ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “வா வா எப்பிடி பொங்கல் எல்லாம் சிறப்பா நடந்துதோ?”

“எல்லாம் சிறப்பாக் கிடந்துது. கோயிலுக்கு போனனாங்கள். பீச்சுக்கு போனனாங்கள். படம் பாத்தனாங்கள். வேறென்ன?”

“படம் பாத்தனீங்களோ”

“படம் பாத்தாதானண்ண பொங்கள் முழுசாப்போடும். இல்லயென்டா அரைகுறையா முடிஞ்சதைப் போலப் போடுமென்ன.”

“என்ன படம் பாத்தனீ?”

“அண்ண இந்த முறை பொங்கலுன்னு ரெண்டு படம் போட்டவை. ஒன்டு ரஜினியின்ட பேட்ட. மத்தது அஜித்தின்ட விஸ்வாசம். நாங்கள் பேட்டக்குத்தான் போனனாங்கள்.”

“ஏன் விஸ்வாசம்?”

“எங்கட வீட்டு பெடியள் ரஜினியின்ட தீவிர விசிறியள். நான் பேச முன்னால என்னையும் இழுத்துக்கொண்டு போட்டினம்.”

“எப்பிடி படம்?”

“சொல்லி வேலையில்லண்ண. சூப்பராக் கிடந்துது. ரஜினி எங்கட காலத்தில எபிபிடி இருந்தாரோ அதுபோல இருந்தவர்.

“எப்பிடி உன்ட நாய்க்குட்டி?”

“அதையேன் கேட்குறியள்”

“மூன்டு நாளில என்னோட ஷோக்கா பழகிப் போட்டுது. கம் என்டா வருகுது கோ என்டா போகுது”

“அப்பிடியென்டா உன்ட நாய்க்கு இங்கிலிஸ் தான் பழக்குறனீ?”

“அண்ண ஒன்டு சொல்லட்டே.”

“என்ன சொல்லப்போறனீ?”

“நாய்க்குட்டிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தமென்டா வாறவன் போறவனெல்லாம் வா வா என்டு சொன்னவுடன வாலை ஆட்டிக்கொண்டு பின்னால போடும். இங்கிலிஸ் சொல்லிக்கொடுத்தமென்டா யாரும் சொல்லுறது உதுக்கு விளங்காது. நான் சொல்லுறது சரியென்ன?”

“நிறைய அனுபவக்காரன் போல பேசுறனீ. நாய் வளர்த்த அனுபவம் கிடக்கே?”

“இல்லயண்ண இதுதானண்ண முதல் தடவ. ஆனா நிறைய படிச்சிருக்கிறனான்”

“யாரிட்ட படிச்சனீ?”

“என்ன தெரியாத மாதிரி கேக்குறியள். நீங்கள் படிச்ச ஸ்கூலிலதானண்ண நானும் படிச்சனான். அண்ண. சார்லிக்கு நடந்த கதையை நீங்கள் முழுசா சொல்லேல்லயே.”

“ஓமென்ன. சார்லியின்ட கூட்டடிக்கு வந்தவன் மரங்களில தேங்கா பறிக்கிறவன்.”

“தேங்கா பறிக்கிறவனோ உந்த வேலைய செஞ்சவன்?”

“சார்லியின்ட கூட்டுக்கு உள்ளாளயும் வெளியாளயும் போத்திலில கிடந்த.”

“போத்தலில கிடந்த மண்ணெண்ணெய என்டு சொல்லுங்கோ.”

“உது சின்னராசு போத்திலில கிடந்துது பெட்ரோல் என்டும் சொல்லுகினம்.”

“பெட்ரோல் ஊத்தியோ தீ வச்சவன்?”

“டிசம்பர் 31 ஆம் தேதிசரியா இரவு 2 மணிக்கு உந்த சம்பவம் நடந்துது.

“வெடியோட வெடியா நாயையும் கொழுத்திப் போட்டவனென்ன.”

“ஓமப்பா அவனும் லேசுப்பட்ட ஆள் இல்ல போலக்கிடக்கு.சார்லி பெருசா குரைச்சதை கேட்ட வீட்டாக்கள் ஓடி வந்து பாத்திருக்கினம், சார்லியின்ட நிலையை கண்டு அவை பதைபதைச்சிப் போயினம். புது வருசமும் அதுவுமா அவையளுக்கு இப்பிடி ஒரு சோதின வருமென்டு அவை கனவிலயும் நினைச்சுப் பார்க்கேல்ல.”

“கேட்குற எங்களுக்கே நெஞ்சு பதை பதைக்குதண்ண.”

“நீர்கொழும்பில ஒரு மிருக வைத்தியரை அவை தேடியழைஞ்சிருக்கினம். முடிஞ்சா யாரும் தேடித் தாங்கோ உன்டு பேஸ்புக்கிலயும் பதிவு போட்டிருக்கினம். உந்த பேஸ்புக் பதிவை கண்ட லண்டனில உள்ள ஒருத்தர் இலங்கையில உள்ள தன்னோட நண்பருக்கு விசயத்தை சொன்னவர். அவர் கொழும்பில உள்ள மிருக வைத்தியசாலைக்கு விசயத்தை சொல்ல அவை நேரடியா நீர் கொழுமபுக்கே போய் சார்லிய கொழும்புக்கு கூட்டி வந்திருக்கினம். ஒரு பேஸ் புக் பதிவாலதான் இது அத்தனையும் நடந்திருக்குது.”

“ஆனா சார்லியின்ட கூட்டுக்கு நெருப்பு வச்சவன பிடிக்கேல்லயே?”

“சார்லியின்ட சொந்தக்காரர் உது பத்தி பொலிஸில முறைப்பாடு செஞ்சவராம்.”

“பொலிஸல வந்தவையே.”

‘வராமலென்ன வந்து நெருப்பு வச்சவனென்டு சொல்லப்படுகிறஆளையும் பிடிச்சுக் கொண்டு போயிருக்கினம்”

“நாலு அடியும் போட்டிருப்பினம்.”

“போடாமலென்ன நல்லா சாத்தியிருப்பினம்.”

“உது போதாதண்ண. அவனின்ட கால் கைய முறிச்சீருக்க வேணம்.”

“விசயத்தை கேள்விப்பட்ட மிருக வைத்தியசாலை ஆக்கள் உடனடியா நீர் கொழும்புக்கு போய்சார்லிய கொழும்புக்கு கொண்டு வந்திருக்கினம்.; சார்லிய காப்பாத்த அவையள் முழு முயற்சி எடுத்திருக்கினம். ஆனா ஒன்டும் சரி வரேல்ல. ஜனவர் ஒன்டாம் திகதி பகலில.”

“சார்லியின்ட கதை முடிஞ்சுது என்ன?”

“சார்லியின்ட மரணத்தால கவலைப்பட்ட உன்னையும் என்னையும் போல ஆக்கள் போன கிழமை மிருகங்கள் மேல காருண்யம் காட்டுங்கோ என்டு கூறி கொழும்பிலயும் நீர்கொழும்பிலயும் ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்கினம்.”

“செய்யத்தான வேணும். அதுவும் உயிரென்ன.”

“உதோட இன்னொரு விசயமும் வெளியில வந்து கிடக்கு.”

“அது என்னண்ண?”

“மிருக நலன் தொடர்பான சட்டமூலத்தக்கு 2016 ல அமைச்சரவையின்ட அங்கீகாரம் கிடைச்சுது. சரியே. ஆனா உதை இன்னும் பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கேல்ல உதை உடனடியா சட்டமாக்க வேணுமென்டு மிருகங்களை பாதுகாக்கிற அமைப்புகள் குரலெழுப்ப ஆரம்பிச்சுப்போட்டினம்.”

“நல்ல விசயமென்ன.”

“நேத்து நாயைப்பத்தி பத்திரிகையில இன்னொரு விசயம் பாத்தனான்.”

“நாய் விசயமே.”

“ஒமப்பா பொலன்னறுவை திபுலாகல பகுதியில ஒரு நாயின்ட கழுத்தில யாரோ தாயத்து கட்டி விட்டிருக்கினம்.”

“என்னது நாயின்ட கழுத்தில தாயத்தோ?”

“ஓமப்பா யாரும் கட்டிவிட்டினமோ இல்ல தன்ட கழுத்தில கிடந்ததை தூக்கி நாயின்ட கழுத்தில போட்டு விட்டவையோ என்டு தெரியேல்ல.”

“எப்பிடி இருந்தாலுமண்ண நாய்க்கு நல்லது நடக்க வேணுமென்ட எண்ணத்திலதான் உது நடந்திருக்கு என்ன?”

“பகிடியான விசயம் ஆனா நல்ல விசயமென்ன. அது சரி உன்ட நாய்க்கு என்ன பெயர் வச்சிருக்கனீ”

“வேறென்ன சார்லிதான். மனிசரின்ட கோப தாபங்களில தன்னோட உயிரை விட்ட நாயை மறக்கேலுமே”

“என்ட கணக்கில பிஸ்கட் இறைச்சி வாங்கித் தாறனான்.”

“வேறென்ன நான் கவனமா பாத்துக்கொள்ளுறனான்.”

Comments