இறந்தவருக்கான சம்பிரதாயங்கள் கடந்துபோக முடியாதவையா? | தினகரன் வாரமஞ்சரி

இறந்தவருக்கான சம்பிரதாயங்கள் கடந்துபோக முடியாதவையா?

மனிதன் பிறந்து வாழ்கிறான் இவனது வரலாறுதான் என்ன? என்கிற சந்தேகம் ஒரு அரசனுக்கு ஏற்படுகிறது. தனது பண்டிதர்களை அழைத்து மனதனின் வரலாற்றை எழுதித்தரும்படி கேட்கிறான். அவர்களும் ஒன்று கூடி முயற்சி செய்து அதை எழுத ஆரம்பித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்தன. அவர்கள் தாம் எழுதியவற்றை மூன்று வண்டிகளில் ஏற்றி கொண்டு வந்தார்கள். அரசனோ, தனக்கு வேலை அதிகமாகிவிட்டதால் அவ்வளவையும் படிக்க முடியாது என்று அதை சுருக்கமாக எழுதித்தரப் பணித்தான்.

அவர்கள் மீண்டும் சில வருடங்கள் முயன்று அவற்றை சுருக்கி மூன்று புத்தககங்களாக எழுதிக்கொண்டு வந்தார்கள். அரசனுக்கு வயோதிபம் வந்து விட்டது. இப்போதும் அதை படிக்க முடியாதென மேலும் சுருக்கமாக எழுதப்பணித்தான். அரசன் இப்போது மரணப்படுக்கையில் இருந்தான் அவன் சாவதன் முன் அந்த வரலாற்றை தரும்படி பண்டிதர்களைக் கேட்டான். தலைமைப்பண்டிதன் அதை மூன்றே வார்த்தையில் கொண்டுவந்தான் அதை கேட்ட அரசன் நிம்மதியாக செத்துப்போனான். அந்த வார்த்தைகளாவது மனிதன் பிறந்தான் வாழ்ந்தான் இறந்தான். இவ்வளவுதானா? ஏன் பின்வந்த அறிஞர்கள் விரைந்து சிந்தித்து கணக்கான முடிவுகளை தந்துவிட்டனர்.

வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவர் சொன்னார். வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? அதற்கு விளக்கம் தேடப்போக நாமும் வண்டிக்கணக்கில் புத்தகங்கள் எழுதிவிடுவோம். சிலருடைய சாவு என்பது சரித்திரமாகிறது. பலருடைய சாவுகள் எந்த அதிர்வுகளுமின்றி கடந்து போகின்றன. ஆயினும் ஒருவர் நல்லவரோ கெட்டவரோ அவரது சாவு அவருடைய குடும்பத்தினரை குலைத்துப் போடுகிறது. பாசத்திலாகட்டும் பணத்திலாகட்டும் பெரிய தாக்கத்தை விட்டுவிடக்கூடும்.

இறந்து போனவருக்காக செய்யும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பன என்னை இப்போது உறுத்தத் தொடங்கியுள்ளது. ஏன்? ஏன் இதெல்லாம் இயற்கை என்று கடந்து போக மாட்டார்களா? பக்தி முத்தி செய்யும் கோயில் சடங்குகளைப்போல இவைகளும் ஒரு விளையாட்டாக ஏன் தோன்றுகிறது. இது உலகம் முழுதும் உள்ள சகல மதங்களாலும் மனிதர்களாலும் செய்யப்படுவதுதானே. எனக்குள் என்ன நடக்கிறது. ஒவ்வொரு சாவுகளிலும் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குகளுக்கும் அர்த்தம் உண்டு என்று என் பாட்டி சொன்ன கதைகளெல்லாம் அடிபட்டுப்போயிற்றே ஏன்?

போர் ஆரம்பித்த காலம் தொட்டு வாழ்ந்து வருகிறேனே இந்த சாவுகளின் பெறுமதியை எவ்வளவு மேலானதாக கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப்பார்க்கிறேன். போராளி ஒருவர் சாவடைந்தால் அது வீரச்சாவு. அந்த உடல் வித்துடல். அவர் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார். அவர் மீண்டும் முளைவிடுவார், மரமாவார். அவரை புதைக்குமிடம் மயானமல்ல போராளிகள் துயிலுமில்லம். அங்கே அமைதி பேணப்பட்டது அந்த இடத்தை கடக்கும் போதும் அது கடைபிடிக்கப்பட்டது.

போர் நிறைவடைந்தபோது அதன் இறுதியில் சாவடைந்த போராளிகளோ தெருக்கரைகளில், பொதுமக்களோ புழுத்துக்கிடந்தனர். அந்த உடல்களை எந்த சலனமுமில்லாமல் எமதுயிரை கையில் பிடித்துக் கொண்டு கடந்து சென்றோம். இவர்கள் யாா? அவர்களை யார் தேடுவார்கள்? எதுவும் எமக்கு உறைக்கவில்லை. இன்றைய சாவு வீடுகளில் விழுந்து விழுந்து சடங்குகள் செய்பவர்களைக் காணும்போது எனக்கு அவை வேடிக்கையாகத் தெரிவதை என்ன சொல்ல.

பொக்கணையில் ஒருநாள், எனது குடிலுக்கு இருபதடி தொலைவுக்கும் கிட்ட. பக்கத்து குடிலில் எறிகணை வீழ்ந்து ஆறுபேர் பெரியவர்கள், குழந்தைகள் உட்பட சிதறிப்போயினர். இரவிரவாக அவர்களது உறவினர்கள் அந்த சிதிலங்களை கூட்டிஇழுத்து அந்த பதுங்கு குழியிலேயே போட்டு மூடிவிட்டு சென்றனர். இத்தனைக்கும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தது. அந்த புதைகுழியின் மீதாக நீர் தேங்கியது.

குடலும் குருதியும் மலமும் கலந்து வந்த நாற்றமிருக்கிறதே அதை விபரிக்க வார்த்தைகளில்லை. அதை சுவாசித்தபடியே சமைத்து குழந்தைகளுக்கும் கொடுத்து நாமும் உண்டோம். வெளியே மழையும் எறிகணைகளும் போகவிடவேயில்லை. மூன்று தினங்களின் பின்பே நாம் வெளியேற மழைவிட்டது. இது நான் மட்டுமல்ல அங்கு தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நிலையும்கூட. ஆக புதைகுழிகளுடன் வாழ்ந்தவர்கள் நாம்.

இப்படி சாவுகளை சந்தித்தபின். சாதாரணமாக நடக்கும் சடங்குகள் என்னை சங்கடப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு சாவு சடங்குகளில் வரும் எட்டாம் சடங்கொன்றில் அண்மையில் கலந்து கொண்டேன் அங்கே சாப்பிட பலர் பயந்தனர். சாப்பிடமுன் படையலை முச்சந்திக்கு கொண்டு போக அவர்கள் எடுத்த முயற்சிகள் இருக்கே அட அட, கத்தி பந்தம் தண்ணீர் இத்தியாதி செட்டப்புகளுடன் போகிறவர்களின் எண்ணிக்கை. படையலை உண்ணவரும் ஆவிக்கு வழியேற்படுத்த தெருவில் நின்றவர்களை ஒதுக்கிவிட்டது. படையலை வைத்து விட்டு வருபவர்களை எதிர்ப்படாமல் விலகியது என எத்தனை எத்தனை தத்துவம். ஒருவேளை இந்த நம்பிக்கைகளின்படி இறந்தவர்கள் வரமுடிந்தால், தலையைக் குலுக்கிக் கொள்கிறேன். நம்பிக்கைகளின் பின்னணியில் அந்த வீட்டுக்காரரின் பணச்செலவை தனியாக சிந்தித்தால். அவருக்கும் இது வரலாறுதான்.

 

 

Comments