கொடூரமான தண்டனைகளே வழங்கப்பட்டன கண்டியில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் | தினகரன் வாரமஞ்சரி

கொடூரமான தண்டனைகளே வழங்கப்பட்டன கண்டியில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும்

கண்டி யுத்தம் 1815ம் ஆண்டு ஜனவரி மாத அளவில் ஆரம்பமாகும் தருணத்தில், பிரித்தானியர்கள் நெப்போலியனுடன் நடைபெற்ற வோட்டர்லூ யுத்தத்தின் நடுப்பகுதியில் இருந்தனர். அந்த யுத்தம் 1815 ஜூன் மாதம் நிறைவுக்கு வந்தது. ஆளுநர் பிரவுன்றிக் கண்டியைக் கைப்பற்றும் முற்றுமையை ஆரம்பித்தது பிரித்தானியர் நெப்போலியனுடனான யுத்தத்தில் களைப்படைந்திருந்த சந்தர்ப்பத்திலாகும். அமெரிக்க குடியேற்ற நாடுகளுடனான யுத்தத்திலும் ஆங்கிலேயர் பெரு நட்டங்களை அடைந்திருந்த கால கட்டம் அது. எனவே இத்தகைய யுத்த இழப்புகளை சரிசெய்தவற்காக இவ்வாறு இலகு யுத்தமொன்றை மேற்கொண்டு ஒருதேசத்தையே கபளீகரம் செய்யும் நோக்கம் ஆங்கிலேயர்களுக்குள் முளைவிட்டது.

1803ஆம் ஆண்டு கண்டிமீது படையெடுப்பதற்கு அன்றைய ஆளுநர் நோர்த்துக்கு தகுந்த காரணம் கிடைத்தது போன்று பிரவுன்றிக் கண்டியை முற்றுகையிடுவதற்கும் கருப்பொருளொன்றை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிட்டியது. ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து மத்திய மலைநாட்டுக்கு வியாபாரத்திற்காக சென்ற சிங்கள வியாபாரிகள் இருவர் மற்றும் மஹற பிரதேசத்தில் குடியிருந்த சில ஆங்கிலேயர்களும் ருவான்வெல்லையில் வழிப்பறிக்கு உள்ளாயினர். கொள்ளையர்களிடம் தமது பெறுமதி வாய்ந்த பொருட்களை பறிகொடுத்த அவர்கள் உளவாளிகளென கூறி மன்னன் அவர்களை தண்டனைக்குட்படுத்தியமை ஆங்கிலேயரின் பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. இராஜாங்க செயலாளருக்கு இச்சம்பவத்தை தெரிவித்தான் பிரிவுன்றிக் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கொள்ளைக்காரர்களே! எனினும் கொள்ளையர்கள் அரச சேவையில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரிகளென்பதை அரசன் அறிந்திருக்கவில்லை. 1814ம் அக்டோபர் 26ஆம் திகதி டொயிலியிடம் மேற்படி கொள்ளையர்களினால் பாதிப்புக்குள்ளாகிய ஒருவன் தெரிவித்த உண்மைச் சம்பவங்கள் இராஜாங்க செயலாளர் பெத்தர்ஸ்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவ்வியாபாரிகள் ஒற்றர்களென குற்றஞ்சாட்டப்பட்டு உடலுறுப்புகள் வெட்டப்பட்டு (அங்கச் சேதனம்) தண்டிக்கப்பட்டனரே தவிர மரண தண்டனைக் குள்ளாக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட வியாபாரியின் கூற்றின்படி பத்துபேரின் ஏழு பேர் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டமையினால் மரணம் அடைந்ததோடு மூவர் உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், ஏனைய ஒற்றர்களை எச்சரிப்பதற்காக இவ்வாறு கொழும்புக்கு அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்திருந்தான்.

மேற்கண்ட தண்டனை தொடர்பாக மன்னன் கப்பலில் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கப்பல் தலைவன் வில்லியம் கிரென்வில் இராஜசிங்கனிடம் இது பற்றி வினவினான். அதற்கு இராஜசிங்கன்;

“அவர்கள் ஒற்றர்களே தவிர வியாபாரிகளன்று. கண்டியின் சட்டதிட்டங்கள் வெறும் சுவரோவியங்கள் அல்ல. அது பற்றி அனைவருமே அறிவர். தண்டிக்கப்பட்டவர்கள் எமது அரசுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள். அதற்கான சாட்சியங்கள் போதிய அளவு உள்ளன. சட்டதிட்டங்களுக்கமைய அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது” என்று கிறென்வில்லிடம் கூறியிருந்தான்.

இத்தகைய உடலுறுப்புகளை வெட்டும் தண்டனை முறைகள் கண்டி இராசதானியில் இருந்து வந்துள்ளதோடு ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இத்தண்டனை முறைகள் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் தொங்கவிடப்பட்டும், வயிற்றைப் பிளந்தும், குடலை வெளியில் இழுத்தும், மர்ம உறுப்புகள் வெட்டப்பட்டும், சிரச்சேதம் செய்யப்பட்டும், உடல்கள் நான்கு ஐந்து துண்டுகளாக வெட்டப்படுவதும் ஏனையோரை எச்சரிப்பதற்காகவே. ஆங்கிலேயரும் தண்டனை பெற்றவர்களை பல்வேறு இடங்களில் காட்சிபடுத்திவைக்கும் வழக்கத்தை பின்பற்றினர்.

1820ம் ஆண்டு வரை இத்தண்டனை முறைகள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளன. எனினும் இங்கிலாந்து தேசத்தில் 1870ம் ஆண்டிலேயே இத்தண்டனை முறைகள் முற்றாக நீக்கப்பட்டன. ஸ்கொட்லாந்தில் 1949ம் ஆண்டுவரை இம்முறை கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

எனினும் மன்னன் இராஜசிங்கனின் ஆட்சியில் கண்டியில் விதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனையை ஆங்கிலேயர்களை அவமதிக்கும் செயலாக எடுத்துக்காட்டி கண்டியை முற்றுகையிடுவதற்கு பிரவுன்றிக்குக் ஏதுவாகியிருந்தது. எனினும்; (Powel) பவெல் மற்றும் ஹென்ரி மார்ஷல் ஆகியோரின் கூற்றுகளின்படி, வியாபாரிகள் கொள்ளையிடப்பட்டமை ஏற்கெனவே பிலிமத்தலாவையினால் திட்டப்பட்ட சதித் திட்டத்தின் ஓரங்கமாகும். இதன் மூலம் ஆங்கிலேயர் கண்டி மீது போர் தொடுக்க வழிசமைப்பதே நோக்கமாக இருந்தது. இம்முறை இத்திட்டத்தின் சூத்திரதாரி ஜோன் டொய்லியேயாகும். மஹற பிரதேசம் டொயிலியின் ஒற்றர்கள் பெருமளவில் நடமாடிய பிரதேசமாகும். இதற்கு முன்னுதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

பிலிமத்தலாவை 1810அக்டோபர் 14ம் திகதி மன்னன் இராஜசிங்கனின் யானை பிடிக்கும் பணியரட்களை மேற்பார்வை செய்வதற்கென டொயிலியின் உளவாளியொருவனை அனுப்பிவைத்தான்.

மகறவாசியான கோறளகே ஜொஹான்னஸ் என்னும் வியாபாரி குருணாகலையிலிருந்து அனுராதபுரத்திற்கும், அங்கிருந்து கண்டிக்கும் புடவை வியாபார நிமித்தம் சென்று 1810 செப்டம்பர் மாதம் 28ம் திகதி திரும்பிவரும் போது அவனது பொதிகளில் வெண்ணெய்யும், மெழுகும் இருந்தன. இவ்வாறு எஹலபொலை மகறவாசிகளாகிய உளவாளிகளை கண்டியின் உண்மை விபரங்களை திரட்டுவதற்கு அனுப்பிவைத்தமை தெரியவந்தது.

மன்னனால் தண்டிக்கப்பட்டவர்கள் உண்மையாகவே உளவாளிகளேயொழிய வியாபாரிகளல்லவென பல்வேறு சாட்சியங்கள் மூலம் நிரூபணமாயின. பீரிஸ் எழுதிய ‘த்ரீசிங்ஹலய) (Tri Sinhala) நூலின் துணைநூலாகிய Appendix பகுதியின்பிரகாரம் இச்சம்பவம் டொயிலியும், பிரவுன்றிக்கும் கண்டியின் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜாங்க செயலாளர் பெத்தர்ஸ்ட், ஆக்கிரமிப்புத் திட்டம் அவசியமென்றே நம்பினான்.

எனினும் கண்டி அரசின் கண்ணோட்டத்தில் உளவு பார்ப்பதற்காக வந்தவர்கள் நாட்டை அந்நியருக்கு அடிமைப்படுத்தும் முயற்சிக்கு துணைபோனவர்களாக விளங்கியமை தேசத்துரோகமே.

இத்கைய தண்டனைகள் அரச அங்கீகாரம் பெற்ற தண்டனைகளாகும். ஒருகை, ஒற்றைச் செவி, சிலவேளைகளில் நாசியென வெட்டப்பட்டு அவர்கள் அங்கவீனர்களாக வாழும் போது ஏனையோர் குற்றம் புரிய முன்வரப்பட்டார்களென்பது இத்தண்டனைக்கான அடிப்படையாகும்.

தப்பிவந்து தகவல்களை அளித்த கோறாளைகே ஜொஹன்னிஸ் என்பவன் 1810முதல் டொயிலியிடம் பணிபுரிந்த நம்பிக்கைக்குரிய ஒற்றனாவான். மன்னன் குற்றங்களுக்கான தண்டனைகளை அறிவித்த பின்னர் அரண்மனைக்கு வெளியே குற்றவாளிகளை தண்டனைக்குரியவர்களாக்கி தண்டனையை வழங்கியதும் நிறைவேற்றியதும் அதிகாரிகளேயாகும். கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களும் அறியும் வண்ணம் அங்க சேதனம் செய்யப்பட்ட குற்றவாளிகளை கிராமப்புறங்களுக்கு அனுப்பிவைப்பது வழமை, எனினும் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உபகாரங்கள் வழங்குவதற்கு எவருக்கும் தடையிருக்கவில்லை.

போர்த்துக்கேயரிடம் பயின்றவனாகிய முதலாம் விமல தர்மசூரியன், கண்டியில் கைதுசெய்யப்பட்ட ஐந்து போர்த்துக்கேயர்களை ஒரு கண் மற்றும் ஒரு காது நீக்கப்பட்டு அவர்கள் தமது கைகளைப் பற்றியவாறு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவத்தை இங்கே சான்றாகக் குறிப்பிடலாம். மேலும் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் வழங்கியதாக ஆங்கிலேயர் குறிப்பிடும் தண்டனை, மன்னனின் தனிப்பட்ட தீர்ப்பன்று. அதிகாரிகளின் கடமைகளில் அதுவும் ஒன்றாகவே கருதமுடியும். ஒல்லாந்தராகிய வரலாற்றாசிரியர் பெல்திவூஸ் மற்றும் வெலன்டைன் ஆகியோரும் குற்றவாளிகளின் மனைவி, மக்கள் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டு தண்டிக்கப்பட்டமை சட்டத்திற்கமைவானதாகுமென தெரிவித்துள்ளனர். எனவே ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் தனது அரசுக்கெதிராக உளவு பார்த்தவர்களை தண்டித்தமை எவ்விதத்திலும் தவறென கருத முடியாது.

சில மாதகால இடைவெளிக்குப் பின்னர் டொயிலி மற்றும் எஹலபொல ஆகியோரின் வழிகாட்டலின் மூலம் மேஜர் லயனல் ஹூக் தலைமையிலான படையணி கண்டி மீது முற்றுகையிட்டது. டொயிலிக்கும் எஹலபொலைக்கும் கண்டி பிராந்திய போக்குவரத்து வழிகள் அத்துப்படி. விசேடமாக எஹலபொல மற்றும் அவனது ஆட்கள் கண்டியின் மூனை முடுக்குகளை எல்லாம் நன்கறிந்து வைத்திருந்தனர்.

தகவல்  
சுமணசிறி தனநாயக்க   
(சிங்ஹலே அவசன் ராஜ்ய சமய)  

Comments