ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“நேத்து நான் வந்தனான். உங்களை காணேல்ல.”

“ என்னோட பழைய பிரெண்ட் ஒருத்தர் கொழும்பில இருந்து வந்தவர். வவுனியாவுக்கு போக வேணும் என்டு என்னையும் கூட்டிப்போனவர். உன்னையும் கூட்டிப் போகலாமென்டு பாத்தனான் நீ இருக்கேல்லயே.”

“நானண்ண நேத்து என்ட கூட்டாளி நடராசாவின்ட மாமாவின்ட வீட்டுக்கு போனனாங்கள. நீங்கள் சொல்லியிருந்தியள்; என்டா நான் இருந்திருப்பனான்”

“என்னோட கூட்டாளி வாறனென்டு ஒரு மாசமா சொல்லிக் கொண்டிருந்தவர், நேத்து வருவாறென்டு எனக்கு தெரியாதே. தெரிஞ்சிருந்துதென்டா நான் சொல்லியிருப்பனென்ன.”

“சரி எங்க போனியள்?”

”வவுனியாவில ஆற்றல் அரசி என்டு பனையால செய்ற கைப்பணி பொருட்களின்ட நிலையம் ஒன்டு கிடக்கு. அதைப்பாக்க போனாங்கள்.”

“இங்கயும் அப்பிடி இடங்கள் கிடக்கென்ன.”

“இங்கயும் கிடக்குத்தான். ஆனா உந்த வவனியா அமைப்பு நல்ல பிரபலம். உந்த ஆற்றல் அரசி அமைப்பு 2016 நவம்பரில பாகிஸ்தானிலயும் 2017 ஜனவரியில இந்தியாவிலயும் நடந்த கண்காட்சிகளில பங்குபற்றியிருக்கினம் உத மட்டுமில்ல பனையால செஞ்ச கைப்பணி பொருட்களை அவையள் அமெரிக்காவிலயும் காட்சிப்படுத்தியிருக்கினம். உதுக்கு பரிசுகளும் வாங்கியிருக்கினம். உதையெல்லாம் நாலு வருசத்தில செஞ்சிருக்கினமென்டா பாராட்டத்தான் வேணுமென்ன.”

“நாலு வருசத்தில நல்ல திறமை காட்டியிருக்கினமென்ன?”

“பனை ஓலையால நெய்யிற சாமான் வாங்குற கூடையள், கேக் டிரே, ஹேன்ட் பேக், பெட்டிகள் என்டு நிறைய பொருட்கள அவையள் செய்கினம்.”

“நிறைய ஆக்கள் வேலை செய்கினமோ?”

“ஆரம்பத்தில நாலு பேர்தான் வேலைக்கிருந்திருக்கினம். இப்ப 23 பேர் இருக்கினம்.”

“அவையள்தான் எல்லா பொருட்களையும் செய்கினமென்ன?”

“ஓமோம். உது சின்னராசு. கூட்டுறவு முறையில நடக்கிற ஒரு சங்கத்தைப் போல இயங்குது சரியே. உதுக்கு ஆரம்பத்தில பனை அபிவிருத்திச் சபையால உதவி செஞ்திருக்கினம். பின்னால ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகளின்ட அபிவிருத்தி திட்டம் என்டு பல வழிகளில உதவியள் கிடைச்சிருக்கு. ஐக்கிய நாடுகளின்ட அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைத்த பயிற்சியினால மனதை ஈர்க்குற மாதிரி வர்ணங்களை பயன்படுத்துறது எப்பிடியென்டு அங்கு வேலை செய்றவைக்கு தெரிஞ்சிகொள்ளவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.”

“உவையின்ட சாமான்கள் நல்லா விக்குதோ?”

“உங்க வேலை செய்யிறவை இரவு பகலா கஷ்டப்படுகினம். ஆனா மாசம் 30 ஆயிரம் வரையில வருமானம் பெறுகினம். சாமான்கள் விக்காம உவைக்கு சம்பளம் கொடுப்பினமோ?”

“யாவாரத்தை பெருக்கினமென்டா இன்னும் உழகை கேலுமென்னஃ”

“ஓமோம். உதுக்கும் நடவடிக்கை எடுத்திருக்கினம். கொழும்பில உள்ள பிரபல கைப்பணி பொருட்கள் கடையான லக்சலவில இவையின்ட பொருட்களை விற்பனைக்கு வச்சிருக்கினம். வவுனியாவிலயும் புதுசா ஒரு விற்பனைசாலைய திறந்திருக்கினம். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் இவையளிட்ட பேசிக் கிடக்குது”

“அப்ப உந்த பொருட்கள் வெளிநாட்டுக்கு போவுமென்ன?”

“உந்த வேலைய அவை எப்பவோ ஆரம்பிச்சிப்போட்டினம்.”

“அண்ண எங்கட ஊரில எங்க பாத்தாலும் பனை மரமாத்தான் கிடக்கு ஆனா கொழும்பில நான் ஒரு பனை மரத்தைக் கூட காணேல்ல.”

“நீ சொல்லுறது சரிதான். எங்கட மண் பனை மரம் வளரக்கூடிய வளத்தோட இருக்குது. ஆனா கொழும்பு பிரதேசம் தென்னை மரம் வளரக்கூடிய வளத்தை கொண்டிருக்குது. ஆனா தமிழ்நாட்டில நிறைய இடங்களில பனை மரம் வளருது. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலயும் பனை மரம் வளருது கண்டியோ.”

“எங்கட நாட்டில வடக்கு கிழக்கு பகுதியில மட்டும்தான் பனை மரம் வளருதென்ன?”

“கொழும்பில கோல்பேஸ் கிடக்குதில்லே. அங்கயும் ஒரு சில பனை மரங்களை நட்டுபபாத்தவை ஆனா ஒன்டு கூட சரியா முளைக்கேல்ல எல்லாம் நறுங்கி பட்டுப்போட்டுது.”

“பனை மரத்திலயும் தென்னை மரத்திலயும் இருக்கிற எல்லா பகுதியும் உணவாவோ இல்லயென்டா வேறு தேவைக்கோ எடுக்கப்படுகுது. வீசி எறியிறதுக்கென்டு உதில ஒன்டுமில்ல. ஆனா தென்னை மரத்தைப் போல பனை மரத்தில கொஞ்ச காலத்திலயே பலன் கிடைக்காது. அப்பிடி குறுகிய காலத்தில பயன் கிடைக்க வழியிருக்கோ என்டு ஆராய வேணும்.”

“பனை மரத்தின்ட உயரத்தை குறைக்க முடியுமென்டா.”

“கொஞ்ச காலத்திலயே நுங்கு சாப்பிட நினைக்கிறியோ?”

“நுங்கு மட்டுமே?”

“கள்ளும் கிடக்குது என்டது தெரியும்.”

Comments