங்கல் நல்வாழ்த்துக்'கள்' என்று பல தடவை அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.

உண்மையில் வாழ்த்துக்கள் அல்ல; வாழ்த்துகள் என்பதே சரி. அநேகர் 'கள்' சேர்த்துச் சொல்கிறார்கள். இணையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வாழ்த்து மடல்களிலும் 'கள்' என்றுதான் எழுதியிருக்கிறார்கள். அதனைத் தரவிறக்கம் செய்து மீள் பதிவேற்றம் செய்யும்போது, அந்தத் தவறு மீண்டும் மீண்டும் பகிரப்பட்டுவிடுகிறது!

வாழ்த்துக்கள் என்றால், பனங்கள், தென்னங்கள் வரிசையில் ஒரு 'கள்' வகையில் சேர்ந்துவிடும். எனவே, வாழ்த்துகள் என்பதே சரி என்று அழுத்தம் திருத்தமாக விளக்கியிருக்கிறார், முனைவர் மருதூர் அரங்கராசன் சண்முகம்.

அதுபோல்தான் பொங்கள்! பொங்கள்ளும் ஒரு மதுபானம். அதனைச்சொல்லி வாழ்த்துவதாய் இருந்தால், நீ நன்றாகப் பொங்'கள்' அடித்துவிட்டு வெறித்துக்கிடப்பாய்! என்று அர்த்தமாகாதோ? ஆகவே, தமிழைப் பொதுவெளியில் பயன்படுத்தும் அன்பர்கள், தங்களின் சுயமரியாதை கருதியேனும் பிழையற எழுதுவார்களாக. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்களே ஒரு சிறு வசனத்தையேனும் சரியாகப் பேசவோ, எழுதவோ தெரிந்திருக்காத நிலையில், பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புப் பலகைகளிலும் தமிழ்க் ெகாலை நடக்கிறது! ஐயய்யோ! என்று ஆர்ப்பாட்டம் செய்யக் கிஞ்சித்தும் தகுதி கிடையாது என்பது என் கருத்து.

வட்டார வழக்கு எதுவாகவிருந்தாலும், பொங்கல்; பொங்கள் ஆகாது! தமிழ்; தமில் ஆகாது! இதனைப் புரிந்துகொள்ள முடியாமல், தமிழ்க் ெகாலைக்கு எதிராக யாரும் குஞ்சரம் தூக்கக் கூடாது. ஓர் ஆங்கில எழுத்தைத் தவறாக எழுதுவதை எவ்வாறு அவமானம் என்று நினைக்கின்றோமோ, அதனை விட அவமானம், தமிழைப் பிழையாக எழுதுவதால் ஏற்படும்! என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பார்த்துக் காறித்துப்பிக்ெகாண்டிருக்கின்றோம் என்பதை, பிழையாக எழுதுவோர் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் நண்பர்.

இன்னும் சிலர், பேஸ்புக்கில் பாதை புணரமைப்புச் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

இல்லையே!

பாருங்கள், பாருங்கள்... உங்களுக்கும் தலைசுற்றிக் கிறுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார் நண்பர். இதையெல்லாம், பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் புனரமைப்புக்கும் புணரமைப்புக்கும் வித்தியாசம் இருக்கின்றதா, இல்லையா என்று தெரிந்துகொண்டு பதிவேற்றம் செய்யுங்களப்பா!

பொங்கள்ளைச் சாப்பிடலாமா?

ஆமாம்!

டீயைச் சாப்பிட வேண்டும், சாப்பாட்டைக் குடிக்க வேண்டும் என்றுதான் பெரியவர்கள் சொல்கிறார்கள். டீயை எடுத்த எடுப்பில் மள மளவென்று குடிக்கக்கூடாது; ஆறுதலாக ரசித்துச் சுவைத்துக் குடிக்க வேண்டும், சாப்பிடுவதைப்போல. சிங்கப்பூர் மக்கள் ஒரு டீயை ஒன்றரை மணித்தியாலம் குடிக்கிறார்கள் என்கிறார் சுகி சிவம்! சாப்பாட்டைக் குடிப்பது எப்படி? நன்றாகச் சவைத்துச் சவைத்து உமிழ்நீருடன் விழுங்கவேண்டும். ஒரு கவளத்தை 36 தடவை சவைக்க வேண்டும். அப்போது அது திரவமாகிவிடும். இனியென்ன குடிக்க வேண்டியதுதான்! அதுதான், டீயைச் சாப்பிட வேண்டுமென்றும் சாப்பாட்டைக் குடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால், பொங்கள் சாப்பிடக்கூடியதுதானே. மொடாக்குடியர்கள் வேண்டுமானால், குடித்துவிட்டுப்போகட்டும் என்கிறார் நண்பர். எல்லாம் சரி, மேலே சொன்ன விசயத்தை மறந்துடாதீங்கள்! பொங்கல், வாழ்த்துகள் இந்த ரெண்டையும் மறந்துவிடாதீங்க!

Comments