நுவரெலியாவில் பட்டிப் பொங்கல் கொண்டாட மாடுகள் இல்லாத அவலம்! | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவில் பட்டிப் பொங்கல் கொண்டாட மாடுகள் இல்லாத அவலம்!

தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் எனும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுவது வழமை.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தை உள்ளடக்கிய பல பிரதேசங்களில் கிராமங்கள் மற்றும் தோட்டப்பகுதிகளில் பட்டிப் பொங்கல் அமோகமாக கொண்டாடப்படுவது ஒன்றும் புதிய விஷயமல்ல எனினும் நுவரெலியா கந்தப்பளை, தலவாக்கலை, இராகலை, வலப்பனை, அக்கரப்பத்தனை போன்ற பல பிரதேசங்களில் மாடுகள் அரிதாகியுள்ளதால் இம்முறை பட்டிப் பொங்கல் கொண்டாட்டம் சோபை இழந்தது.

தோட்டத் தொழிலுக்கு அப்பால் கால்நடைகள் வளர்ப்பில் ஊடாக வருமானத்தை ஈட்டிக்கொள்வது பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்த காலங்களில் காணப்பட்டது. பாலுற்பத்தியில் கணிசமான பங்களிப்பை நுவரெலிய மாவட்டம் வழங்கி வந்தது.

1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் கால் நடைகள் வளர்ப்பில் பெரிய ஆர்வம் மக்களிடம் தென்பட்டது. 2011 ஆம் ஆண்டுவரை கால்நடை வளர்ப்பில் ஓரளவு அக்கறையை காணமுடிந்தது.

எனினும் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இன்றுவரை நூற்றுக்கு 48% வீத கால்நடை வளர்ப்புகளில் தோட்டப்பகுதிகளும் கிராமப்பகுதிகளும் அக்கறை கொண்டிருந்தன என்பதை கால்நடை மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மறைந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் மலையக பிரதேசங்களில் கால் நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பட்டிப்பொங்கல் கொண்டாடுவதற்கும் மாடுகள் இன்றி காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாகும்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கால்நடைகள் அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்த ஆறுமுகம் தொண்டமான் காலப்பகுதியில் கால்நடை ஊகாகுவிப்புக்கென கால்நடை வளர்ப்பாளர்களுக்கு புதிய மாடுகளை பெற்றுக் கொள்வதற்கு காசோலைகள் முதல் மாட்டு கொட்டகைகளை மறுசீரமைக்க நிதியும் வழங்கப்பட்டு வந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு உதவிகள் பெற்றவர்கள் காலப்போக்கில் கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட சிரமங்கள், புண்ணாக்கு விலை உயர்வு, புற்கள் தட்டுப்பாடு என்பதாலும் அரசாங்கம் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில்லை என்று உருவான கருத்தினாலும் இந்த தொழிலை விட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆனாலும் மத்திய மாகாண கால்நடை விவசாய அபிவிருத்தி அமைச்சியின் ஊடாக பல உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வில்லை. எனினும் இதை கால்நடை வளர்ப்பாளர்கள் பெற்றுக்கொண்டார்களே தவிர பயன்படுத்த

தவறிவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த நிலை யில் மலையகத்தை உள்ளடக்கிய கால்நடை பண்ணைகளில் மாத்திரம் மாடுகளுக்கு பட்டி பொங்கல் விழா எடுக்கப்படுகின்றதே தவிர கிராமப்பகுதிகளிலும் தோட்டப்பகுதிகளிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய கால்நடை வளர்ப்பாளர்களே பட்டிப்பொங்கலை இவ் வருடம் கொண்டாடினர்.

அத்துடன், தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அந்தவகையில் பரம்பரையாக கால்நடை வளர்த்து வந்தவர்கள் மற்றும் பாரியளவிலான விவசாய காணிகளை வைத்துள்ளவர்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு மாட்டு சாணம் பெற்றுகொள்வதற்கு மாடுகளை வளர்பவர்கள் மாத்திரமே இப்பட்டி பொங்கல் விழாவை கொண்டாடினராம்!

பசும்பால் விற்பனைக்காக கறவை மாடுகளை வளர்ப்பவர்களும் பட்டிப்பொங்கலை கொண்டாடினர். பொதுவான பட்டிகள் கட்டிகொடுக்கப்பட்டு அதில் வளர்க்கப்பட்டுவரும் குறைந்தளவிலான கால்நடைகளும் இப்பட்டி பொங்கல் வாய்ப்பைப் பெற்றன.

இப் பிரதேசத்தில் பல கால்நடை பட்டிகள் வெறுமையாக காணப்படுகின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலையை தொடர விடாமல் கால்நடை வளர்ப்பில் ஊக்குவிப்பை ஏற்படுத்த அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்பாளர்களை அதிகாரிகள் இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசவாரியாக கால்நடை வளர்ப்பாளர்களை கணக்கெடுத்து உதவிகள் செய்வது முக்கியம். மேலும் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவமானது, அதன்மூலமான வருமானம், பால் உற்பத்தி அதன் நன்மைகள் தொடர்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுப்படுத்தும் வகையில் நவீன முறைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும். இல்லையேல் நுவரெலியா மாவட்ட கால்நடை வளர்ப்பு மக்கி மறைந்து விடலாம்.

Comments