ஜான்சி ராணியாக தோன்றும் 'மணிகர்ணிகா' | தினகரன் வாரமஞ்சரி

ஜான்சி ராணியாக தோன்றும் 'மணிகர்ணிகா'

இம்மாத இறுதியில் சினமா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவன வெளியீடாக இலங்கையில் திரையிடப்படவுள்ள மணிகர்ணிகா என்ற ஹிந்தி மற்றும் தமிழ்மொழிப் படம் இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனை ஜான்சி ராணியின் கதையாகும். ஜான்சி ராணி பின்னர் இந்திய சுதந்திரப் போரின்போது பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வின் வடிவமாக சித்தரிக்கப்பட்டதோடு சுதந்திரத் தாகம் கொண்ட இந்தியப் பெண்களின் போராட்டக் குணத்தின் குறியீடாகவும் உருவகப்படுத்தப்பட்டார்.

சமீப காலமாக பாகுபலி போன்ற சரித்திர படங்களுக்கும், பயோபிக் படங்களுக்கும் இந்தியாவில் வரவேற்பு இருப்பதாலும், பா.ஜ.க அரசின் இந்துமயக் கொள்கையின் விளைவாக அந் நாட்டின் இந்தி வலயத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்து தேசியவாத உணர்வின் காரணமாகவும் தேசப்பற்றை பறைசாற்றும் திரைப்படங்களுக்கு ஒரு மவுசு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தியிருக்கும் தயாரிப்பாளர்கள், ராணி லட்சுமி பாய் என அழைக்கப்படும் ஜான்சி ராணியின் கதையை பிரமாண்டமான படமாக எடுத்திருக்கிறார்கள். இப்படம் இந்தியிலும் தமிழிலும் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் பெயர் மணிகர்ணிகா. இது தான் லட்சுமிபாயின் இயற்பெயர். இவர் 1828ம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி காசியில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது வீட்டாரினால் ‘மனு’ என செல்லமாக அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை, துப்பாக்கி சுடுதல் என்பனவற்றில் பயற்சி பெற்றார். 1842ம் ஆண்டு ஜான்சி என்ற ஊரின் மகாராஜாவான ராஜா கங்காதர் ராவ் நிவால்கர் என்பவரை அவர் திருமணம் செய்து, ஜான்சியின் ராணியாகிறார் மணிகர்ணிகா. திருமணத்தின் பின்னரேயே லட்சுமிபாய் என்ற பெயர் மணிகர்ணிகாவுக்கு சூட்டப்படுகிறது.

அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல், அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக, அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சினை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் திகதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லோர்ட் டெல்ஹவுஸி.

ஜான்சி ராணி தத்து எடுத்ததை பிரிட்டிஷ் கவர்னர் விரும்பாததுற்கு காரணம் இருந்தது. ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ராஜா மற்றும் ராணியின் மரணத்தின் பின்னர் ஜான்சி நாடு ஆங்கிலேயருக்கு சொந்தமாகிவிட வேண்டும். தத்து எடுத்து வளர்த்த ஆண் குழந்தை இருப்பதால் லட்சுமிபாய்க்குப் பின்னர் வாரிசு உரிமை அக்குழந்தைக்கு சென்று விடும். இங்கே ஆரம்பிக்கும் மோதல் ஜான்சி மீதான ஆங்கிலேயரின் படையெடுப்பாகவும், அவர்களை எதிர்த்து ஜான்சிராணி ஆண் உடையில் போர் புரிந்து மரணிப்பதாகவும் முடிவடைகிறது.

இப் படத்தில் ஜான்சிராணியாக நடித்திருப்பவர் கங்கணா ரனாவத். இவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான். 'தாம்தூம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். மணிகர்ணிகாவை இயக்கியிருப்பவர் கிரிஷ். சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் என்ற படத்தை இயக்கியவர் இவர். இவருடன் இணைந்து கங்கணாவும் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மேலதிகத் தகவல். கங்கணாவுடன் அதுல்குல்கர்னி, ஜுஸு செய்குப்தா, சுரேஷ் ஒபரோய் என்போரும் நடித்துள்ளனர்.

ஒரு தேசபக்தி படத்தில் நடிக்கவும் அதை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தான் பெருமைபடுவதாகவும் அதுவும் இந்தியாவெங்கும் அறிமுகமான ஜான்சி ராணி பாத்திரத்தில் தான் நடிப்பது ஒரு பாக்கியமே என்றும் இவர் கூறியிருக்கிறார். எனவே மணிகர்ணிகா ஒரு கங்கணா படமாகவே இருக்கும் என நம்பலாம்.

இப்படம் பிரமாண்டமாக பெரும் பட்ஜட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. யுத்த கள காட்சிகள் பிரமாண்டமாக உள்ளன. தொய்வின்றி அடுத்தடுத்து காட்சிகள் நகர்வதால், ரசனை குறையாமல் படம் பார்க்க முடியும். இது பெண்களுக்கான வீரம்செறிந்த படம் என்றும் உறுதியாகச் சொல்லலாம்.

 

- சத்யா

Comments