மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்; 2 வாரத்தில் சட்ட திருத்தம் | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்; 2 வாரத்தில் சட்ட திருத்தம்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களைப் பழைய முறையில் நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அடுத்த இரண்டொரு வாரங்களுக்கிடையில் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சிக் செயலாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், முதலில் திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கால தாமதமின்றி மாகாண சபைத்தேர்தல் நடைபெற வேண்டுமென்பதில் சகல தரப்புகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. ஆனால், புதிய முறையில் நடத்துவதற்கு எல்லை நிர்ணய விவகாரம் பெரும் தடையாக உள்ளது. இந்த நிலையில் பழைய விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு

பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்த 52 நாட்களின்போது மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சராக இருந்த பைசர் முஸ்தபா பழைய முறையில் மாகாண சபைகள் தேர்தலைத் நடத்துவதற்கான திருத்தச் சட்ட மூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

அந்த சட்ட மூல வரைபு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அன்று இதனைத் தயாரிக்கும்போதே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. ஏனைய பல கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

சட்ட மூலத்துக்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ளப்படும்.

எனவே, இனிமேலும் மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போட வேண்டியதில்லை. அரசாங்கமோ ஐக்கிய தேசியக் கட்சியோ மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் எண்ணத்துடன் ஒரு போதும் செயற்பட்டது கிடையாது. ஆனால், சட்டத்திற்கமையவே அது நடத்தப்பட வேண்டுமென்பதையே தெரிவித்து வந்தோம் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Comments