கூன் விழுந்த நிர்வாகம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது | தினகரன் வாரமஞ்சரி

கூன் விழுந்த நிர்வாகம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய காரணிகளில் மிக முக்கியமானதொரு காரணியாக விளங்குவது, நிறுவனங்களின் தோல்வி (Institutional Failure) ஆகும். எந்த ஒரு பொருளாதாரத்தின் மேல் நோக்கிய அசைவுக்கும் முறையாக ஒழுங்கு படுத்தப்பட்ட நிறுவனங்கள் அவசியமாகும் ஒரு குடும்பம் முதல் நாட்டின் அரசாங்கம் வரையிலான பல்வேறுபட்ட நிறுவனங்களை நாம் அடையாளங்காணலாம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் அவ்வாறு காணப்பட்ட நிறுவன நீதியான கட்டமைப்புக்கள் பலமானதாகவே காணப்பட்டன. குடும்பங்கள் கட்டுக்கோப்பாக இயங்கின. கிராமசாலை, பாடசாலைகள் சமய நிறுவனங்கள் உள்ளிட்டவை சமூக விழுமியங்களையும் ஓரளவுக்கேனும் பேணிவந்தன.

ஆயினும் தொடர்ந்து வந்த காலப் பகுதியில் இவையாவும் படிப்படியாக பணமயப்பட்டு சிதைந்து போயின. சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பு பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தமையும் இவ்வாறான ஒரு நிலை தோன்ற ஏதுவாகியது.

மறுபுறம் இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக அரசியல் மயப்பட்டது. அரசியல் என்பது சமூக சேவை என்பது மாறி வெறுமனே பணம் பண்ணும் ஒரு தொழிலாக மாறியமையும் அதிகாரத்தை வீச்சு மிக்க ஒரு வல்லாதிக்க ஆயுதமாக மாறியதையும் காண முடிந்தது .பொருளாதார வளம் பெற வேண்டுமாயின் உறுதியான அரசியல் சூழலும் தூரநோக்குடைய அரசியல் சிந்தனையும் அவசியம். அதேபோல் அரசியல் சிக்கலின்றி நகர வேண்டுமாயின் பொருளாதாரம் வளம் பெறல் அவசியம்.

இங்கே நாம் அரசியல் என்பது வெறுமனே ஒரு கட்சியையோ அல்லது ஆட்சியிலிருக்கும் ஒரு அரசாங்கத்தையே மட்டும் அல்ல; அரசியல்வாதிகள், நிர்வாகிகள், வாக்காளர் பெருமக்கள், நாட்டின் அரசியல் யாப்பு நிருவாக கட்டமைப்புகள் உட்பட எல்லாவற்றையும் உள்ளடக்கும். இலங்கையின் அரசியல் வாதிகளைப் பொறுத்தமட்டில் நாட்டுக்கான சேவை என்னும் குறிக்கோள் முற்றாக மாறிவிட்டது. அரசியல் வாதிகள் மட்டும் நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பல்லர். ஒவ்வொரு அமைச்சும் அதன் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டம் எனப்படும் Bureaucrats அல்லது Techno crat என்னும் மேட்டுக்குடியினரால் வழி நடத்தப்படுகிறது. அரசியல்வாதிளில் பலர் பொருளாதாரம் பற்றிய எந்த ஒரு அறிவையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவர்களின் கீழ் இருக்கும் நிர்வாகிகள் குழாம் அமைச்சுக்களை நடத்திச் செல்லவும், ஒரு அரசியல் வாதி பிழை விடும் போது அவை பிழை எனச் சுட்டிக்காட்டி சரியானதை நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிர்வாக சேவை அதிகாரிகள் காணப்படுவது ஒரு நாட்டின் வரம் ஆகும். 1960ம் தசாப்தங்கள் வரை இலங்கை நிர்வாக சேவையின் முதுகெலும்பு மிக வீரியமானதாக இருந்தது அதன் பின்னர் படிப்படியாக கூன் விழுந்து அரசியல் வாதிகளின் கைப்பாவைகளாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இன்னும் விரல் விட்டு எண்ணத்தக்க நிர்வாக சேவை அதிகாரிகள் அரசியல் வாதிக்கு ‘சலாம்’ போடுவதையும் ‘ஆமாம் சாமி’ போடுவதையும் விடுத்து தொழில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு சரியானதை நாட்டின் நடைமுறைகளுக்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும் கட்டுப்பட்டு மக்களுக்கு சேவை செய்வதைப் பார்க்கின்றோம். அரசியல் வட்டாரங்களில் அவர்களுக்கு சூட்டப்படும் பெயர் ‘பிழைக்கத் தெரியாதவன்’ அல்லது ‘அனுசரித்துப் போகத்தெரியாதவன்’ என்பதாகும். பணத்திற்காகவும், பதவிக்காகவும் தமது பொறுப்பான பதவிகளை அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக விட்டுக்கொடுத்து “முதுகு சொறிந்த பலரை கண்ட அனுபவம் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய இக் கட்டுரையாசிரியருக்கு உண்டு.

இந்தியாவில் நிர்வாக அதிகாரிகள் இன்னும் மிகப் பலம் வாய்ந்த ஒரு குழுவாக உள்ளனர். என்னதான் அரசியல்வாதிகளின் பலம் இருந்த போதிலும் இவ்வதிகாரிகள் முக்கிய விவகாரங்கள் பலவற்றில் நேரடிச் செல்வாக்கு செலுத்துகின்றனர். இந்தியாவின் ‘சௌத்புளக்’ என்னும் நிர்வாக அதிகாரிகள் சர்வ பிரசித்தம்.

இது இப்படி இருக்க, இலங்கையில் அரசாங்கத்துறை சிறப்பாக செயல்படுவதில்லை எனப் பலரும் குற்றச் சாட்டுகளை முன்னவைக்கின்றனர். திறமையின்மை, பலவீனம், ஊழல், இலஞ்சம் என்பன மலிந்த துறையாக அரசாங்கத் துறையை பலரும் விமர்ச்சிக்கின்றனர். ஆயினும் தனியார் துறையானது அரசாங்கத் துறையை விட வினைத்திறன் மிக்கதொன்றோ சிறந்ததொன்றோ முடிவு செய்ய இயலாது. அரச துறையோ, தனியார் துறையோ எதில் வேண்டுமானாலும் அதில் உள்ள நிறுவனக் கட்டமைப்புக்களே அதாவது அதில் உள்ள மனிதர்களே அதன் இயங்கு தன்மையை தீர்மானிக்கின்றனர். அதுவே வினைத்திறனை தீர்மானிக்கிறது.

அண்மையில் ஒரு அலுவலின் நிமித்தம் மிகப் பிரசித்தமான ஒரு சட்டவல்லுநரை சந்திக்க நேர்கிறது. சுமார் அரைமணி நேரம் அவதானித்ததில் பல விடயங்களைப் புரிந்து கொள்ளமுடிந்தது ஒரு சட்ட ஆவணத்தில் அவரது உதவியாளர் அவரது உத்தியோக முத்திரையை தலைகீழாக வைத்துக்கொண்டு வந்திருந்தார் அவரது உதவியாளர்கள் நேரத்தின் அருமை பற்றி அக்கறைப் பட்டவர்களாகத் தெரியவில்லை மிகவும் அனுபவசாலியான அந்த சட்டவல்லுனர் அவர்களை கட்டி மேய்க்க சிரமப்படுவது புரிந்தது. இதுபோலவே இப்போதெல்லாம் தனியார்துறை நிறுவனங்கள் பலவற்றிலும் வினைத்திறனின்மையும் ஏனோ தானோ வென்று தொழில் புரியும் மனப்பாங்கும் மேலோங்கி வருகிறது.

பொருளாதார ரீதியில் வெற்றியடைந்த நாடுகள் அனைத்திலும் மிகவும் வினைத்திறன் வாய்ந்த தனியார்த்துறையையும் அதேபோல் கட்டுக்கோப்பான அரசியல் துறையும் ஏனைய நிறுவன ரீதியானக் கட்டமைப்புகளும் காணப்படுகின்றன. இவ்வாறான கட்டமைப்புக்கள் பல்வேறு நாடுகளில் பூரண ஜனநயாக ரீதியில் செயற்படவில்லை. மாறாக அதிகாரத்துடன் கூடிய ஒரு ஜனநாயக முறைமையே காணப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் இதைத் தெளிவாகக் காணமுடியும். சிங்கப்பூர் லீக்குவான் யூ, மலேஷியாவின் மகதிர் முஹமத், தென் கொரியாவின் சுண்டு ஹூவான் போன்றவர்கள் அதிகாரப் போக்குடைய தலைவர்களாகவே இருந்தனர். ஆயினும் அவர்களிடம் அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகிகள் குழாம் ஒன்று இருந்தது. அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு இயங்கும் போக்கு காணப்பட்டது. நிறுவனங்கள் அவை தாபிக்கப்பட்ட நோக்கத்துடன் இயங்கின. இலங்கையைப் பொறுத்த மட்டில் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. உதாரணமாக இலங்கை மத்திய வங்கியானது அரசாங்கத்தின் முகவராகவும் அதன் மதியுரைஞராகவும் செயற்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நிறுவனமாக அதனை கடந்த காலத்தில் மாற்றிவிட்டிருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மிகப் பெரிய களங்கமாக பிணைமுறி ஊழல் அமைந்தது.

இவ்வாறு அரசு நிறுவனங்கள் அவற்றின் நோக்கத்தை அடையவிடாமல் ‘தலையாட்டும் நிறுவனங்களாக் மாறியுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இதற்கு சிறந்த உதாரணமாகும். இவ்வாறு ஒரு பொருளாதாரத்தின் நிறுவனக் கட்டுமானங்கள் சீர்குலைந்து பலவீனப்படும் போது பொதுமக்களும் அரச தனியார் துறை ஊழியர்களும் “நாலுகாசு சம்பாதித்தால்போதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம் மலையேறிப்போச்சு” என்று தத்தமது நடத்தைகளை வடிவமைத்துக் கொள்வது தவிர்க்க இயலாதது. அதன்பின் விளைவுகள் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கும். இலங்கையிலும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள்வதாயின் புதிதாக ஒரு தொலைநோக்குள்ள தொழில் சார் வல்லுநர் நாட்டின் வழிகாட்டியாக வந்து செயற்பட்டால் மாத்திரமே பொருளாதார சுபீட்சம் ஒரு நீண்டகாலத்தில் சாத்தியமாகலாம்.

Comments