ஊழலில்லா உலகு? | தினகரன் வாரமஞ்சரி

ஊழலில்லா உலகு?

(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ முதுமாணிக்கற்கையை மேற்கொண்டு வருகிறார். அவரை [email protected] என்ற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்)

யாவரையும் உள்ளடக்கிய சுபிட்சமான உலக அபிவிருத்தியும் நிலையான, தாங்கும் சக்தி மிக்க புவித்தொகுதியும் என்ற நெடுந்தூரக் கனவுடன் நாம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் காலம் இது. புதிய மாற்றம் என்பது சாத்தியமானதே. ஆயினும் எமது கனவை அடைவதற்கு நாம் பல்வேறு வழி வகைகளைக் கையாள முடியும். இனிமேலும் இப்பூமிப் பந்தை அழுத்தங்களுக்கு ஆளாக விடாமல் நாம் தற்போது வாழும் வாழ்க்கைப் பாங்கை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அல்லது துரித பொருளாதார வளர்ச்சியினூடு நிலைத்து நிற்கும் தன்மையை எய்த வேண்டும். அல்லது சகல வழிகளிலும் இறுக்கமான நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். அதுவுமில்லையேல் சாதுரியமான முறையிலான நிலைமாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இத்தகைய நான்கு வழிமுறைகள் தொடர்பிலும் இயக்க மாதிரிகள் உருவாக்கப்பட்டு நோர்வே நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றினால் பரீட்சிக்கப்பட்டது. அப்பரீட்சிப்பு அறிக்கையின் முடிவு சற்று அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருந்தது. உலகளாவிய ரீதியிலே தற்போதைய வளர்ச்சிக்கொள்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம் ஆண்டளவில் அடைதலானது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

துரித வளர்ச்சியை நாடும் போது பொருளாதார, சமூக விடயங்களுடன் தொடர்புடைய இலக்குகளையும் அடைவுகளையும் அடைய முடியும். ஆயினும் சுற்றுச்சூழலை விலையாகக் கொடுத்தே அவற்றை அடைய முடியும்.

ஆயினும் நாம் சாதுரியமான நிலை மாற்றத்தை நாடும் போது பெரும்பாலான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம் ஆண்டளவிலே அடைய முடியும். சாதுரியமான நிலை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் நாம் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக புதுப்பிக்கத்தக்க சக்தி வழிவகைகளின் வளர்ச்சி துரிதமாக்கப்பட வேண்டும். அடுத்ததாக உணவுச் சங்கிலிகளின் உற்பத்தித்திறனும் துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும். மூன்றாவதாக வறுமை மிகு நாடுகளில் புதிய அபிவிருத்தி மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். அடுத்து சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும். இறுதியாக யாவருக்குமான கல்வி, பால் நிலை சமத்துவம், குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடளாவிய ரீதியிலும் சரி, பிராந்திய ரீதியிலும் சரி உலகளாவிய ரீதியிலும் சரி மேற்குறிப்பிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஆட்சித்துறை செயற்படுமாயின் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிராந்தியமும் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலகுவாக இருக்கும்.

இத்தகையதோர் சாதுரியமான நிலை மாற்றம் உருவாவதற்கு நல்லாட்சி மிக மிக அவசியமாகிறது. உதாரணமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் வளர்ச்சியைத் துரிதமாக்க வேண்டியதானதொரு சூழலில் நிலக்கரி மூலம் மின்னை உற்பத்தி செய்யும் புதிய செயற்றிட்டமொன்றை ஒரு நாடு அறிமுகம் செய்யுமாயின் எவ்வாறு அது தனக்கான இலக்கை எய்த முடியும்? அந்த செயற்றிட்டம் உருவாக உயர் மட்ட கொள்கைத் தீர்மானம் முக்கியதான தோர் இடத்தைப் பிடித்திருக்குமல்லவா? மாறாக ‘எமது நாடு இனிமேல் புதுப்பிக்கத் தக்க சக்தி வளத்தை மாத்திரமே பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்’ என்பது போன்ற கொள்கைத் தீர்மானம் காணப்படும் நாட்டிலே நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரத்தான் இயலுமா?

இவ்வினாக்களுக்கான விடைகளை நாம் ஒவ்வொருவரும் தேடவேண்டிய தருணம் இது.

அண்மையிலே டென்மார்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றிலே எண்முறை சார் முறைமைகளினூடாக எங் ஙனம் தமது அரசு ஊழலைக் கையாள விழைகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் ஊழலுக்கு எதிராகப் போரிடுவதற்காக போது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஆண்களும் பெண்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் அப்பிரசுரம் விளக்கியிருந்தது. ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் தொடர்பிலும் அதில் விளக்கப்பட்டிருந்தது. இவ்விடயப் பரப்பிலே ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் விளக்குவதானது, ஊழலினால் விகிதசமனின்றி பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக எண்முறை ஆயுதங்களை (சாதுரிய கைத்தொலைபேசி, இணையம்) அணுகும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் என்பதாகும். ஆதலினால் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பால் நிலை சார் கூருணர்வு மிக்கவையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும் ஆராயும் போது ஊழலும் ஊழலொழிப்பும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவையாக் காணப்படுகின்றன.

ஊழல் பலவகைப்படும். அவற்றிலொன்றே இலஞ்சமாகும். ஆயினும் எம்மில் பெரும்பாலானோர் ‘ஊழல்’ என்றால் இலஞ்சம் என்றே பொருள் கொள்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரசுரமானது சிறியளவிலான ஊழலையும் பாரியளவிலான ஊழலையும் பிரித்தறிகிறது. ஏனெனில் அவை ஒவ்வொன்றையும் ஒழிப்பதற்கு வேறுபட்ட ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.

நவீன உலகிலே ஊழலை ஒழிப்பதற்கு நான்குவிதமான வழிகளைக் கையாளலாம் என அப்பிரசுரம் குறிப்பிடுகிறது. அவையாவன, திறந்த தரவுகளும் வெளிப்படைத்தன்மையும், இலத்திரனியல் ஆட்சி மூலம் ஊழல் நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தல், கட்டச் சங்கிலித் தொழில் நுட்பம் மூலம் உரிமைகளை உறுதி செய்தலும் இடைத் தரகர்களை இல்லாமல் செய்தலும், கூட்ட முதலீட்டினூடு ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை ஊக்குவித்தல் என்பனவாகும்.

கடந்த வருட இறுதிப் பகுதியில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மா நாட்டிலே இப்பிரசுரம் முன்னளிக்கப்பட்டது.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலே இவை யாவும் சாத்தியமாக இருந்தாலும் வளார்முக நாடுகளிலும் வறிய நாடுகளிலும் நிலைமை தலை கீழாகவே உள்ளது.

யாவற்றுக்கும் முதன்மையான இயற்கை வளப்பரம்பலை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் எண்முறைத் தொழில் நுட்பத்துக்கான அணுகலில் பின்னிற்கின்றமை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந் நிலைமையிலிருந்து வெளியே வருதலொன்றும் இலகுவான காரியமல்ல. அடிப்படையில் அதற்கான முதலீடுகள் மிக அவசியமாகின்றன.

ஆட்சியும் ஊழலும் வர்த்தக, நிதித் துறைகளுடன் பின்னிப்பிணைந்தவை என்பது வெளிப்படை உண்மையாகும். பெறுகை நடைமுறைகளில் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. நிலைத்து நிற்க க் கூடிய பெறுகை நடைமுறைகளின் தோற்றமென்பது ஊழலை ஒழிப்பதற்கான முதலடியாகப் பார்க்கப்படுகிறது. அம்முதலடியை எடுத்து வைக்கும் ஒவ்வொரு நிறுவனமும் நிலைத்து நிற்கும் இவ்வபிவிருத்தி இலக்குகளில் பதினாறாவது இலக்கை அடைவதில் தனது பங்களிப்பைச் செலுத்தும். இலங்கையிலும் ஆட்சித்துறையின் பெறுகை நடவடிக்கை முறைகளை இலத்திரனியல் படுத்தும் செயற்பாடுகள் நடந்த வண்ணமேயுள்ளன.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமாயின் கண்ணுக்குப் புலப்படாதவற்றை புலப்படுத்துதல் வேண்டும் என்பர். தகவலுக்கான அணுகலையும் வெளிப்படைத்தன்மையையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவற்றைப் புலப்படுத்த இயலும்.

இங்கு நான்காவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கான ‘தரமான கல்வி’ தொடர்பிலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி சார் பெறுபேறுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது சில அடிப்படைத் திறன்களையும் நல்ல பெறுமானங்களையும் மாணவர்கள் மத்தியில் வளர்த்து விடுவதாக கல்வி முறைமைகள் மாற்றப்பட வேண்டும்.

ஊழல் என்பது சங்கிலித்தொடர் போன்றது. அது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த சங்கிலித்தொடரை இடையிலே அறுப்பதற்கு மாணவர்களால் இயலும்.

கடந்தவாரம் ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’ நிறுவனத்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டிகள் வெளியாகியிருந்தன. 2017 இலிருந்து 22018 ஆம் ஆண்டுக்கிடையே இலங்கையைப் பொறுத்தவரை எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. அது தொடர்ந்தும் 38 புள்ளிகளையே தக்கவைத்துக்கொண்டிருக்கின்றமையை அறிய முடிந்தது. நாடொன்று 0 புள்ளிகளாய்ப் பெற்றால் அது ஊழல் நிறைந்ததாகவும் 100 புள்ளிகளைப் பெற்றால் ஊழலற்றதாகவும் தீர்மானிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலே இலங்கை 89 ஆவது இடத்தையும் தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே 3 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது. உலகளாவிய தரப்படுத்தலிலே 25 ஆவது இடத்தைப் பெற்று பூட்டான் தென்னாசியாவிலே முதலாம் இடத்தையும் 78 ஆவது இடத்தைப் பெற்ற இந்தியா தென்னாசியாவிலே இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையானது 36 ஆம் இடத்துக்கும் 38 ஆம் இட த்துக்கும் இடையேயே இருந்து வந்தமையை ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’ நிறுவனத்தின் இலங்கைக் கிளை இங்கு சுட்டிக்காட்டுகிறது. ஜன நாயகத்துக்கும் ஊழலுக்கு மான தொடர்பையும் அவ்வறிக்கை தெளிவு படுத்த விழைகிறது.

ஒரு சேவையொன்றைப் பெறுவதற்காக வரிசையில் பலர் நிற்கும் போது எமக்கும் சேவை வழங்கு நருக்குமான நல்லுறவைப் பயன்படுத்தி முதலில் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. அதே போல சேவை வழங்கு நருக்குப் பரிச்சயமான ஒருவரின் சிபாரிசுடன் சென்று சேவையைப்பெறும் பழக்கமும் எம்மில் பலரிடம் உண்டு. பெறுகைகளின் போது உறவினர்களையும் நண்பர்களையும் விண்ணப்பிக்கச் செய்து தேர்வு செய்யும் திறனும் பொது பெறுகை நடைமுறைகளின்றி தெரிந்தவருக்கே ஒப்பந்த த்தை வழங்கும் செயற்பாடுகளையும் பலர் மேற்கொள்கின்றனர். சேவை வழங்கு நரிடம் தாம் நாடிச் சென்ற சேவை பூரணமாகக் கிடைக்கப் பெற்றதும் ‘ சந்தோஷத்துக்காக’ என அன்பளிப்புகளை வழங்கும் சேவை நாடிகளும் இருக்கிறார்கள். இவை யாவுமே ஊழலின் வகைகளே. ஊழல் என்பது குற்றம் என்பதை அறிந்திருந்தும் கேட்டதைக் கொடுக்காவிட்டால் அல்லது அது பற்றி முறையிட்டால் தாம் நாடி வந்த சேவை தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ? அல்லது தமக்கு அச்சுறுத்தல் ஏதேனும் உருவாகுமோ என்பதற்காகவே ஊழலை ஊக்குவிப்பவர்களும் இல்லாமல் இல்லை. இங்கு தான் சமூக அக்கறையும் நா ன்காவது இலக்கு தொடர்பில் நான் குறிப்பிட்ட பெறுமாங்கள் சேர் கல்வியும் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு நாடு ஊழல் மிக்கதாக இருப்பதற்கும் ஊழலற்றதாக இருப்பதற்கும் ஆட்சி த்துறையின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது. ஆயினும் நான் ஏலவே குறிப்பிட்டது போல ஊழல் எனப்படுவது சங்கிலித்தொடர் போன்றது. அதன் ஒரு இணைப்பையேனும் முறித்து விட்டால் ஊழல் தொடராது போகும்.

பொதுமக்களாக நாம் இருந்து கொண்டு ஆட்சித்துறையை மாத்திரம் நாம் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் இவ்வூழல் சங்கிலியின் இணைப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இணைந்திருக்கிறோம். ஏதேனும் ஒரு வகையில் எம்மால் அந்த இணைப்பை அறுத்தெறிய இயலுமானால் ஊழல் ஒழிப்பு தொடர்பில் எமக்குக் கிடைக்கும் முதல் வெற்றி அதுவே.

ஊழலுக்கு அடிமையாகாமல் இருக்கும் அதே வேளை ஊழலை ஊக்குவிக்காமல் இருக்கவும் நாம் உறுதி பூண வேண்டும். முயன்று தான் பார்க்கலாமே?

Comments