சிக்கனம் ரொம்ப முக்கியம் ஐயா! | தினகரன் வாரமஞ்சரி

சிக்கனம் ரொம்ப முக்கியம் ஐயா!

சிக்கனமாக எப்படி வாழலாம் என்பதை அனுபவ ரீதியாக ஒவ்வொரு பெருந்தோட்ட மக்களும் எதிர்காலத்தில் உணர்ந்து தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பிறப்பு முதல் இறக்கும் வரையிலான காலப்பகுதியில் மனிதன் பல்வேறு வகையான பருவங்களைக் கடந்து செல்கிறான். குழந்தையாக, பிள்ளையாக, சிறுவனாக, இளைஞனாக, வயது முதியவராக வாழ்ந்து இறக்கின்றான்.

இதில் எந்த பருவத்தில் (வயதில்) சிக்கனமாக வாழ வேண்டும் என்பது ஒரு புறம் இருப்பினும் வாழ வேண்டிய வயதில் வாழ வேண்டும். சிக்கனம் என்பது ஒரு மனிதனின் சந்தோஷங்களை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வெறுமனே வாழ்வது என்பது அர்த்தமில்லை. சிக்கனம் என்பது மனிதன் வாழும் காலத்தில் தேவையற்ற வீண் செலவுகளையும் வீண் விரயங்களையும் கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பதே.

வாழ்க்கையில் சிக்கனமாக வாழ்வதற்கு (சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்கு) சில ஒழுங்கு விதிகளும் சுய கட்டுப்பாடுகளும், சுய ஒழுக்கமும் ஒருவனுக்கு வேண்டியுள்ளது. இந்த ஒழுங்கு விதிகளும் சுய கட்டுப்பாடுகளும் எல்லை மீறும் போது, தானாக தேவையற்ற விடயங்கள் மனித வாழ்க்கையில் புகுந்துவிடுகின்றன. இந்த தேவையற்ற விடயங்களை ஒருவன் எவ்வாறு தவிர்த்து வாழ்க்கையில் சிக்கனமாக வாழலாம் என்பதற்கு பல விடயங்களைச் சுட்டிக்காட்டலாம்.

வாழ்க்கையில் மது பழக்கத்திற்கு ஒருவன் உட்பட்டிருந்தால் அது அவருடைய வருமானத்தில் அதிகளவு பங்கை தினமும் மதுவிற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெருந்தோட்டப் பிரதேசத்தில் வாழும் மக்களில் ஒரு சிலர் தங்களுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மதுவிற்காக தினமும் செலவு செய்கிறார்கள் என்பது கண்கூடு.

எனவே மது பழக்கத்தை முற்றாக கைவிட வேண்டும். இதில் கிடைக்கும் அற்ப சொற்ப இன்பத்திற்காக தங்களுடைய உடலுக்கும், உள்ளத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதோடு தன்னுடைய குடும்பமும் சீரழிந்து சின்னப் பின்னாமாகின்றது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மதுவிற்காக செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவும், ஒருவனுடைய வாழ்க்கையில் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், பிள்ளைகளின் கல்விக்காகவும், செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் தினமும் 200 ரூபா மதுவிற்காக செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியாயின் மாதம் 6000 ரூபா படி வருடத்திற்கு 72,000 ரூபாவாகும். இதனையே தினமும் சேமித்தால் வருடத்திற்கு 72,000 ரூபா அந்த குடும்பத்தின் சேமிப்பாக இருக்கும்.

எனவே தீபாவளிப் பண்டிகை முற்பணத்திற்காக தோட்ட நிருவாகத்திடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அத்துடன் பிள்ளைகளின் பாடசாலை செலவுகளையும் கடன் படாமலேயே தானே செய்திருக்கலாம். எனவே பெருந்தோட்ட மக்கள் தினமும் சேமிக்கும் பழக்கத்தை தன் குடும்பத்தில் பழக்க வேண்டும்.

வீட்டில் நடைபெறுகின்ற சகல நிகழ்வுகளிலும் ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். உதாரணமாக சிலர் கடன் பெற்று திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாள் விழாக்கள், காதுகுத்து, வலைக்காப்பு, திருவிழா, பண்டிகைகள், தீபாவளி, பொங்கல், ஆடி பதினெட்டு போன்றவற்றிக்கு செலவு செய்கின்றார்கள்.

இச்செலவுகளை செய்வதற்கு முன் அக்கடனை திருப்பி செலுத்த முடியுமா? என்று யோசித்தே கடன் வாங்க வேண்டும். தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக கடன் வாங்கும் ஒரு கலாசாரம் மலையகப் பிரதேசத்தில் தலைவிரித்து ஆடுகின்றது. குறிப்பாக நுண்கடன் என்ற போர்வையில் பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சில குழுக்கள் இம்மக்களுக்கு வட்டியுடனான கடன்கனை கொடுக்கின்றது. காசு மட்டுமல்லாமல் சில வகையான பொருட்களும் கடனுக்கு வழங்கப்படுகின்றது. இக் கடனை மாதச் சம்பளத்தில் வட்டியுடன் மீளச்செலுத்த வேண்டும். அத்துடன் கடனை கட்டமுடியாத சந்தர்ப்பங்களில் அக்கடனைக் அடைப்பதற்காக இன்னுமொரு புதிய கடனை இம் மக்கள் வாங்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள். கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனிலே இறக்கும் மக்களாகவே இன்றும் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகிறார்கள்.

இம்மக்கள் திட்டமிட்டு தமது வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய பழக வேண்டும். கடன் வாங்கி தனது திருமணத்தை மிக ஆடம்பரமாக செலவு செய்து விட்டு பின்னர் பல வருடங்களுக்கு வட்டியுடன் அக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பிரிந்த குடும்பங்கள் பல உள்ளன.

வீட்டில் மின்சார பாவனையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மின் உபகரணப்பாவனையை குறைத்துக் கொள்ள வேண்டும். நீரைப் பயன்படுத்தும் போதும் மிக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும் போதும் விலைகளை முன்கூட்டியே கேட்டு விட்டு தரமானப் பொருட்களை வாங்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் பொருட்களை வாங்கக் கூடாது. உதாரணமாக, கோழி இறைச்சி ஒரு கிலோ 500 ரூபா என வைத்துக் கொள்வோம். அப்படியே வாங்கினாலும் ஒரு நேரம் மட்டுமே குடும்பத்தில் உள்ளவர்கள் உண்ண முடியும். அதே நேரத்தில் அந்த 500.00 ரூபாய்க்கு எத்தனை கோழி முட்டைகள் வாங்கலாம் என சிந்தித்து பொருட்களை வாங்க வேண்டும். சீனி, கோதுமை மா, மிளகாய் போன்றவற்றின் பாவனையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கெளபி, பயறு, உழுந்து, கடலை போன்ற தானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு pocket money என தினமும் கொடுத்து பழக்கக்கூடாது. கூடுமானவரை தாய் பிள்ளைகளுக்கு வீட்டுச் சாப்பாட்டையே கொடுத்துப் பழக்க வேண்டும்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு குறிப்பாக க.பொ.த சாதாரணத் தரம், உயர் தரம் படிக்கும் பிள்ளைகளுக்கு கைத் தொலைபேசி வாங்கிக் கொடுப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். எனவே வாழ்க்கையில் சேமிப்பு என்பது வாழும் காலத்தை நீடித்துக் கொள்வது என்பதாகும். சிறுக சிறுக சேமித்து எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

Comments