வாக்குமூலங்கள் | தினகரன் வாரமஞ்சரி

வாக்குமூலங்கள்

என்னாப்பா எல்லாத்துக்கும் சொல்லியனுப்பியாச்சா.. அட நா ஒண்ணு, இப்பவெல்லாம் தான் போன்லயே எல்லாத்துக்கும் தகவல் சொல்லிடலாமே..?” என்று அவசர கதியில் உளறிக் கொண்டே மாலதியின் இறுதிச் சடங்கிற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தான் ராமராசு.

தோட்டத்துப் பாதையெங்கும் வெள்ளைக் கொடி கட்டிக் கொண்டிருந்தார்கள் சிலர். “ஏன்டா... நேத்து பொடியை செக் பண்ணி டொக்டர்மார் என்ன சொன்னாங்களாம்”‘வொலிபோல்’ வேலன் கேட்க “தெரியலடா, எல்லாம் கமுக்கமா வைச்சிட்டாய்ங்க. வெளிய யாருக்கும் எந்த உண்மையும் தெரியலடா” என்றான் சோமன்.

மாலதி கொழும்பில் வேலைக்குப் போன இடத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென்று இறந்துவிட்டதாகத் தகவல் வரவே, எல்லோரும் கொழும்புக்குக் கிளம்பிப் போய் அவளது பிரேதத்தைக் கொண்டு வந்தார்கள்.

ராமராசு, மாலதியின் அக்காவின் கணவன். மேல் டிவிசனில் கங்காணியாகவும் தலைவராகவும் இருக்கிறான். அவனும் கொழும்புக்குப் போய் பிரேதம் கொண்டு வந்தவர்களில் ஒருவன் தான். ஆனால், அவன் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.

கொழும்பில் நடைபெற்ற பொலிஸ் விசாரணையில் என்ன சொன்னார்கள் தெரியுமா?

***

“நல்லா தானேடி இருந்தா அவ, எப்படி செத்தா?” என்று பணிய லயத்து மாரியாயி, காமாட்சியிடம் கேட்க,

“ஆமாடி, திமுசுகட்ட மாதிரி இருந்தா, நல்லா அழகாவும் இருந்தா இல்லையா, கொழும்பில் சும்மா உடுவாய்ங்களா? அவ வேலை செய்த இடத்தில இருந்த முதலாளியோட தொடுசாம். அதான் அந்த முதலாளியோட பொஞ்சாதி கண்டு அடிச்சதுல எக்குதப்பா எங்கனயோ பட்டு அங்கயே அவுட்டாயிட்டாளாம்” வெற்றிலையை மென்றுகொண்டே வாயின் ஓரத்தில் எச்சில் வடிய, சுவை சேர்த்தப்படி கதையை விளக்கினாள் காமாட்சி.

“அதானே?, பார்த்தேன் அதுசரி.. அப்ப பொலிஸ்ல அந்த மனுசியைப் புடிச்சு அடைச்சிருப்பாங்க தானே?” என்று சந்தேகத்தை அவிழ்த்துவிட்டாள் மாரியாயி.

“அடப்போடி, அதெல்லாம் பெரிய இடம்டி. ‘நோட்டா’ல அடிச்சு பொலிஸ் வாயை மூட வெச்சிடாங்களாம். காசுக்கு மசியாதவன் எவன்டி இருக்கான்?” – காமாட்சி “இருக்கும், அதான் அவளோட அக்கா புருசன் கூட யாருகிட்டயும் வாயை தொறக்கல, அவனுக்கும் ‘வாக்கட்ட’ போட்டிருப்பாய்ங்க” என்று கூறிக்கொண்டே நகர்ந்தாள் மாரியாயி.

***

“போன சித்திரைக்கு மாலதி வந்திருந்தாள் இல்ல, அப்பவே அவ ஒரு மாதிரி தான்மா இருந்தா. சிலவேளை கர்ப்பமா இருந்திருப்பாளோ?” தனது சந்தேகத்தைச் சந்தையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் முத்துசாமியிடம் விசாரித்தான் ஆறுமுகம்.

தலையிலிருந்த சின்ன மூட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, ஆறுமுகத்தின் கிட்ட வந்த முத்துசாமி,“அதெல்லாம் சொன்னா வெக்கக்கேடுடா” என்றான்.

ஆறுமுகம் கண்கள் அகல விரிய “என்னடா குண்ட தூக்கி போடுற, உனக்கு ஏதும் வெவரம் தெரியுமா,” என்று கேட்டான்.

“அவ, கொழும்புல வேலை செஞ்சாயில்ல, அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுல ஒரு பொடியன் இருந்தானாம். அவன் இவள செட்பண்ணியிருக்கான்.

மாலதி வேலை செஞ்ச வீட்டுக்காரங்க ஏதோ ஒப்பிஸ்ல வேலையாம். அவங்க வேலைக்கு போனதும், இவன் இவ இருக்கிற வீட்டுக்கு வந்துருவானாம். அப்புறம் அப்படியே ‘கசமுசாவாகி’ இவள் கர்ப்பமாகிட்டாளாம்” என்றான் முத்துசாமி.

“ம்..ம் அப்புறம்?” – ஆறுமுகம்

“அப்புறம் என்னா.. அந்தப் பொடியன கட்டிக்கச் சொல்லி கேட்டிருக்கா... அவன், எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, கர்ப்பத்தை கலைச்சிடு. எனக்கு வேற இடத்தில பொண்ணு பாத்துட்டாங்க, சும்மா பன்னுக்கு லவ் பண்ணோம்; கல்யாணம் எல்லாம் கட்ட முடியாதுன்னுட்டானாம். அதான் இவ நஞ்சு குடிச்சுட்டாளாம்” என்று முத்துசாமி சொல்ல, ஆறுமுகம் வாயடைத்துப் போனான். “இந்தக் காலத்துல யாரை நம்பறது...?” என்று எண்ணிக்கொண்டான்.

***

மாலதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. லயத்து சனமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினாலும் எல்லோருக்குள்ளும், புதினம் அறியும் ஆவல் மட்டும் குறையவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலதியின் பெற்றோர் மட்டும் அழுது ஓய்ந்து கிடந்தனர். அவளின் அக்காவும் தம்பியும் கூட ஒரு மூலையில் இருந்து, வருபவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், யாருமே அவர்கள் சொல்லும் கருத்துக்களை நம்ப தயாராக இல்லை. அழகான இருபத்தியொன்றே வயதான மாலதியின் மரணம், பல கதைகளை றெக்கை கட்டி பறக்க வைத்துக் கொண்டிருந்தது.

தோட்டத்துத் தலைவர்களும், தொண்டர்களும் அவ்வப்போது தலைகாட்டி தங்களாலியன்றதை செய்து கொண்டிருக்க, தொங்கவீட்டு செங்கோடன் மட்டும் ரொம்ப பிஸி. ஆம் கேதத்திற்கு வந்தவர்களில் பல ஆண்கள் செங்கோடன் வீட்டுக்குள் நுழைந்து வாய் நனைத்து திரும்பினர்.

ஆம், அவருக்குத்தான் தோட்டத்தில் யார் செத்தாலும் லாபம். ஏனென்றால் மரண வீட்டுக்கு வருபவர்களின் சோகம் தீர்க்கும் பானம் அவர் வீட்டில் நிறையவே இருந்தது.

‘கொள்ளிக்குடம்’ தயார் செய்து கொண்டிருந்த அப்புச்சியை கோடிப்பக்கமாக வரச்சொல்லி சமிக்ஞை காட்டினார் செல்வராசு.

அப்புச்சிக்கு விளங்கிய, சட்டி வடிவில் கட்டிய குச்சியை அப்படியே வைத்துவிட்டு அவசரமாக போய் செல்வராசு நீட்டிய சாராயத்தை லபக்கென வாயில் ஊத்திக் கொண்டு வந்து வேலையை ஆரம்பித்தார்.

“தண்ணி சுத்தமில்ல, என்னமோ கலந்துட்டாய்ங்க” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டே வேலையைச் செய்தாலும்,“இன்னும் யாராவது வந்தால் இன்னொரு கால் போத்தல் வாங்கி அடிச்சிடலாம்” என்று நினைத்துக் கொண்டார்.

***

பிள்ளைக்காம்பறாவில் வேலை செய்யும், லீலாவதி மிஸ் கேதவீட்டுக்கு வந்தாள். அவளுக்கு மாலதி நல்ல நண்பி. எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் ஏதாவது வாங்கி வருவாள்.

மணிக்கணக்காக அவளிடம் பேசிக் கொண்டிருப்பாள். இப்போது அவளின் மரணச்செய்தி கேட்டு மனம் உடைந்து விட்டாள். லீலாவதி சிங்களமானாலும் இந்தத் தோட்டத்தில் யாரும் அவளை அந்நியமாக நினைப்பதில்லை.

லீலாவதி, மாலதியின் தேகத்தின் அருகில் வந்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து நீர் பொல பொலவென வழிந்து கொண்டிருந்தது.

லீலாவதியை, கட்டிப்பிடித்து மாலதியின் அம்மா “பாத்திங்களா மிஸ் என் மகள? வேலைக்கு போயிருந்தாள், இப்ப பொணமா வந்து கெடக்கா, யாருக்கும் எந்தக் கெட்டதும் செய்யாத என் மகள கடவுள் இப்புடி சோதிச்சிட்டானே” என்று அழுதாள்.

லீலாவதி மெதுவாக அந்தத் தாயிடம் இருந்து விடுபட்டு வாசலுக்கு வந்தாள். அவளால் வளர்க்கப்படும் பல பிள்ளைகளும் “நம்ம மிஸ் வந்திருக்காங்க” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே அவளைச் சுற்றி வந்தனர்.

“வாங்க மிஸ் டீ குடிக்கலாம்” என்று கோவில் லயத்து மீனாட்சி அவளை மூன்றாம் வீட்டுக்கு அழைத்துப் போனாள்.

அங்கே இன்னும் சிலர், தேநீர் குடித்தப்படி மாலதியின் மரணம் எப்படி நிகழ்ந்ததென்று பேசிக் கொண்டிருந்தனர். லீலாவதியைக் கண்டதும் அவர்கள் பேச்சைத் திசைதிருப்பி வேறு ஏதோ ஆரம்பித்தனர்.

இரண்டு பிஸ்கட்களை எடுத்து கடித்தபடி, பால் போடாத சாயத்தேநீரை அருந்திவிட்டு வெளியே வந்த லீலாவதியை மீனாட்சி சன்னமான குரலில் அழைத்துக் கோடிப்பக்கமாகப் போனாள். அவளுக்கும் யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டுமென்று மனது குறு குறுத்தது.

“ஒனக்கு தெரியுமா ஆயா, இந்த புள்ள ஏன் செத்து போச்சினு...?” மீனாட்சி கேட்க, லீலாவதி “ம் ”என்று தலையசைத்தாள்.

மீனாட்சி வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலையை ‘புளீச்’ என்று துப்பிவிட்டு ஆரம்பித்தாள்.

“அது மிஸ், அவ கொழும்புல வேலைக்கு போறேன்னு சொல்லிட்டுப் போனாலும், அங்க எங்கையும் வேலை இல்லையாம். ஏதோ ஓட்டல்ல ரூம் போட்டு வார போறவங்களை கவனிக்கிற வேலையாமே...” வாய் கூசாமல் அவிழ்த்து விட்டாள். அவளுக்கும் சின்னையா கங்காணிதான் சொல்லியிருக்கிறான் இந்தக் கதையை!

மீனாட்சி லேசு பட்டவளில்லை. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வல்லமை கொண்டவள்தான். லீலாவதிக்குக் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு மௌனமாக கதை கேட்டாள்.

“ஒங்களுக்கு வெளங்குதா ஆயா, அடிக்கடி ஆம்பளைங்கள சந்திச்சதால, பலதடவை கர்ப்பமாகி களைச்சிட்டாளாம். அப்புறம் என்னமோ ‘எய்ட்சாமே’ அந்த வியாதியாம். அதான் டொக்டர்மாரே பாத்துட்டு ‘வெச ஊசி’ போட்டு கொன்னுட்டாங்களாம்” என்றாள் மீனாட்சி.

“ச்சி... நீங்க எல்லாங் இப்புடி பேசுறதி... பாவம் அவங்க, ஒங்கள விட அவங்கள பத்தி எனக்கு தெரியும். சும்மா, பொய்கதை சொல்லி அவங்கள அசிங்கப் படுத்த வானாங்” என்று கன்னத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு நகர்ந்தாள் லீலாவதி.இவங்கள்லாம் மனிசங்களா? என்று சலித்துக்கொண்டாள் லீலாவதி. என்றாலும் அவளுக்கும் உண்மை என்னவென்று தெரியவில்லை. ஓர் இளம் பெண்ணின் மரணம் எப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

***

அப்போது கோப்பிரட்டைத் தாண்டி, கோவிலைத்தாண்டி வேகமாக வந்த வான் ஒன்று லயத்து ‘மொடக்கு’ கிட்ட வந்து நின்றது.

அதிலிருந்து நான்கைந்து பேர் இறங்கி கேத வீட்டை நோக்கி வந்தனர். “டேய்... இந்தா கொழும்புக்காரவுக வந்துட்டாங்க, அவங்களுக்கு நாற்காலி கொடுங்க, குடிக்க ஏதாவது கொடுங்கப்பா...” என்று ராமராசு சொல்ல, இளைஞர்கள் வந்தவர்களை அழைத்தனர்.

“அந்தா முன்னுக்கு வர்றாரே.. அவர்கிட்டதான் மாலதி அக்கா வேலை செஞ்சா..!” என்று யாரோ பின்னாலிருந்து சொன்னது ராமராசு காதில் கேட்டது. திரும்பிப் பார்த்து “அவருகிட்ட இல்ல, அவருக்கு பின்னால வர்றாரே பெரியவரு அவர்கிட்ட தான் வேலை செஞ்சது, என்று தொப்பையை சுமந்து கொண்டு கைத்தாங்கலாக இருவர் பிடித்துக் கொள்ள, லயத்து படிக்கட்டில் இறங்க முடியாமல் இறங்கி வந்தவரை காட்டி சொன்னான் ராமராசு.

வந்தவர்களை ராமராசு அழைத்து வந்து நாற்காலி போட்டு உட்கார வைக்க, அவர்கள் முதலில் மாலதியின் பிரேதத்தைப் பார்த்துவிட்டுவர உள்ளே சென்றனர்.

சில நிமிடங்களில் பிரேதத்தின் முன் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்து அமர்ந்தனர். அந்தத் தொப்பை ஆசாமியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவர் பெயர் ஜயதிலக, கொழும்பில் பெரிய தொழில் அதிபர். அவர் வீட்டில் தான் மாலதி வேலை செய்தாள்.

அவர்கள் ஏதாவது இரகசியம் பேசுவார்கள் என்று பக்கத்தில் சிலர் காதை குடைந்து கூர்மையாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

கீதா என்ற பாடசாலை மாணவி அவர்கள் எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். தேநீரை வாங்கிக் குடித்துக் கொண்டே கூடவந்தவருடன் ஜயதிலக பேசினார்.“என்னோட மகள் மாதிரி அவளை பார்த்துக்கொண்டேன். நல்ல பொண்ணு தங்கமான புள்ள அவளுக்கு இப்படி ஒரு வியாதி வந்திருக்க கூடாது.” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே, சிங்களத்தில் கூறினார்.

கூட வந்திருந்த அவரின் நண்பர் மிகவும் வேதனையுடன் கேட்டுக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார்.

அவளுக்கு ‘புற்றுநோய்’. நோய் முற்றும் வரை அவளுக்குத் தெரியாமலே இருந்திருக்கிறது. கடைசியில் டொக்டர்கள் கண்டுபிடித்த போது, நோய் முற்றிவிட்டது. நானும் எவ்வளவோ செலவு பண்ணி பார்த்தும் சுகமாக்க முடியல.. அநே.. மக.. துவ..” என்று தன்னை மறந்து அழுதார்.

கூட இருந்த பலருக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. என்றாலும் கூட இன்னமும் சிலர் வேறு விதமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பொழுது போக வேண்டாமா...?

Comments