சுங்கப் பணியாளர்கள் இன்றும் வேலைநிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

சுங்கப் பணியாளர்கள் இன்றும் வேலைநிறுத்தம்

மீள் ஏற்றுமதி விவகாரம் தொடர்பில் சுங்கத்திணைக்களம் ஆரம்பித்துள்ள விசாரணைக்கு ஏதுவாக சுங்கப்பணிப்பாளர் நாயகமாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் அதே பதவியில் நியமிக்கப்படும் வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லையென சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதானமாக மிளகு மீள் ஏற்றுமதியில் பாரிய மோசடி இடம்பெற்று வருகிறது. இது தொடர்பாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ். சார்ள்ஸின் பணிப்புக்கமைய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இவரை இப்பதவியிலிருந்து நீக்கினால் அந்த விசாரணைகள் நடைபெறுவதில் சந்தேகமுள்ளது. அரசியல் ரீதியாக இந்தப் பதவிக்கு ஒருவர் வரும் போது இந்த விசாரணைக்கு தடை ஏற்படலாம். எனவே, தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த மோசடி தொடர்பை முழுமையான விசாரணைக்கு ஏதுவாக பணிப்பாளர் நாயகம் அதே பதவியில் இருக்க வேண்டும்.

மிளகு மீள் ஏற்றுமதியினால் எமது உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பாரிய நன்மையும் இல்லாமல் செய்யப்படுகிறது என்றும் சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இலங்கை சுங்கப் பணிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இந்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 02 பில்லியன் ரூபா நட்டம் அரசுக்கு ஏற்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் திடீரென இடமாற்றப்பட்டு அதற்குப் பதிலாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னையவரையே நியமிக்க வேண்டும் என இலங்கை சுங்கப் பணிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் போராட்டம் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நி​ைலமை காரணமாக அரசாங்கத்திற்கு நாளொன்றிக்கு கிடைக்கின்ற சுமார் 04 பில்லியன் ரூபா வருமானம் 02 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 

Comments