7வது முறையாக பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை | தினகரன் வாரமஞ்சரி

7வது முறையாக பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை

கடந்த வாரம் அவுஸ்திரேலிய மெல்பேர்ன் நகரில் முடிவுற்ற இவ்வாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் ஷிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் ரபாய் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார்.

மகளிருக்கான போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா செக் குடியரசின் பெட்ரோ கிவிட்டோவாவை இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் ஒசாகா முதன் முதலாக அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

இவ்வெற்றி ஜோகோவிச்சின் 7வது வெற்றியாகும். இவர் இதற்கு முன் 2008, 11, 12, 13, 15, 16ஆம் ஆண்டுகளிலும் அவுஸ்திரேலிய பகிங்க சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலிய பகிரங்கத்தை அதிக முறை வென்றவர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். இதற்கு முன் சுவிச்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரரும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரோய் எமர்சன் இருவரும் தலா 6 முறை இப்பட்டத்தை வெற்றி பெற்றுள்ளனர்.

ஜோகோவிச்சின் சிறந்த போட்டியாளரான ரபால் நடாலுடன் இதுவரை 53 போட்டிகளில் இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8 ஆட்டங்கள் கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதியாட்டங்களாகும். இவ் வெற்றியின் மூலம் நடாலுடனான போட்டிகளில் 28 ஆட்டங்களில் ஜோகோவிச் வென்றுள்ளார்.

31 வயதான ஜோகோவிச்சுக்கு இது 15வது கிராண்டஸ்லாம் பட்டமாகும். கடும் சவாலாக இருந்த இவ்வாட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதற்கு முன் இதே ஜோடி 2012ம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்க இறுதிப் போட்டியில் மோதிய போது சுமார் 6 மணி நேரம் அவ்வாட்டம் நீடித்தது. இது கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் நீடித்த போட்டியாகும்.

டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் தொடரில் சம்பியன் பட்டம் பெற்றவர்கள் வரிசையில் மூன்றாமிடத்தை நோவக் ஜோகோவிச் பெற்றுள்ளார். முதலிரு இடங்களிலும் 20 தடவைகள் பட்டம் வென்ற சுவிச்சர்லாந்தின் 37வயது ரொஜர் பெடரரும், 17 முறை வென்ற 32 வயது நடாலும் உள்ளனர்.

இவ்வெற்றியுடன் தொடர்ச்சியாக மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்றிகொண்டுள்ளார் ஜோகோவிச். கடந்த ஆண்டில் விம்பிள்டன் தொடரில் பங்கேற்று கிராண்ட்ஸ்லாம் படம்பெற்ற அவர் அதன் பின் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்றார். தொடர்து கடந்தவாரம் முடிவுற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத்திலும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தொடர் முடிவுடன் சர்வதேச டென்னிஸ் தரவரிசைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலிரு இடங்களில் எதுவித மாற்றமும் இடம் பெறாவிட்டாலும். நான்காவது சுற்றுடன் வெளியேறிய சுவிச்சர்லாந்து பிரபல டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் மூன்றாவது இடத்திலிருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் 21 வயது வீராங்கனையும் தரவரிசையில் 4வது இடத்திலிருந்த நயோமி ஒசாகாவும் 6ம் இடத்திலிருந்த செக் குடியரசின் பெட்ரோ கிவிட்டோவாவும் மோதினர். சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டில் டைபிரேக்கரில் வெற்றி பெற்ற ஒசாகா இரண்டாவது சுற்றில் கடுமையான போராட்டத்துக்குப் பின் தோல்வியுற்றார். மூன்றாவது சுற்றில் 6-−4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

நயோமி ஒசாகா பட்டம் பெற்றதோடு டென்னிஸ் தரவரசையில் மூன்று இடங்கள் முன்னேறி முதலாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். இது ஆசியக் கண்ட டென்னிஸ் வீரர் ஒருவரின் அதி உச்ச சாதனையாகும். 21 வயதுடைய ஒசாகா இளம் வயதில் இப்பட்டம் பெற்ற இரண்டாவது வீரராவார். இதில் முதலிடத்தில் 2010ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கரோலின் வெஸ்னியாக்கி 20 வயதில் இச்சாதனையைப் புரிந்துள்ளார். அத் தொடர் முடிவில் மகளிர் டென்னிஸ் தரவரிசையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆறாம் இடத்திலிருந்து இறுதிப் போட்டிக்குத் தெரிவான செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையாக இருந்துவந்த கடந்த வருடங்களில் சோபிக்காதிருந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இத்தொடரில் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறிய அவர் தரவரிசையில் 16வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார். இதுவரை முதலிடத்திலிருந்த ரூமெனியா வீராங்கனை சிமோனா ஹெலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் முடிவுற்ற பின் டென்னிஸ் வீர, வீராங்கனைகளின் தரவரிசை வருமாறு:

 

Comments