இவ்வாரம் ஆரம்பமாகும் இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் | தினகரன் வாரமஞ்சரி

இவ்வாரம் ஆரம்பமாகும் இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

இவ்வருட ஆரம்பத்திலேயே இலங்கை கிரிக்கெட் அணி கடினமான மூன்று தொடர்களில் பங்குகொண்டு விளையாடி வருகின்றது. இலங்கை அணயின் முதல் தொடர் கடந்த வாரம் முடிவுற்றது.

நியூசிலாந்துடனான அத்தொடரில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற ரீதியிலும் ஒருநாள் தொடரை 3-0 என்ற ரீதியிலும், ஒரே ரி/20 போட்டியையும் இழந்த நிலையில் இவ்வாரம் ஆரம்பமாகும் இரண்டு டெஸ்ட போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ளது. அதற்கடுத்து பெப்ரவரி- மார்ச் மாதங்களில் தென்னாபிரிக்காவில் மூவகைப் போட்டிகளைக் கொண்ட முழுமையான தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை, அவ்வணிக்கு எதிராக இன்னும் டெஸ்ட் தொடரையோ அல்லது ஒரு டெஸ்ட் போட்டியையோ வென்ற தில்லை. இம்முறை சற்று பலம் குன்றிய நிலையிலுள்ள அவ்வணியை ஒரு போட்டியிலோ அல்லது தொடரையோ கைப்பற்றுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மைதானங்களில் ஒரு டெஸட் போட்டியில் கூட வென்றதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு எதிராக இலங்கை அணி இன்னும் போட்டிகளில் பங்குகொள்ளவில்லை.

தற்போதைய அவுஸ்திரேலிய அணி வழமையான திறமைகாட்டும் அணியாக இல்லை. அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் அவ்வணியின் துடுப்பாட்டம் வலுவிழந்துள்ளது. அண்மைய இந்திய அணியின் சரித்திர வெற்றிக்குக் கூட அவர்களின் துடுப்பாட்ட தொய்வும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ஒரு வீரர் கூட சதமடிக்கவில்லை என்பது அவ்வணியின் துடுப்பாட்ட பலவீனத்தைக் எடுத்துக்காட்டுகிறது. அவ்வணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனரும், ஸ்மித்தும் அவ்வணியில் இடம் பெறாமை எதிரணிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனால் இலங்கை அணி வீரர்கள் சற்று நிதானித்து நிலைத்து ஆடினால் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறும் வாய்ப்பைப் பெறலாம்.

இரு அணிகளும் அண்மைய தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதால் இத்தொடர் இரு அணிகளுக்கும் சவாலான தொடராக அமையப் போகின்றது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ஆஸி அணி 5ம் இடத்திலும் இலங்கை அணி 6 இடத்திலும் உள்ளதனால் சம பலம் கொண்ட அணிகளாகவே இரு அணிகளும் இத்தொடரில் மோதவுள்ளன. முதல் போட்டி பிரிஸ்பேன் நகரில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளதால் இளம் சிவப்புப் பந்தை கையாள்வதில் இலங்கையை விட அவுஸ்திரேலிய அணிக்கு சற்று சாதகமாக அமையலாம் என்றாலும் அண்மைய டெஸ்ட் தோல்விகள் அவ்வணிக்கு சற்று மனதளவில் தடுமாற்றத்தைக் கொடுக்கலாம்.

இலங்கை அணியிலும் நியூசிலாந்துத் தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக இத்தொடரில் சேர்த்து கொள்ளப்படவில்லை. இது இலங்கை அணிக்கு சற்று பின்னடைவே. என்றாலும் அதிரடி வீரரான குசல் பெரேராவும், சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வாவும் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளமை அவ்வணிக்கு வலுசேர்க்கும்.

1983ம் ஆண்டு முதல் இதுவரை இரு நாடுகளுக்குடையில் 12 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 10 தொடர்களில் அவுஸ்திரேலியாவும் 2 தொடர்களில் இலங்கையும் வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரை இலங்கை அணி 3-0 என்ற ரீதியில் முழுமையாகக் கைப்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரு நாடுகளுக்கிடையிலும் 29 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவுஸ்திரேலிய அணி 17 போட்டிகளிலும், இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 8 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக 1995 ஆண்டு பேர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 617 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணி சார்பில் கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளதுடன் இலங்கை சார்பில் 1992ஆம் ஆண்டு எஸ். எஸ். சி மைதானத்தில பெற்ற 547 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக அவுஸ்திரேலியா காலி மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 106 ஓட்டங்கள் பதிவாகியுள்ளதுடன் இலங்கை சார்பில் குறைந்த எண்ணிக்கையாக 2004ம் ஆண்டு 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது. தனி நபர் கூடிய ஓட்டங்களாக அவுஸ்திரேலிய சார்பில் 1995ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஸ்லேட்டர் பெற்ற 219 ஓட்டங்களும், இலங்கை சார்பில் 2007ஆம் ஆண்டு ஹோபாட்டில் நடைபெற்ற போட்டியில் குமார் சங்கக்கார பெற்ற 192 ஓட்டங்களுமே பதிவாகியுள்ளது.

இதுவரை அவுஸ்திரேலியா சார்பில் மைக்கல் ஹசி 8 போட்டிகளில் 994 ஓட்டங்களையும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன 11 போட்டிளில் 969 ஓட்டங்களையும் பெற்று கூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பந்துவிச்சில் ஷேன் வோன் மொத்தமாக 13 போட்டிகளில் 59 விக்கெட்டுகளைப் பெற்று அவுஸ்திரேலிய அணி சார்பிலும், ரங்கன ஹேரத் 11 போட்டிகளில் 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை சார்பிலும் கூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி முன்னணியிலுள்ளனர். ஒரு இன்னிங்சில் கூடிய விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா சார்பில் 2004ம் ஆண்டு கொஸ்பரோவிக்ஸ் 39 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், இலங்கை சார்பில் 2016ம் ஆண்டு எஸ். எஸ். சி. மைதானத்தில் ரங்கன ஹேரத் 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக அவுஸ்திரேலிய சார்பில் 2016ம் ஆண்டு காலி மைதானத்தில் மிச்சல் ஸ்ட்ராக் 94 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளையும், இலங்கை சார்பில் அதே ஆண்டு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் ரங்கன ஹேரத் 145 ஓட்டடங்களுக்கு 13 விக்கெட்களையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

 

 

Comments