ஒப்பந்தத்தை அலரிமாளிகையில் கைச்சாத்திட்டிருக்கக்கூடாது! | தினகரன் வாரமஞ்சரி

ஒப்பந்தத்தை அலரிமாளிகையில் கைச்சாத்திட்டிருக்கக்கூடாது!

மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமனி கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களுக்கு வீடு, இலவச குடிநீர், மலசலகூட வசதி, அரிசி, மா, பத்துவயது வரை குழந்தைகளுக்கு உணவு, பேரீச்சம்பழம், வாசல் கூட்டுதல், சலவை, முடி திருத்துதல் என பல வசதிகளுடன் வெள்ளைக்கார தோட்ட கம்பனிகளால் வழங்கப்பட்டு குறைந்த சம்பளம் பணமாக வழங்கப்பட்டது. பின்னர் இதனுடன் வாழ்க்கைப் படியும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அரசாங்கம் தோட்டங்களை பொறுப்பேற்ற பின்னர் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 1977 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தொழிலாளர்ககளுக்கு 29 சதவீத சம்பள உயர்வு வழங்கினார்கள். அப்போது ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன இருந்தார். அதன் பிறகு அவ்வப்போது தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினாலும் 1984 ம் ஆண்டு வரை ஆண், பெண், சிறுவர் என்ற மூன்று வகையான சம்பளம் இருந்தது. அந்த காலப்பகுதியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் இ.தொ.கா. தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அனைவருக்கும் சமமான சம்பளமாக 23 ரூபாவை பெற்றுக்கொடுத்தார்.

1992ம் ஆண்டு சம்பள நிர்ணய சபை கூடி முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. 4 இலிருந்து 6 வீதம் வரை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரியது. இதன் பலனாக 6 வீத சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தோம். மறுநாள் செளமியமூர்த்தி தொண்டமான் கூட்டு ஒப்பந்தமுறை மூலம் வாழ்க்கைப்படி சம்பளத்தையும் பெறமுடியும் என்று கோரி கூட்டு ஒப்பந்தத்தை ஆரம்பித்தார்.

எனினும் பேச்சுவார்த்தைகளின்போது தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும். அடிப்படைச் சம்பளம் 1000 வேண்டும் 2000 வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கேட்க முடியாது. அதற்கான காரணங்களை சரியாக முன்வைக்க வேண்டும். முதலாளிமார் பக்கம் இருக்கும் பிரச்சினைகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் முன்வைத்தார். அன்று வாழ்க்கைப்படி குறைவு. இன்று அது அதிகரித்துள்ளது.

ஆனால் முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்படாமல் 1000 ரூபா சம்பளம் கொடு என்பது முற்றிலும் பிழையானது. அதனால்தான் உலக நாடுகள் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றும் எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இவ்வளவு போராடியும் அது வெற்றியளிக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் என்று கோரி 700 ரூபாவுக்கு கைச்சாத்திட்டிருந்தால் நியாயமானது. ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக கோரி மக்களை ஏமாற்றியது முற்றிலும் தவறானது. மேலும் தொழிற்ச்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வந்ததால் அப்படி ஏதும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக சங்கங்கள் அலரிமாளிகையில் முதலாளமார் சம்மேளனத்தை சந்தித்து பிரதமர் முன்னிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை மலையக மக்களுக்கு இழைத்த துரோகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கு இழைத்த துரோகம் மட்டுமல்ல; தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இழைத்த துரோகமும் கூட. பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

அரசாங்க பணத்தை ஏன் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வழங்க வேண்டும்? இவ்வாறு வழங்கியமைக்கான காரணம் என்ன? ஏன் இந்த சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை?.

தலவாக்கலை பி. கேதீஸ்

Comments