வெனிசுவேலா அரசியல் நெருக்கடி பின்னணியில் அமெரிக்கா | தினகரன் வாரமஞ்சரி

வெனிசுவேலா அரசியல் நெருக்கடி பின்னணியில் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் அரசியல் நெருக்கடியான சூழலை நோக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஹ்யுகோ சாவேஸ்ன் மறைவை அடுத்து (2013) ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் நெருக்கடியாக அமைந்துள்ளது. சாவேஸ் மிக நீண்டகாலமாக சோசலிஸக்கட்டமைப்பை ஏற்படுத்தியதுடன் அமெரிக்காவுக்கு சவாலாக திகழ்ந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது. லெனின் மறைவை அடுத்து ஸ்டாலினின் வரவு எத்தகைய தாக்கத்தை சோவியத் ரஷ்யாவில் ஏற்படுத்தியதோ அதேமாதிரியான நெருக்கடி நிலையை வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய நிலையுடன் சமகாலத்தை ஒப்பிடமுடியாத நிலை ஏற்பட்டாலும் சோசலிஸம் தனது முதல் அர்த்தத்தை இழந்த பல வருடங்களாகிவிட்டது. இதில் இறுதி வரிகளாக விளங்கிய தென் அமெரிக்க நாடுகளிலும் அத்தகைய எச்ச நிலை காணாமல் போகின்றதைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலைத் தேடுவதே நோக்கமாகவுள்ளது.

எண்ணைவளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் 2013 ஆம் ஆண்டு சாவேஸின் மறைவை அடுத்து அடுத்த ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார். கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த தேர்தலில் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்க் கட்சிகள் அங்கீகரிக்காது தேர்தலை மீள நடத்துமாறும் நடந்து முடிந்த தேர்தல் முறைகேடானது என்பதால் ரத்துசெய்யுமாறும் கோரிகை விடுத்தன. அதனை நிராகரித்த மதுரோ இம்மாத ஆரம்பத்தில் இரண்டாவது தடவைக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார். அமெரிக்காவின் வெனிசுவேலாவுக்கான இராணுவ பிரதிநிதி கேணல் ஜோம்ஸ் லுாயிஸ் மதுரோ தரப்பிலிருந்து பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான குவான் குவைடோ பக்கம் தாவினார். அச்சந்தர்ப்பத்தில் குவைடோ தன்னை தானே தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் பிரிட்டன் ஸ்பெயின் உட்பட 20 நாடுகள் குவைடோவை அங்கீகரித்தன. அது மட்டுமன்றி குறுகிய காலத்தில் மறு தேர்தலுக்கு அழைப்பு விடுக்காது விட்டால் குவைடோவை ஜனாதிபதியாக ஏற்கப் போவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. இதனை நிராகரித்த மதுரோ ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு கால அவகாசம் தருமாறும் ஐரோப்பாவுடன் வெனிசுவேலா இணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஜனாதிபதியாக இருப்பதை எதிர்க்கும் நாடுகளுடன் தாம் பேசத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததுடன் தாம் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் பலதடவை பேசத் தயார் என அறிவித்ததாகவும் அவர் அதனை ஏற்றுக்ெகாள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். குவைடோ மேற்கொண்டது ஆட்சி கவிழ்ப்பென்றும் அதனை முறியடிக்க ஒற்றுமை அவசியமெனவும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவுடன் தூதரக உறவைத் துண்டித்த மதுரோ 72 மணித்தியாலத்தில் அமெரிக்க துாதுவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென அறிவித்தல் விடுத்துள்ளார். ஆனால் வெனிசுவேலாவின் வெளிவிவகார அமைச்சகம் அத்தகைய அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன் 30 நாட்களுக்குள் இரு தரப்பும் பரஸ்பரம் நல அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை முன்கூட்டியே அமெரிக்கா அறிவித்திருந்ததும் நினைவுகொள்ளத்தக்கது.

இதேநேரம் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா மட்டுமன்றி தென் அமெரிக்க நாடுகளும் செயல்படுவதுடன் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை வெனிசுவேலா நீண்ட கால எதிரியாகவே கருதுகிறது. அது மட்டுமன்றி அமெரிக்க ஆதரவுச் சக்தியொன்றின் வருகையை விரும்புகின்ற அமெரிக்கா அதற்கான வாய்ப்புக்களை குவைடோ ஏற்படுத்துவார் என்ற எண்ணத்துடன் செயல்பட முனைகிறது. அதற்காகவே அமெரிக்க வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு துறை சார் சக்திகள் அனைத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணை ஏற்றுமதிக் கம்பனிகள் மீது பொருளாதாரத் தடைவிதித்துள்ளதுடன் உடனடித் தேர்தல் நடாத்துதல் மற்றும் குவைடோவுக்கு எதிராகவும் அமெரிக்க துாதுவருக்கு எதிராகவும் ஏதும் நடவடிக்கையை மதுரா அரசாங்கம் மேற்கொண்டால் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மதுரோ தரப்பு படிப்படியாக அமெரிக்க ஆதரவு சக்திகளை கையாளத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குவைடோவின் நடவடிக்கையை ஆட்சி கவிழ்ப்பு எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீதான தடைகளை நீதித்துறையூடாக விதித்துள்ளது. அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாதென பிரகடனப்படுத்தியதும் அவர் மீதான விசாரணையை ஆரம்பித்துள்ளது. அவ்வாறே அமெரிக்க துாதுவர்களை வெளியேற்ற பணித்துவிட்டு 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. இவையாவற்றையும் உள்நாட்டில் மேற்கொள்வதற்கு சர்வதேச சக்திகளின் ஆதரவை திரட்டிவருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளான ரஷ்யா, சீனா என்பனவற்றையும் அயலில் கியூபாவையும் மதுரோ பயன்படுத்தி வருகின்றார். கியூபாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நகர்வுகளால் இப்பிராந்தியத்தை மீட்க வேண்டுமென்கின்ற நாடாகவும் மறுபக்கத்தில் நீண்டகால எதிரி நாடாகவும் அமெரிக்கா உள்ளமையால் அதிக கரிசனையுடன் செயல்படுகின்றது. அதிலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு எடுத்த நடவடிக்கைகளால் அதிக அதிருப்தியுடன் காணப்படும் நாடு அது. அத்துடன் வெனிசுவேலாவுடன் நீண்ட அரசியல் பொருளாதார உறவுள்ள நாடு கியூபா என்பதுவும் கவனிக்கத்தக்கது. இரு நாட்டுக்கும் பொருளாதார உறவு மட்டுமன்றி வர்த்தக உடன்படிக்கைகள், பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பொலிஸ் மற்றும் வைத்தியத் துறைகளில் பயிற்சி, தகவல் பரிமாற்றம் என்பதுடன் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாற்றிக் கொள்ளும் நாடுகளாக விளங்குகின்றன. வெனிசுவேலாவிடமிருந்து ஒரு நாளுக்கு ஐயாயிரம் பரல் எண்ணையை பெறுகின்ற நாடாக கியூபா விளங்குகிறது. இதனால் இரு நாட்டுக்குமான உறவு மிகப் பலமானதாக அமைந்துள்ளது. பிடல் காஸ்ரேவும் சாவேஸூம் நெருக்கமான நண்பர்கள் என்பதுடன் இருவரும் சோஸலிஸ சிந்தனையில் அதிக பற்றுடையவர்கள்.

இவ்வாறே சீனாவுடன் அதிக வர்த்தக உறவும் சக்தி வளப்பங்கீடும் கொண்ட நாடுகளாகும். வெனிசுவேலா எண்ணை ஏற்றுமதிக்காக சீனா 23 பில்லியன் அெமரிக்க டொலரை கடனாகப் பெற்றுவரும் நாடாகவுள்ளது. இதுமட்டுமன்றி பெரும் வர்த்தக கூட்டாளியாகவும் பொருளாதார ஒத்துழைப்பினைக் கொண்டுள்ள நாடுகளாவும் காணப்படுகின்றன. இதே பேன்றுதான் ரஷ்யாவின் உறவும் பலமானதென்றாகக் காணப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி வெளிப்படையாகவே அமெரிக்காவைக் கண்டித்ததுடன் மர்ரோவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இருநாட்டுக்குமிடையே வளர்ந்துள்ள முரண்பாடு உலகளாவிய ரீதியில் அதிகரித்து செல்கிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து வரும் ரஷ்யா இவ்விடயத்தில் சீனாவுடனும் கியூபாவுடனும் இணைந்து செயல்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு இழுபறிக்கான சூழல் தென் அமெரிக்க வட்டகையில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது அமெரிக்கா ரஷ்யா எனும் நிலை ஏற்பட்ட பின்பு இலங்கை போன்ற இழுபறிக்கு வாய்ப்பு அதிகமுண்டு. அதனை தவிர்க்க முடியாது என்பது இரு தரப்பினதும் அறிக்கைகள் கூறுகின்றன. ரஷ்யா இராணுவ ஒத்துழைப்பையும் தனிப்பட்ட பாதுகாப்பினையும் மதுரோவுக்கு வழங்குவது பற்றித் தெரிவித்திருப்பது அமெரிக்காவுக்க எச்சரிக்கை விடுவதாகவே உள்ளது. இது மேற்காசிய அரசியல் போன்ற தோற்றப்பாட்டை தந்துள்ள போதும் நடைமுறையில் அமெரிக்காவின் எல்லைப்புறம் என்பதனால் அதிக நெருக்கடிக்கு முன்பு தீர்வு நோக்கி ஏதாவது ஒரு தரப்பு நகர முயலுவது தவிர்க்க முடியாது. புவிசார் அரசியலை தனது கட்டுப்பாட்டில் இப்பிராந்தியத்தில் வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு பிற வல்லரசுகளது தலையீடு அதிக ஆபத்தானதாக அமையும். மறுபக்கத்தில் இதனை வெற்றி கொள்ள அமெரிக்கா தவறுமாயின் அதன் வல்லரசு பலம் நிலைத்திருப்பதற்கு பெரும் சவாலனதாக அமையும். ஏனைய பிராந்தியங்களில் அமெரிக்க ரஷ்ய மோதல் என்பது அமெரிக்காவை நேரடியாகப் பாதிக்காது. வெற்றியாயின் அதிக இலாபமடையும் சக்தியாக அமெரிக்கா விளங்கும். தோல்வியாயின் எதிரி இலாபங்களை அனுபவிக்கும். ஆனால் இது அவ்வாறானதல்ல. இது ஏறக்குறைய உக்ரெயின் விவகாரம் போன்றது. எவ்வாறு ரஷ்யா முடிவுகளை நகர்த்தி போருக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டதோ அவ்வாறான நிலை ஒன்றை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். அதனை உக்ரெயினில் நிகழ்த்தியது போல் வெனிசுவேலாவில் நிகழ்த்த முடியாது. அவ்வளவு இலகுவானதுமல்ல. ஆனால் இலங்கை போன்று நிகழ்த்த அமெரிக்கா முனையலாம் அதனைக் கூட இலகுவில் சாத்தியப்படுத்தி விட முடியாது. அதற்கொல்லாம் தயாராக மதுரோ விளங்குகின்றார். இலங்கையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறையை சீனாவும் ரஷ்யாவும் வெனிசுவேலாவில் பின்பற்ற முயல்வன. அதற்கு அமைவாகவே மதுரோவும் தன்னை ட்ரம்ப் கொல்ல முயல்வதாகவும் அதற்கான உத்தரவை பிறப்பித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியை விட்டு வெளியேறவும் அவர் தயாராக இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றார்.

எனவே இரு தரப்பிலும் மதுரோ பலமான அணியை கட்டியமைத்துள்ளார். அவரது ஆட்சிக்கான உள்நாட்டு அணியும் சர்வதேச அணியும் பலமாக உள்ளன. சீனா ரஷ்யாவுக்கு வெனிசுவேலாவில் இருக்கும் பொருளாதார நெருக்கம் அதிகம் மதுரோவைப் பாதுகாப்பதாக அமையும் என்பதுடன் தென் சீன விவகாரம் உக்ரெயின் விடயம் என்பவற்கு தடைபோடும் வாய்ப்பினை இலகுவில் இழந்து போக அத்தரப்பு முயலாது.

Comments