ஐ. நாவில் கால நீடிப்பு வேண்டாம் என்பதில் தமிழினம் உறுதியாயிருக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஐ. நாவில் கால நீடிப்பு வேண்டாம் என்பதில் தமிழினம் உறுதியாயிருக்க வேண்டும்

“இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று ஆகிவிட்ட நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன், சர்வதேசத்தின் உதவியுடன் வடகிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்று தீர்மானிக்கும் உரிமை  செயற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி:- தடம்புரண்டுள்ள தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதில்:- தமிழ் தேசிய அரசியலில் வகிபாகமாக இருக்கக்கூடிய  தனி மனிதர்களும், அதில் தலைமை தாங்கும் ஒரு சிலரும் தடம்புரலாமே தவிர, தமிழ் மக்கள் தடம்புரளவில்லை. மக்கள் உறுதியாகவே இருக்கின்றார்கள். 

கேள்வி:- ஒவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுவது தொடர்ச்சியாக இடம்பெறும் ஒன்று? இதில் ஐ.தே.க விற்கான ஆதரவு ஒற்றையாட்சியின் கீழ் என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்துள்ளது? இதைப் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதில்:- யுத்தம் நிறைவடைந்ததற்கு பிறகு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எமக்குள் இருந்தன. குறிப்பாக, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தது. போர்க்குற்றத்திற்கு ஆதரவாக இருந்த இருவரில் ஒருவரிற்கு ஆதரவு அளித்ததன் மூலம் நாங்கள் போர்க்குற்றத்தை வலியுறுத்தக் கூடிய தார்மீக உரிமைக்கு அபாயம் ஏற்படும் நிலமை இருந்தது. 

நாம் ஆதரித்த வேட்பாளர் தோல்வியடைந்தார். அதன்விளைவாக, ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டார். இந்தப் பாடத்தை நாங்கள் சரியாகப் படித்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் சர்வதேசமும் வேறு பலரும் சொல்கின்றார்கள் என  தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் மாத்திரமல்ல, முஸ்லீம் மக்களும் ஆதரித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஒரு தேசிய அரசாங்கம் உருவானது.  

அந்த அரசாங்கத்தினால் தீர்க்க முடியாத பிரச்சினையை, தீர்க்க விரும்பாத பிரச்சினையை, சிறுபான்மை அரசாங்கமாக இருக்கும் இந்த அரசாங்கம் எவ்வாறு தீர்க்கும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. 

குறிப்பாக, ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜனநாயகத்திற்கு விரோதமாக வந்தார் என்ற காரணத்தினால், அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி குறுகிய காலத்திற்குத் தான் நீடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அவ்வாறான ஒரு அரசாங்கத்தை நிபந்தனைகள் எதுவுமின்றி ஆதரிக்க கூடாது. இப்போது, அரசியல் தீர்வு கிடைக்காது என்ற 5 அம்ச கோரிக்கையை முன்வைத்திருந்தோம், அவ்வாறு, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதா? வாக்குறுதிகள் பெறப்பட்டதா என்று எதுவும் தெரியாமல், தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்பந்தமாகவும், மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் பகைமை பாராட்டப்படுகின்றது.  

இது ஒரு தவறான விடயம். மீண்டும் மஹிந்த கையைக் காட்டுபவர் ஜனாதிபதியாக வரமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இன்னும் ஓராண்டில், நடைபெறவுள்ள தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவு செய்யப்படமாட்டார் என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை. 

எதிர்வரும் காலங்களில் சிங்கள பௌத்த கோசத்தை முன்வைக்கக்கூடியவர்கள் வெற்றி பெற முடியாது, என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆகவே, இந்த யதார்த்த நிலைகளை உணர்ந்து, எமது காய் நகர்த்தல்களை செய்ய வேண்டும்.

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முதலமைச்சர், கூட்டமைப்பில் இருந்து பிளவுபட்டுள்ளார். அவரை மீண்டும் இணைத்து அவர் தலைமையில் தலைமைத்துவம் அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரா? ஏன் இவ்வாறான பிளவுகள் வலுப்பெற்றன? 

பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகள் சரியில்லை எனக் கூறியே முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறியிருக்கின்றார். அதற்கு மேலதிகமாக, ஒரு தனிநபர்களின் தாக்குதல்கள் தான் உச்சக்கட்டத்தை நோக்கிக் கொண்டு சென்றது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், விக்னேஸ்வரனை  தாக்கியதும், பதிலுக்கு அவர் சுமந்திரனை தாக்கியதும், இன்று இடைவெளியைப் பெரிதாக்கி, அவரை விலக வைத்துள்ளது. 

அவர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கியுள்ளார். எதிர்காலத்தில் வேறு சில கட்சிகளுடன் இணைந்து செயற்படவும் அவர் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி, தாங்கள் இரு கட்சியுமே இணைந்து செயற்பட வேண்டும், வேறு கட்சிகள் இணையக்கூடாது என்று கூறுகிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் கட்சி இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.  

அனந்தி சசிதரனின் கட்சி, அவரது கட்சியுடன் இணைந்து கூட்டணியாக செயற்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றது. எவ்வாறு இருந்தாலும் கூட, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலாக இருக்கட்டும், மாகாண சபைத் தேர்தலாக இருக்கட்டும் தமிழினத்தின் பெருமளவிலான பிரதிநிதிகளை அல்லது நம்பிக்கையைப் பெற்ற பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழக்கக்கூடிய ஆபாயமான சூழ்நிலை இருக்கின்றது. அது தமிழினத்திற்கு நல்லதன்று. ஏனெனில், நாங்கள் நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறினால், சிங்கள பேரினவாதிகளுக்கு வெற்றியாகத் தான் அமையும்.  

ஆகவே, இதை வலியுறுத்தக் கூடிய விதத்தில் உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் தேசத்திலும் சரி கூட்டமைப்பை இணைந்து செயற்பட முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.  பல பேச்சுவார்த்தைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன்.   ஆனால், இதற்கான சரியான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும். எமது மத்தியில் ஒற்றுமை குலையுமாக இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கும்.  

கேள்வி:- மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் அறிக்கை வெள்ளியன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டதே? காபன் அறிக்கை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? 

புதில்:- மன்னார் புதைக்குழி விடயம் நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்னால் இருக்கின்றது. தொடர்ந்தும் அவற்றை அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். அகழ்வாராச்சியில், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தாலும், அவர் நேர்மையாக செயற்படுகின்றார் என்பதனை அனைவரும் ஏற்றிருக்கின்றார்கள். ஆகையினால், சந்தேகப்படவோ, வேறு விடயங்களைப் பற்றி சிந்திக்கவோ அவசியமில்லை. இதுவரை 300 ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 26 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விடயம். காபன் அறிக்கையின் பின்னர் தான் ஒரு முடிவிற்கு வர முடியும். அதற்கு முன்னர், அவர் செய்தார், இவர் செய்தார் என்பதற்கு மேலதிகமாக, என்றைக்கும், மன்னார் புதைகுழி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. போர் மிகப் பெரிதாக வெடித்து, இந்திய தலைநகரில் பயிற்சிகள் வழங்கிய போதும் கூட மன்னார் நகரம் எமது போராளிகளின் கட்டுப்பாட்டில் எப்போதும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் தான் இது பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும், காபன் அறிக்கையின் மூலம் பல விடயங்கள் தெரியவரும் என நாங்கள் நம்புகின்றோம். 

கேள்வி:- வெளிநாட்டில் இருந்து அவ்வறிக்கை வரும் பட்சத்தில் தமிழருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அது அமையலாம் என சொல்லப்படுகின்றதே?  

பதில்;- அவ்வாறு சுமந்திரன் கூறியிருக்கின்றார். அவ்வாறு அதிர்ச்சி ஏற்படுத்தப்படுமாயின், இராணுவம் இதைச் செய்யவில்லை. ஏதாவது ஒரு இயக்கம் செய்திருக்கலாம் என்ற கருத்துப்பட தெரிவித்திருக்கின்றார். அவர் சொல்லும் கருத்தைப் பார்த்தால், இந்திய இராணுவமும் செய்யவில்லை என சொல்கின்றார். அப்படி பார்த்தால், விடுதலைப் புலிகள் இயக்கம் அல்லது இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் பை குற்றஞ்சாட்டுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே, இவை எல்லாவற்றிற்கும் காபன் அறிக்கை நல்ல பதிலைச் சொல்லுமென நம்புகின்றோம். 

கேள்வி:- எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ் அரசியல் தரப்பினரின் வகிபாகம் எவ்வாறானதாக அமைய வேண்டும்?  

பதில்: கடந்த 5 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பெருமளவான கூட்டத்தொடர்களில் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். கடந்த 4 ஆண்டுகளில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி முடிந்ததுவிட்டது. 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் 6 மாத கால அவகாசம் வழங்கியதன் பின்னர், ஒக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட 30/1 என்ற தீர்மானம் ஒரு உள்நாட்டு நீதிப் பொறிமுறையாக அதுவும்  வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட  கலப்பு நீதிப் பொறிமுறை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டாலும், அதற்கு ஒன்றரை வருடம் என்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. 2017 மார்ச் வரை அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. 

அதுவரை இலங்கை அரசு எதையும் செய்யவில்லை. 2017 மார்ச்சில் 34/1  என்ற தீர்மானத்தின் கீழ் மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீடிப்பு வழங்கப்பட்டது. இந்தக் கால நீடிப்பு 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது. 

ஆனால், பெப்ரவரி 25 ஆம் திகதி கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படுகின்றது. இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில், இனிமேலும், இலங்கை அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமை தெளிவாக இருக்கின்றது. ஆகவே, கடந்த 6 மாதத்திற்கு முன்னர் வடமாகாண சபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று. பொதுச் சபைக்கு எடுத்துச் செல்வதன் ஊடாக அது ஒரு பிரேரணையாக செய்யப்பட்டால், 47 நாடுகளில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, 21 வாக்குகள் எமக்கு திட்டவட்டமாக இருக்குமாயின், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இவ்விடயத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு  பாரப்படுத்தப்பட்டால்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்றமன்றின் மூலமான விசாரணை என்பதும் சாத்தியமானதே.  அரசாங்கத்திற்கு எக்காரணம் கொண்டும் கால நீடிப்பு வழங்க கூடாது என்பதை ஈழத் தமிழ் இனம் உறுதியாக பதிவிட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.  

கேள்வி: எதிர்வரும் 14 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஒற்றையாட்சியின் நிலைப்பாட்டில் இருப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வை வழங்க ஆதரவு வழங்குவாரா? பிரதமரின் வருகை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதில்:- தேர்தலை இலக்கு வைத்து சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணுகின்றார்கள். பாரிய ஒதுக்கீடு என எண்ண முடியாது. கிடப்பில் உள்ள பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை அவர் செய்ய முடியும். ஆனால், மிக கவனமாகவும், நிதானமாகவும், பிரதமருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்.  

பிரதமரின் மறைமுக நிகழ்ச்சி நிரலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காட்டியுள்ளார்கள். யாழ்.போதனா வைத்தியசாலைக்கான சிற்றூழியர் நியமனத்தில் 60 வீதமானவர்களை சிங்கள சிற்றூழியர்களை நியமித்துவிட்டு, இங்கே வந்தால், மக்கள் வரவேற்பார்களா?

Comments