ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “கலியாணம் என்டா இப்படித்தான் இருக்கவேணும்.”

“செல்வத்தின்ட மகனோட கலியாணத்தைத்தான சொல்லுறியள். ஆட்டுக்கறி கோழிக்கறி குடி கிடி என்டு கலக்கிப்போட்டவை. இது போல கலியாணத்தை இதுக்கு முன்னால பாக்கேல்லயென்டு ஊரெல்லாம் பேசிக்கொண்டிருக்கினம்.”

“ஆனா சின்னராசு அவையின்ட சொந்தக்காரருக்கு சொன்னவை. ஊராக்களுக்கு சொல்லேல்லயே? கோடி கோடியா செலவழிச்சி என்ன பிரயோசனம். ஊருக்கெல்லாம் சொல்லி நடத்துனாத்தான் உது கலியாணம்.உதுக்கு நல்லவொரு உதாரணக் கலியாணம்தான் ரோஹித – டட்யானா கலியாணம்.”

“வெளிநாட்டுக் கலியாணமோ,”

“உது உள்நாட்டு கலியாணமப்பா ஜனாதிபதி வீட்டுக்கலியாணம்.”

“எங்கட மஹிந்த ஐயா வீட்டுக் கலியாணமே.”

“ஓமோம் உந்த கலியாணம்தான். மாப்பிள்ளை எங்க வச்சி அவரின்ட காதலை சொன்னவரென்டு உனக்குத் தெரியுமோ?”

“பார்க்கில இல்லயென்டா தியேட்டரில. அங்க தான எங்கட பெடியள் உதையெல்லாம் சொல்லுவினம்.”

“இல்லயப்பா உவன் வேற மாதிரி வித்தியாசமா சொன்னவன். ஏங்க தெரியுமோ. தான்சானியாவில உள்ள 4900 அடி உயரமான கிளிமாஞ்சரோ மலையுச்சியில வச்சித்தான் உதைச் சொன்னவனப்பா.”

“மலையுச்சியல வச்சு சொன்னவரே. அங்க வச்சி சொன்னா ஏத்துக் கொள்ளத்தான வேணும். சொன்ன ஆள் யார்.இல்லயென்டா பிடிச்சி தள்ளி விட்டினமென்டா.”

“கிளிமாஞ்சரோவில சொன்ன காதல் மெதமூலனயில கனிஞ்சி பழமாப்போட்டுது.”

“கலியாணத்தில முடிஞ்சிது என்டு சொல்லுங்கோவன்.”

“ஓமப்பா. ஜனாதிபதியா இருந்தவரின்ட வீட்டில நடக்குற முதல் கலியாணம். முகேஷ் அம்பானியின்ட வீட்டு கலியாணம் போல கோடிக்கணக்கில செலவழிச்சி தடபுடலா ஆர்ப்பாட்டமா நடத்துவினம் என்டுதான் எல்லோரும் எதிர்பார்த்தவை. ஆனா அப்பிடி நடக்கேல்ல. இந்த கலியாணம் பாரம்பரிய முறையில ரம்மியமான சூழலில ஊரெல்லாம் அழைப்பிச்சு, அழகா அம்சமா வீண் ஆடம்பரமில்லாம நடந்துது கண்டியோ.”

“பொதுநலவாய மாநாட்டை எப்பிடி கோலாகலமா நடத்தினவை?”

“அந்தக் கொண்டாட்டம் உனக்கு இன்னும் ஞாபகமென்ன.”

“அந்த தடபுடல மறக்கேலுமே.”

“ஆனா இந்தக் கலியாணத்துக்கு 5000 அதிதிகளுக்கு அழைப்பு அனுப்பினவை. மெதமூலனயில உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஆள் அனுப்பி மாலையில விருந்துக்கு வாங்கோ என்டு கூப்பிட்டவை

“மெதமூலனயில் பௌத்த கலியாணம் கொழும்பு சென்.மேரிஸ் தேவாலயத்தில கிறிஸ்தவ முறையில கலியாணம், கொழும்பு மயூரபதி கோயிலில இந்து முறையில கலியாணம் என்டு இன நல்லிணக்கத்துக்கு உதாரணமா மூன்டு முறை கலியாணத்தை நடத்தியிருக்கினம்.”

“அது பெரிய விஷயமென்ன. மாப்பிள்ளையவும் பொண்ணையும் இந்து முறைப்படி பாக்கேக்கை ஷோக்காக் கிடக்கென்ன.”

“உந்தக் கலியாண விருந்தில மது பானம் இல்ல. மாமிச உணவு இல்ல. எல்லாம் கிராமப்புற சிங்கள உணவு. மற்றொரு இடத்தில முஸ்லிம் சாப்பாடு என்டுதான் கிடந்துது. சிங்கள உணவில வெவ்வேறு வகை சோறு. கத்திரி மோஜூ, கிழங்கு பிரட்டல், பருப்பு, பொலொஸ், வாழைப்பூ, பழாக்கா, ஈரப்பழா, கஜூ என்டு கறியள், டெசர்ட்டுக்கு சவ்வரிசி கஞ்சி, ஐஸ்கிறீமோட தென் மாகாணத்துக்கே ஸ்பெஷலான தயிரும் பாணியும் இருந்துது. ஓலையில கூரை போட்ட குடிசைகளில கெவுன், கொகிஸ், அத்திரா, என்ட சிங்கள சிற்றுண்டி வகையள் குடிப்பதற்கு செவ்விள நீர் என்டு பல இடங்களில வச்சிருந்தவை. சாரமும் வெள்ளை டீ சேர்ட்டும் போட்ட பெடியள் பரிமாறுறதுக்கு நின்டவை. முஸ்லிம் விருந்தினருக்கு என்டு தனியா ஒரு இடத்தை ஒதுக்கியிருந்தவை. அந்த இடத்தில வஞ்சிர மீன், இறால், அன்னாசி கறி, தயிர் சம்பல், கஜூ, வட்டலப்பம் என்டு கிடந்துது.”

“எப்பிடியோ வந்தவை வாய்க்கு ருசியா சாப்பிட்டிருப்பினமென்ன.”

“பின்ன 5 ஆயிரம் விருந்தினர்கள் பகலில வந்தவை. அந்தியில ஊருக்கெல்லாம் விருந்து. 15 ஆயிரம் ஊர் ஆக்கள் வந்து வயிறாற சாப்பிட்டுப்போட்டு மணமக்களை வாழ்த்திப்போட்டு போனவை. சாப்பாடு மட்டுமில்ல சின்னராசு. உந்த கலியாணத்தில பல விசயங்கள் எளிமையாக் கிடந்துது. மணமகள் மணமேடைக்கு காரில வரேல்ல. மாட்டு வண்டியில வந்தவ.”

Comments