பொருளாதார பலத்தையே தமிழ் தரப்பு பேரம் பேசும் சக்தியாகக் கொள்ள வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார பலத்தையே தமிழ் தரப்பு பேரம் பேசும் சக்தியாகக் கொள்ள வேண்டும்!

தொடர்ந்து துன்பத்தில் துவன்டு கொண்டிருக்கும் ஒருவருக்கு அதை விடப் பெரிய துன்பம் ஒன்று நேருமாயின் ஏற்கெனவே அனுபவித்து வந்த துன்பமே பரவாயில்லை என்றே எண்ணத்தோன்றும். தொடர்ந்து பிரச்சினைகளை அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு நாட்டிற்கும் அதைவிடப் பெரிய பிரச்சினை ஏற்படும்போது ஏலவே இருந்த பிரச்சினைகள் அடிபட்டுப் போகும். புதிதாக எழுந்த பெரிய பிரச்சினையே தூக்கிப் பிடிக்கப்படும்.

ஒரு அரசாங்கமும் நாட்டிற்கு எவ்வளவோ நன்மையான திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியபோதும் அதன் ஒரேயொரு பிழையான செயற்பாடு அதுவரை ஆற்றப்பட்ட அத்தனை நன்மைகளையும் அடியோடு மறக்கடிக்கச் செய்து மக்கள் மனதை மாற்றிவிடும். இந்த அடிப்படை யதார்த்தத்தை புரிந்து வைத்துள்ளதாலோ என்னவோ அரசியல்வாதிகளுக்கும் அரசியல் களத்தில் சூடான பேசு பொருள்கள் அவசியமாகின்றன. தமது எதிராளிகளை வறுத்தெடுக்கக்கூடிய சூடான விடயங்களைத் தேடி நாளாந்தம் அலைந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஐம்பத்து ஒரு நாள் அரசியல் குழப்பம் இலங்கையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அந்த உலுக்கில் இலை பூ காய் எல்லாம் கொட்டி மொட்டை மரமாக நிற்கிறது இலங்கை! ஏதாவது இலை துளிர் விடுமா என்ற எதிர்பார்பில் வாஷிங்டனுக்கும் சீனாவுக்கும் பறந்து கொண்டிருக்கிறது இலங்கையின் நிதிசார் துறையில் தீர்மானங்களை மேற்கொள்ள வல்ல தரப்புகள். “பிரச்சினைதான் ஆனால் சமாளிக்கலாம்” என்று அரசாங்கம் நம்புகிறது. மேற்குலகின் கருணை பூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அதற்கு உண்டு.

இப்படி ஒரு சூழலில்தான் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவகாரம் ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஆண்டிகள் கூடி மடம் கட்டியதுபோல எல்லாத் தரப்பினரையும் உள்வாங்கி நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு தொடர்பான முயற்சிகள் பாராளுமன்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிர்பார்க்கப்பட்டது போலவே கோவணத்தை உருவிக் கட்டிக்கொண்டு ‘விட்டேனா பார்’ என்று கிளம்பி விட்டன, இந்நாட்டின் தேசாபிமானிகள் என தம்மை அழைக்கும் கோமாளிகள் கூட்டம்! 'ஏக்கீய ராஜ்ஜிய' என்பது 'ஒற்றையாட்சியா', 'ஒருமித்த நாடா' என சிங்கள ஊடகங்களும் தீ வைத்து தீனிபோடத் தொடங்கி விட்டன. பெடரல் முறையை கொண்டு வந்து நாட்டை கூறு போடப்போகிறார்கள் என சமய பிரசங்கிகளும் தொடங்கிவிட்டார்கள்.

குரங்குக்கு புண் ஏற்பட்டால் இலகுவாக ஆறிவிடாது ஏனென்றால் காயம் ஆறிவிடும் போதெல்லாம் அதனை ஆற விடாது சொறிந்து விட்டு அதை மேலும் பெரிதாக்கிக் கொண்டே இருக்கும். இலங்கையின் இனப் பிரச்சினையும் குரங்கின் புண் போன்ற நிலையில்தான் உள்ளது.

சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் சொல்லந்தரமன்று. எல்லாச் சமூகங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் பெரிய வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த தமிழ் சமூகம் என்பது மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இத்தனை நிகழ்ந்த பின்னரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறிய ஒரு சமூகக் கட்டமைப்பையே இலங்கையில் நாம் காண்கிறோம். குறிப்பாக பெரும்பான்மைச் சமூகமும் அதன் தலைவர்களும் யுத்த வெற்றியையே இனப்பிரச்சினைக்குரிய தீர்வு என்ற மனோ நிலையில் உள்ளனர். வெகு சில விரல் விட்டு எண்ணக் கூடிய அரசியல் தலைவர்களும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமுமே பிரச்சினைக்குரிய நாகரிகமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இதனாலேயே அரசியல் அமைப்புச் சீர் திருத்தம்போன்ற முழுநாட்டிற்கும் ஏற்புடைய ஒரு விடயத்தை ஒரு சிறுபான்மை சமூகத்தின் தேவை என்பதாகக் கருதிக் கொண்டு எதிர்க்கின்றனர். இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இத்தகைய ஒரு எதிர்ப்பு பெரும்பான்மை சமூகத்தை உசுப்பிவிட்டு தேர்தல் களத்தில் உதவி செய்யும் என்பது அவர்களுக்கு தெரியும். மஞ்சள் காமாலை நோய் பிடித்தவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறத்தில் தெரிவதைப்லே இனவாத சிந்தனை கொண்டவர்களால் அதற்கு அப்பாற் சென்று சிந்திக்க முடியாது. அதனை செய்யவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை.

மேற்குலகத்தால் மேற்கொள்ளப்படும் ‘சதி’ எனக் கூறி மேற்குலக நாடுகளில் குடியுரிமை கொண்டுள்ளவர்களே இலங்கை பெரும்பான்மைச் சிங்கள மக்களைக் காப்பாற்ற களத்தில் இறங்குகின்றமை வேடிக்கையிலும் வேடிக்கை!

மேற்குலக நாடுகளின் ஆதரவு வேண்டும் அனுசரணை வேண்டும் ஆயுதமும் வேண்டும், நிதியுதவியும் வேண்டும் ஆனால் அவர்களது ஆலோசனைகள் மட்டும் வேப்பங் காயாய் கசக்கும்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் பிரித்தானியரது ஆட்சியே காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் விட்டுச் சென்ற பிரச்சினைகளின் எச்ச சொச்சங்களே இன்று பூதாகரமாக வெளிப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். சரி வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப்போய் எழுபத்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதே அதன் பின்னர் என்ன செய்து கிழித்தீர்கள்? என்று கேட்டால் அதற்கும் பதில் கிடையாது. சுருங்கச் சொன்னால் வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற பெருந்தோட்டத் துறையையும் பாதைக் கட்டமைப்புகளையும் வைத்துக் கொண்டுதான் காலத்தை இன்னும் ஓட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை.

இலங்கை மக்களின் சொந்தப் பணத்தை வைத்து கட்டிய எந்த ஒரு குறிப்பிடத்தக்க பாரிய அபிவிருத்தி திட்டத்தையாவது குறிப்பிட முடியுமா? வெளிநாட்டு மக்களின் வரிப்பணத்தில் உதவியாகவும் கடனாகவும் பெற்று கட்டியவையே அதிகம்.

இலங்கை போன்ற ஒரு அழகிய தீவு பொருத்தமற்ற ஆட்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்றே காண்கிறோம். இரண்டாம் உலகப்போரில் அழியுண்டு போன நாடு ஜப்பான், மலாயாவினால் உதைத்து விரட்டப்பட்ட நாடு சிங்கப்பூர். அந்த வேதனைகளையே சாதனைகளாக்கு சரித்திரம் படைத்த நாடுகள் அவை.

தூரநோக்கற்ற அரசியல்வாதிகளினதும் மாற விரும்பாத மக்கட் கூட்டத்தினதும் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிக்கும்போது சமூகம் துருவ மயப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. சிங்கள சமூகம் தனது நிகழ்ச்சி நிரலுக்குள்ளும், தமிழ் சமூகம் தமது நிகழ்ச்சி நிரலுக்குள்ளும், முஸ்லிம் சமூகம் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் துருவ மயப்பட்டுப் போயுள்ளனர். இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் எவரும் வருவதாயில்லை.

சிங்கள சமூகம் தனது நிகழ்ச்சி நிரலே இலங்கையின் நிகழ்ச்சி நிரல் என நம்புகிறது. ஏனைய சமூகங்கள் அதனை ஏற்று ஒழுக வேண்டும்மென அவர்கள் விரும்புகின்றனர். ‘ஒரே நாடு’, ‘ஒரே மக்கள்’ என அவர்கள் கருதுவது இந்த நிகழ்ச்சி நிரலையே தவிர இந்நாடு பல்லின சமூகங்கள் வாழும், பல்கலாசார சமய விழுமியங்களைக் கொண்ட நாடு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாரில்லை. கட்டாயப்படுத்தலின் பேரில் அவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அது அந்தந்த சந்தர்ப்பங்களின் தேவைகளுக்காக மட்டுமே ஆகும்.

இத்தகைய ஒரு புறச்சூழலில், இனபிரச்சினைத் தீர்வுக்கான எந்த ஒரு அழுத்தமும் பாரியளவில் உள்ளூரிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ இல்லா நிலையில், அரசியல் அமைப்பு மாற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது, தலையை உயர்த்தும்போதே சுட்டு வீழ்த்தப்பட்டு விடும் என்பதே யதார்த்தம்.

இந்நிலையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கின்ற ஒரே வழி பொருளாதார ரீதியில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு முன்னேறுவது ஒன்றேயாகும். வர்த்தக மற்றும் வியாபார முயற்சிகளில் முதலீடு செய்து விஸ்தரித்தல், கல்வி மற்றும் தொழில்வாண்மை முயற்சிகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது, அதிகார மிக்க அமைச்சுப் பொறுப்புகளூடாக சதத்தமது சமூகத்தின் நன்மைகளுக்கு முன்னுரிமை வழங்கல், வர்த்தக ரீதியில் பெறுமதிமிக்க சொத்துக்களை விலை கொடுத்து வாங்குதல், அரசியல் வாதிகள் தமது மக்களின் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதற்குரிய வளங்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிதும் பெறல் போன்ற நடவடிக்கைகளில் முனைந்து செயற்படவேண்டும். பொருளாதார பலமே இனி பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையின் முஸ்லிம் சமூகம் மிகவும் தூர நோக்குடன் இதனை விளங்கிக் கொண்டுள்ளது. தமிழ் சமூகம் அவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

 

Comments