750 ரூபாவுக்கு மேலதிகமாக அரசு 250 ரூபாவை வழங்கவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

750 ரூபாவுக்கு மேலதிகமாக அரசு 250 ரூபாவை வழங்கவேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அவர்களுக்கு எதிரான துரோக செயற்பாட்டின் மெகாதொடர் நாடகத்தின் ஒரு அங்கம் ஜனவரி 28ம் திகதி அலரி மாளிகையில் அரங்கேறியுள்ளது.

பெருந்தோட்ட வரலாற்றில் காட்டிக்கொடுப்பும் துரோகமும் சங்கங்களுக்கு கைவந்த கலையாகவே இருந்திருக்கிறது. 2018 அக்டோபர் 15ம் திகதி காலாவதியாகிய கூட்டு உடன்படிக்கை ஒக்டோபர் 16 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டு தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு ஏதுவான வழிவகையை செய்து உயர்த்தியிருக்க வேண்டும். மூன்று மாதம் இழுத்தடிக்கப்பட்டு இறுதியாக கடந்த 28ம் திகதி 750 ரூபாய் என்ற வரையறைக்குள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் 1000 ரூபாவை மையப்படுத்திய போதும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாம் 1281 ரூபாவை வலியுறுத்தினோம். அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் மாத சம்பளத்தின் அடிப்படையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு நாள் அடிப்படை சம்பளத்தின் சமாந்தரமே இது.

எம்முடைய கோரிக்கை மாதச் சம்பளமாக இருந்துங்கூட தற்போதைய நடைமுறையில் அரச ஊழியர்களுக்கு சமாந்தரமான சம்பளத்தை வலியுறுத்தினோம்.

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளப் போராட்டத்தைக் கையில் எடுத்தபோது, 1000 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்காவிட்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சூளுரைத்த ஆறுமுகன் தொண்டமான் வெறுமனே 750 ரூபாவை பெற்றுக்கொடுக்க வழிசமைத்ததன் மூலம் ஒரு புறம் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது, தனது சவாலின்படி பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகவுமில்லை.

கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் இன்னுமொரு நபரான வடிவேல் சுரேஸ் ஒருமுறை மண்ணெண்ணையுடன் பாராளுமன்றத்திற்குள் சென்று தீக்குளிக்க முயன்றவர், அதன்பிறகு சொச்ச ரூபாய்க்கு பணிந்து போனார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது அந்த அரசுடன் இணைந்து ஆயிரம் ரூபாவுக்காக பேசியவர், மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்து 750 ரூபாவுக்கு தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைத்துள்ளார்.

இந்த மலையகத் தொழிற்சங்கங்களின் செயற்பாடானது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு சமனானதாகும். இந்த நிலைமைகளைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, மலையகத்து தமிழ் சமூகம், மலையக இளைஞர்கள், தமிழ் புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள் கவனத்தில் கொண்டு இவர்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டும்.

இவர்களை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கும் பொழுது, சம்பள உயர்வு என்ற விடயம் மாற்றுக் கருத்துக்களுடன் வலுப்பெறும். அதனை வலுப்பெறச் செய்ய மலையகத்தின் சிவில் சமூகமும் அணிதிரள வேண்டும்.

அதற்குத் தலைமை தாங்க அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும், அதற்கு தலைமைத் தாங்குகின்ற தேசிய தொழிற்சங்க மத்திய நிலையமும், அதற்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியும் தயாராகவே இருக்கிறது.

700 ரூபாவில் முடக்கப்பட்ட சம்பள உயர்வு என்னும் உயில் இன்னும் 2 வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அந்நிலையில் அரசியல் ரீதியான எழுச்சி மலையகம் எங்கும் உருவாக வேண்டும். கடந்த முறை கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 16 மாதத்திற்கான நிலுவை சம்பளம் இன்னும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 மாத நிலுவைச் சம்பளத்தை தேயிலை அதிகார சபையில் (Srilanka Tea Board) இருந்து கடனாக கம்பனிகளுக்கு குறைந்த வட்டியில் பெற்றுக்கொடுத்து 3 மாத நிலுவை சம்பள சர்ச்சையை முடிப்பதற்கு அமைச்சரான நவீன் திசாநாயக்க முடிவெடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நிலுவைச் சம்பளத்தைக் காரணம் காட்டி தேயிலைச் சபையின் பணத்தில் கைவைப்பதென்பது முற்றிலும் தவறானது. இந்த மோசடிக்கு தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் முழுமையான எதிர்ப்பை காட்டவேண்டும்.

கடந்த முறை கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் கொடுப்பனவுகளோடு சேர்த்து ஒரு தோட்ட தொழிலாளிக்கு 730 ரூபா கிடைத்தது. 2 வருடத்திற்கு பிறகு செய்து கொண்ட தற்போதைய உடன்படிக்கையில் 750 ரூபா கிடைக்கிறது. கடந்த 2 வருடங்களிற்கு பிறகு வெறும் 20 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

எனவே அரசாங்கம் இலங்கையின் தேசிய வருமானத்தில் 15 சதவீதத்தைப் பெற்றுத்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

கம்பனியால் வழங்கப்படும் 750 ரூபாவுக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் பங்களிப்பாக 250 ரூபாவை வழங்கி ஒட்டுமொத்தமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்துத் தேயிலைச் சபையின் பணத்தில் கைவைப்பது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறையே.

 

Comments