கவனத்தை ஈர்க்கும் நகராக யாழ்ப்பாணம் மாற்றுவாரா மாநகர முதல்வர்? | தினகரன் வாரமஞ்சரி

கவனத்தை ஈர்க்கும் நகராக யாழ்ப்பாணம் மாற்றுவாரா மாநகர முதல்வர்?

யாழ்ப்பாண நகரிலுள்ள மத்திய பேருந்து நிலையமும் அதனையண்டிய வளாகமும் நவீன மயப்படுத்தப்படவுள்ளது என்று ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி எனக்குக் கிடைத்ததைப்போலப் பலருக்கும் உற்சாகத்தையும் சந்தோசத்தையும் நிச்சயமாகத் தந்திருக்கும். இருக்காதா பின்னே, வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஒரு பண்பாட்டுத் தலைநகரின் பேருந்து நிலையமும் மைய நகரமும் ஏதோ புறாக்கூட்டைப்போல எத்தனை காலம்தானிருப்பது?

இதையெல்லாம் மாற்றியமைப்பதற்கென்று வாராது வந்துதித்த மாமணியைப்போல, இப்பொழுது யாழ்ப்பாண மாநகர சபைக்கு ஒரு புதிய மேயர் கிடைத்திருக்கிறார். திருவாளர் ஆனோல்ட். துடிப்பான இளவல். மேயராகப் பதவி ஏற்ற கையோடு அடிக்கடி உலகைச் சுற்றி வலம் வருகிறார் ஆனோல்ட்.

ஆர்வத்தோடு ஆனோல்ட்டைப் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளுக்கு அழைக்கிறார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த நகரத்தை எப்படியாவது சிறந்த நகரமாக்க வேண்டும் என்ற பேராவல் உந்த, ஆனோல்டை அங்கே அழைத்து தாங்கள் வாழும் நாடுகளின் நகரங்களைக் காண்பிக்கிறார்கள். அங்கே எப்படி நகர அபிவிருத்தியும் நகர நிர்வாகமும் சிறப்பாக இருக்கிறது என்பதை அறிய வைக்க முயற்சிக்கிறார்கள்.

இதனால் உலக வலம் வரும் வாலிப மேயர், தன்னுடைய காலத்தில், தன்னுடைய மாநகரைப் புதியதாக மாற்ற வேண்டும் என்று யோசித்திருக்கலாம். தவிர்க்க முடியாமல் அந்தப் பொறுப்பு ஆனோல்ட்டுக்குண்டு. அதாவது அல்பிரட் துரையப்பாவைப்போல ஒரு புதிய சகாப்தத்தை யாழ்ப்பாண அபிவிருத்தியின் மூலமாக உருவாக்கிக் காண்பிக்க வேண்டும் என்பதாக.

ஆனோல்ட் மேயராகப் பதவியேற்றதும் பதவி வகித்து வருவதும் மிகுந்த சவால்களின் மத்தியிலேயே. அவருடைய வேட்பாளர் நியமனமே சர்ச்சைகளுக்குரியதாகவே இருந்தது. வயதானவர்களை வைத்துக் கொண்டு எதையுமே செய்ய முடியாது என்ற அடிப்படையில் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரை மேயருக்கான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆனோல்ட்டை நிறுத்தியது.

இதற்குச் சமாந்தரமாக இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான மோதல்களின்போது சுமந்திரனுக்கு ஆதரவான முன்னணிப்போராளியாகச் செயற்பட்டவர் ஆனோல்ட். அதனால்தான் ஆனோல்ட்டுக்கு அந்தப் பரிசை சுமந்திரன் கொடுத்திருந்தார் என. எப்படியோ மாநகர முதல்வருக்கான வேட்பாளராக ஆனோல்ட் போட்டியிட்டார்.

ஆனால் எதிர்பார்த்த மாதிரித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பெருவெற்றியைப் பெற்றிருக்கவில்லை. இதனால் எதிர்ப்பக்கத்திலிருந்த ஈ.பி.டி.பியுடன் இணக்கத்துக்குப்போயே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியிருந்தது த.தே.கூட்டமைப்புக்கு. அப்படி இணக்கத்தின் மூலம் பதவிக்கு வந்தவரே ஆனோல்ட். பதவியேற்றதோடு பிரச்சினைகள் முடிந்து விடவில்லை. சவால்கள் ஒழியவில்லை. தொடர்ந்து வந்த முதலாவது வரவு செலவுத்திட்டத்தின்போதும் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன.

வேறு வழியில்லாமல் பலத்த இழுபறிகள், விட்டுக்கொடுப்புகளுக்குப் பிறகே எதிர்த்தரப்பில் இருக்கும் இன்னொரு முக்கியமான சக்தியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அங்கீகாரம் ஆனோல்ட்டுக்குக் கிடைத்தது.

இப்படிச் சவால்களின் மத்தியில் குதிரையோட்டிக் கொண்டிருக்கும் மேயர் எப்படியாவது யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்து காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்த நியதிக்குள்ளாகியிருக்கிறார். அதாவது யாழ்ப்பாண நகரத்தில் சிறிய அளவிலாவது மாற்றங்களைக் காட்டவேண்டும் என.

இதன்படி முதலில் நகர மத்தியில் நரக வழிபோலிருக்கும் முனியப்பர் வீதியை (மூத்தர ஒழுங்கையை) மாற்றி, நவீனப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பொழுது 100 மீற்றர் வரைக்கும் நடைபாதைச் சந்தையாக இருக்கும் வீதி, அப்படியே வீரசிங்கம் மண்டபம், முற்றவெளி, புல்லுக்குளம், முனியப்பர்கோயில், பொதுநூலகம், துரையப்பா விளையாட்டரங்கு என்று செல்கிறது. அப்படிச் செல்லும் அந்த வீதியை தனியான நடைபாதையோடு ஒருவழிப்பாதையாக்குவதே மேயரின் புதிய யோசனை என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தற்போது இந்திய அரசின் நிதி உதவியோடு நிர்மாணிக்கப்பட்டு வரும் நகரசபைக் கட்டிடமும் இந்த வீதிக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. எனவேதான் இந்த வீதி முதன்மைத் தெரிவுக்குள்ளாகியுள்ளது. ஆனால், இப்பொழுது இந்த வீதி பாழடைந்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருக்கிறது. ஒதுக்குப்புறமாகக் காட்சியளிக்கிறது. உண்மையும் அதுதான். அதனால்தான் அங்கே பலரும் கழிவுகளைக் கொட்டுகிறார்கள். சலமடிக்கிறார்கள். குடித்து விட்டு, வெறும் மதுப்போத்தல்களை வீசுகிறார்கள். கலாசார நகரமொன்று என்றால் இதெல்லாம் இல்லாமலா இருக்கும். அதுவும் பண்பாட்டின் தொட்டிலாகிய யாழ்ப்பாணத்தின் தலைநகரில்?

அடுத்து வரும் ஆண்டுகளில் இது தலைகீழ் மாற்றத்துக்குள்ளாகலாம்.

இதைப்போல நகரின் பேருந்து நிலையத்தையும் நவீனப்படுத்தப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான முன்வரைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இதன்படி புதிய பேருந்து நிலையமானது, கீழே, நிலத்தடி வாகனத் தரிப்பிடங்களையும் சூழவுள்ள வளாகம் பேருந்து நிலையமாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டின் பல்வேறிடங்களுக்குமான போக்குவரத்தை மேற்கொள்ளும் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்தே புறப்படுவதால் அதற்கான விரிதளம் தேவை. ஆகவேதான் இந்தப் புதிய ஏற்பாடு.

அப்படியென்றால் பேருந்து நிலையத்துக்கு வரும் சுற்றயல் வீதிகளும் விசாலமாக்கப்பட வேணுமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை. வீதிகளை இறுக்கி நெரிப்பதைப்போலவே வீதியோரங்களில் உள்ள கட்டிடங்கள் உள்ளன. போதாக்குறைக்கு யாழ்ப்பாணம் பொதுமருத்துவமனையும் இந்த வளாகத்தோடு இணைந்ததாகவே நெருக்கியடித்துக் கொண்டிருக்கிறது. பேருந்து நிலையத்துக்கும் நகரத்துக்கும் சற்றும் பொருத்தமேயில்லாத இடத்தில் ஆஸ்பத்திரி உள்ளது. இதை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அந்தக் குரல்கள் பொறுப்பான தரப்பினரால் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையில் எந்தப் புதிய – பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அது எந்தப் பெரிய மாற்றங்களையும் உண்டாக்காது. பானைக்குள் இடமிருந்தால்தான் பொங்கலுக்கான அரிசியையும் பிற பதார்த்தங்களையும் போட முடியும். இடமேயில்லை என்றால் என்ன செய்யலாம்?

சரி, இப்போதைக்கு ஆனோல்ட் தலைமையிலான மாநகரசபை செய்யப்போகும் வேலைகள் – வித்தைகளின் உண்மையான நிலைமை என்ன என்று பார்க்கலாம். இது தொடர்பாக மாநகரசபையில் உள்ள பொறுப்பு மிக்க அதிகாரி ஒருவரிடம் விசாரித்தேன்.

“அப்படியொரு திட்டத்தை (பேருந்து நிலையம் நவீனமாக்கல் மற்றும் சுற்றயல் வீதிகள் அபிவிருத்தி) பற்றிப் பேசப்பட்டது என்பது உண்மையே. ஆனால் இன்னும் அது சரியாக முடிவு செய்யப்படவில்லை. அதாவது அதற்கான நிதியைப் பெறும் மூலங்கள் கண்டறியப்படவில்லை. பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துவதற்கான “ஆரம்பநிலைத்திட்டமாதிரி” ஒன்று பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இதைத் தவிர, பேருந்து நிலையத்திலிருந்து தெற்காகப் புல்லுக்குளத்தோடிணைந்து செல்லும் முனியப்பர் வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. அந்த வீதியில் பொதுமக்களுக்கான நடைபாதையும் தனியாக அமைக்கப்படவுள்ளது. இவ்வளவுதான் இப்போதைக்குச் சாத்தியம்” என்று தெரிவித்தார்.

நகரின் தென்பகுதியில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் கோட்டை, வீரசிங்கம் மண்டபம், பொதுநூலகம், முற்றவெளி, முனியப்பர் கோயில், நீதிமன்றம், புதிய நகரமண்டபம் போன்றவற்றுக்குச் செல்லும் வழி இது என்பதால் பொதுமக்களின் போக்குவரத்து எதிர்காலத்தில் கூடுதலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இந்த வீதி திருத்தப்படுகிறது. அந்த வகையில் அவசியமான பணி இது.

முன்பு இந்த வீதியின் வழியே சென்றால் றீகலுக்கோ றியோவுக்கோ போகலாம். இந்த வீதியில்தான் ஹரன் தியேட்டரும் சாந்தி தியேட்டரும் இருந்தன. பாலசந்தரின் “தில்லுமுல்லு”, கமலின் “நீயா” போன்ற படங்களை இந்த வீதியில் மூக்கைப் பொத்தியபடி சென்று பார்த்த நினைவுகள் அப்படியே ஈரங்காயாமல் உள்ளன. இந்த வீதியின் வழியே சென்றுதான் கவிஞரும் பேராசிரியருமான எம்.ஏ.நுஃமான், நண்பர்களோடு றீகல் தியேட்டர் முன்னரங்கில் இருந்து காற்று வாங்கியதும் பிறகு அதைப்பற்றிக் கவிதை எழுதியதும். தமிழாராய்சி மாநாட்டு நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடந்தபோதும் இந்த வீதியில் சனங்கள் நெரிந்தனர். இதற்குப்பிறகு போராளிகளின் சென்றிப் பொயின்ற் இருந்ததும் இந்த வீதியில்தான்.

இப்படியெல்லாம் தலச்சிறப்புப் பெற்ற, நகர மையத்தில் உள்ள ஒரு இணைப்பு வீதி இத்தனை ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாதிருப்பது கவலையே. இந்த வீதியோரத்தில் (இதை வீதி என்று சொல்வதை விட ஓடை என்று சொல்வதே சரியானது) நடைபாதைக் கடைகள் சில உள்ளன. ஆனால், இந்த நடைபாதைக்கடைகளில் யார் வந்து பொருட்களை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

சனங்கள் நடந்து செல்லக்கூடியமாதிரியான இடங்களில்தான் நடைபாதைக் கடைகளை அமைக்கலாம். அதுதான் பயணிகளுக்கும் உதவி. கடைக்காரர்களுக்கும் வாய்ப்பு. இனி வரும் மாற்றங்களின் பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் முதலில் அங்கங்கே சிதறிக்கிடக்கும் குப்பை கூழங்களையும் கழிவுகளையும் அகற்ற வேண்டும். சீரான வடிகாலமைப்பைச் செய்ய வேணும். நகரோடிணைந்திருக்கிறது கடல். இந்த வசதியைப் பயன்படுத்தி, கழிவுகளை வடிகட்டி நீர் மட்டும் கடலில் சேர்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கலாம். பண்ணைக் கடற்கரையை ஆழமாக்கி, அதனோடிணைந்த வளாகத்தை நல்லதொரு கடற்கரையாக – பீச்சாக மாற்றலாம். இப்பொழுது கோட்டையோடு அமைந்துள்ள பீச்சை மேலும் வளப்படுத்தி இதை உருவாக்க முடியும்.

யாழ்ப்பாண நகரத்துக்குப் பல மேயர்கள் இருந்திருக்கிறார்கள். இராசா விஸ்வநாதன், அல்பிரட் துரையப்பா போன்றவர்கள்தான் மக்களால் மறக்க முடியாத அளவுக்குப் பணியாற்றியவர்கள். அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் உருவாக்கப்பட்டாலும் துரையப்பாவின் காலமே யாழ்ப்பாண மாநகரின் வளர்ச்சிக்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பதிவாகும்.

ஆனோல்ட் என்னும் இளவலுக்கு பல பொறுப்புகள். பல தெரிவுகள். பல சவால்கள். என்ன நடக்கப்போகிறது? என்ன செய்யப்போகிறார்? யாழ்ப்பாணம் கழிவுகளின் குப்பைத்தொட்டியாகத் தொடருமா அல்லது கவனிக்கத் தக்கதொரு நகரமாக மாறுமா என்பதை ஆனோல்ட்தான் நிரூபித்துக் காட்ட வேணும்.

Comments