வடக்கில் படையினர் வசமிருந்த மேலும் 1200 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் படையினர் வசமிருந்த மேலும் 1200 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளுள் மேலும் சுமார் 1,200 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை திங்கட்கிழமை விடுவிக்கப்படுகின்றன.

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய வடக்கில் தனியார், அரச காணிகளை விடுவிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் காணிகளை விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி படைத்தரப்பினருக்குப் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், அரச காணிகள் நாளை விடுவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நாளை திங்கள் முதல் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் போதைப்பொருள்தடுப்பு வாரம் ஆரம்பமாகிறது.

நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியை பாடசாலை போதைப்பொருள் தடுப்புவாரம் பிரகடனமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நாளை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின்போதே காணி விடுவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு அரச அதிபர், மன்னார் அரச அதிபர், வவுனியா அரச அதிபர், ஆகியோருடன் கிளிநொச்சி இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரெல்ப் மற்றும் முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில் யாழ். கைதடி மேற்கு, தெல்லிப்பழை ஜே 250 கிராம சேவகர் பிரிவில் 19.63 ஏக்கர் தனியார் காணியும்,

யாழ். பலாலி தெற்கு, தெல்லிப்பளை ஜே 252 கிராம சேவகர் பிரிவில் 23.50 ஏக்கர் தனியார் காணியும், யாழ். குடத்தனை, மருதங்கேணி ஜே 420 கிராம சேவகர் பிரிவில் 1.47 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய பச்சிலைப்பள்ளி, முகாவில் கே.என் 80 கிராம சேவகர் பிரிவில் 13.00 ஏக்கர் தனியார் காணியும்

கிளிநொச்சி, பூநகரியில் 194 ஏக்கர் அரச காணியும், ஜயபுரம் வடக்கு நாச்சிகுடாவில் 278 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, உடையார் கட்டுக்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பகுதியில் 119.79 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பரப்புக்கடந்தான் பகுதியில், 3 ஏக்கர் அரச காணியும் மாந்தை மேற்கு, பெரிய மடு, காயாநகர் பகுதியில் 1.5 ஏக்கர் அரச காணியும் மன்னார், வௌ்ளான்குளம் பகுதியில் 500 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தின் வெண்கலசெட்டி குளம், ஆண்டான் புளியங்குளம் பகுதியில் வெவ்வேறு மூன்று இடங்களில் 40.74 ஏக்கர் அரச காணிகளும்

காத்தார் சின்னக்குளம் பகுதியில் 7.64 ஏக்கர் தனியார் காணியும், வவுனியா,நொச்சிமோட்டையில் ஒரு ஏக்கர் தனியார் காணியும், வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் இரண்டு ஏக்கர் தனியார் காணியும், வவுனியா வடக்கு, மருதோடையில் மூன்று ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படுகின்றன.

 

Comments