அடிப்படை உரிமைகளுக்கு ஆப்பு; தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு | தினகரன் வாரமஞ்சரி

அடிப்படை உரிமைகளுக்கு ஆப்பு; தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு

இரா. புத்திரசிகாமணி   

தெனியாய இத்தகந்தவில் அமைந்துள்ள இலங்காபுரி (லங்காபேரி) தோட்டத்தில் கடந்த மூன்று காலத்திற்கும் மேலாகத் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு அவர்களை வெளிவாரி வேலையாட்களாக நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

தேயிலைத் தோட்டக் காணிகளைச் சிறு சிறு துண்டாகப் பிரித்துத் தொழிலாளர்களுக்கு குத்தகை என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளர்கள் பறித்துக்ெகாண்டு வரும் கொழுந்துக்கு மாத்திரம் பணம் செலுத்தப்படுகிறது. இதனை முன்னதாக அறிந்துகொண்டிராத தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமோ வேறு சட்ட ரீதியான கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு நிர்வாகம் ஆசை வார்த்தை கூறி மோசம் செய்திருப்பதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தினகரன் வாரமஞ்சரியிடம் தெரிவித்தனர்.

சப்பிரகமுவ மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் பிரிக்கும் எல்லைகளாக சில தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. ஹேஸ் குரூப், அனில்கந்த, பணிங்கந்த, லங்காபேரி என்பன விசேடமானவை. இன்னும் பல தோட்டங்களும் இருக்கின்றன.

இத்தோட்டங்களை ஹப்புகஸ்தன்ன, மத்துரட்ட பிளாண்டேசன் கம்பெனிகள் நிர்வகிக்கின்றன. மழைக் காலமோ, வெயில்காலமோ என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ணம். இதனால், வறட்சி என்ற சொல்லுக்கே இடமில்லாமல் தேயிலைச் செடிகள் செழித்து வளரும் பூமி. தொழிலாளர்களுக்கு முப்பது நாளும் தொழில் கிடைக்கும், நிறைய சம்பளம் வாங்குவார்கள். தோட்ட வேலையை விட்டு வெளியே செல்வதே இல்லை. தோட்டத்தில் சம்பளத்திற்கு வேலை, ஓய்வு நேரங்களில் வீட்டுத் தோட்டங்களில் வீட்டுப் பாவனைக்கான மரக்கறி, வாழை போன்றவற்றை பயிர் செய்கின்றனர். உப்பு, மண்ணெண்ணெய், தேங்காய் எண்ணெய் வாங்க மட்டுமே டவுனுக்குப் போகவேண்டும்.  

நாங்கள் தொழில் செய்யும் தோட்டம், இது எங்கள் தோட்டம், பாட்டன், பூட்டன் உண்டாக்கிய தோட்டம் என்று உரிமை கொண்டாடுவார்கள். தேயிலை தோட்டத்திலே பிறந்தோம். தேயிலை செடிக்கே உரமாகின்றோம். ஆனால் இன்று போக்கிடம் இல்லாத அநாதைகளாக்கப்பட்டுள்ளோம் என்று கண்ணீர் வடிக்கின்றனர். லங்காபுரி தோட்ட மக்கள். இராவணன் ஆண்ட நாடு இலங்காபுரி அந்தப் பெயரையே கொண்டது இந்தத் தேயிலைத் தோட்டம். இன்று சிதைவடைந்து Lankaperiya லங்காபுரிய என்றாகிவிட்டது.  

சுமார் 350ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இத்தோட்டம் இரண்டு   பிரிவுகளைக் கொண்டது. இங்கே தேயிலையுடன் ஏலக்காயும் பயிரிடப்பட்டு சாதனை படைத்தனர்.   இவ்வளவு செழிப்புமிக்க தோட்டத்தை என்று இந்த தோட்டக் கம்பெனிகள் எடுத்ததோ அன்றே சனியன் பிடித்துவிட்டது. வருமானத்தை மட்டுமே சுரண்டிய கம்பெனிக்காரர்கள் பராமரிப்பையும் அபிவிருத்தியையும் கைவிட்டு விட்டனர். எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று பகல் கொள்ளையடிக்கின்றனர். நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். நடுத்தெருவில் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்  என்று  புலம்புகின்றனர் லங்காபுரி மக்கள்.  

மத்துரட்ட பிலான்டேசனின் மோசடி  

தோட்டம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி ஆரம்பத்தில் சிறு சிறு துண்டாகப்பிரிந்து தொழிலாளர்களுக்கு குத்தகை என்ற பெயரில் கொடுத்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்த நேரம் போக தொழிலாளர்களே புல்லு வெட்டி, கவ்வாத்து வெட்டி, உரம் போட்டு, சொந்த வீட்டுத் தோட்டம் போல் பராமரித்தனர். ஆனால், அங்கே பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்தை தோட்டத்திற்கே கொடுக்க வேண்டும். எந்தவிதமான செலவும் இன்றித் தேயிலையை மட்டும் பெற்றுக் கொண்டது தோட்ட நிர்வாகம். வேலை நாள்போக மேலதிகமான வருமானம் தானே என்று தொழிலாளர்களும் அசமந்தமாக இருந்து விட்டனர். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அதாவது பயிர் செய்யும் காணிக்கு உரிமை கொண்டாட முடியாது. நிர்வாகம் கேட்கும் போது திருப்பி கொடுத்து விடவேண்டும் என்று அது மாதத்திற்கு ஒருமுறை தொழிலாளர்களிடம் ஒப்பம் வாங்கி வைத்துக் கொண்டுள்ளது நிர்வாகம்.  

ஆனால், கடந்த ஆறுமாத காலமாக இந்த மத்துரட்ட பிளான்டேசன் தொழிலில் எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கே ஆப்புவைத்துள்ளது. மாதாமாதம் இவர்கள் எடுத்த கொழுந்தின் எடைக்கு மட்டும் கணக்குப் பார்த்து மாதக் கடைசியில் வழங்கி வந்துள்ளது.

சட்ட ரீதியான கொடுப்பனவுகள் எதுவுமே இல்லை  

இத்தொழிலாளர்களுக்கு செக்ரோலில் பெயர் போடுவது இல்லை. ஊழியர் சேமலாபநிதி, ஊழியர்கள் நம்பிக்ைக நிதி என்பன வழங்கப்படுவது இல்லை. இவ்வளவு காலமும் மறைமுகமாக செய்து வந்த தோட்ட நிர்வாகம் கடந்த மாதம் முதல் வெளிப்படைமாக அறிவித்து விட்டது. இனிமேல் உங்களுக்கு தோட்டத்தில் வேலை இல்லை. எடுக்கும் கொழுந்திற்கு மட்டுமே காசு கொடுக்கப்படும். தினசரி வழமை போல் நீங்கள் போய் கொழுந்து எடுத்து தோட்டத்திற்கு கொடுக்க வேண்டும் அதாவது அன்றாட கூலிக்கு வேலை; வேறு எந்த சலுகைகளும் கிடையாது என்று அறிவித்துவிட்டனர்.  

அதிரடியான அடாவடித்தனம்  

இப்படி கூறியதோடு நின்று விடவில்லை. எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி கடந்த மாதம் வரை தோட்டத்தில் வேலை செய்த காலத்தைக் கணித்து எல்லா தொழிலாளர்களுக்கும் சேவைக்காலப் பணம் என்று கூறி சேவைக் கேற்ப காசோலைகளை வழங்கிவிட்டனர். மற்றும் ஒரு விடயம் அதிர்ச்சியை அளிக்கின்றது.

அதாவது ஊழியர் நம்பிக்கை நிதியத்தை மீளப்பெறுவதற்கான விண்ணப்பங்களை தோட்ட நிர்வாகமே பூர்த்தி செய்து தொழிலாளர்களிடைடே கொடுத்துள்ளது. அதாவது, இனிமேல் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று துண்டித்துள்ளது.  

தொழில் பாதுகாப்பு சட்டங்கள் ஏட்டளவில் மட்டும் தானா?  

தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்காகப் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  

* நிரந்தமாகத் தொழில் செய்யும் தொழிலாளியை அவருடைய விருப்பம் இன்றி வேலை நீக்கம் செய்ய முடியாது.  

* ஒரு தொழிலாளி விரும்பும் பட்சத்தில் மேலும் தொழில் செய்யலாம்.  

* மாதாந்த வருமானத்திற்கு ஊழியர் சேமலாபதி நம்பிக்கை நிதியம் என்பன கட்டாயமாக வழக்கப்பட வேண்டும்.  

* ஒரு வருட சேவைக்கு அரைமாதச் சம்பளம் என்ற அடிப்படையில் சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.  

* ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைக்கு சேர்ந்தால் அவர்களுக்கும் சட்ட ரீதியான கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.  

ஆனால், இந்தத் தோட்டத்தைப் பொறுத்தவரையில் தொழிற் சட்டங்களைத் துச்சமாகவே கருதி உதாசீனப்படுத்தி உள்ளனர். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்றாகி விட்டது. அப்பாவித் தொழிலாளர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.  

தொழிலாளர்கள் மீது சவாரி செய்யும் உத்தியோகத்தர்கள்  

தொழிலாளர்கள் தோட்டத்திற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தொழிலுக்காக வந்தவர்கள். தொழிலாளர்கள் நிரந்தரமானவர்கள், உத்தியோகத்தர்கள் தற்காலிகத் தலைவர்கள், ஆனால், லங்காபுரியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொழிலாளர்களுக்கு மட்டும் தான் வேலை இல்லை. அன்றாட கூலிக்கு வேலை செய்யவேண்டும். உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் இருக்கின்றனர். தொழிலாளர்களின் உழைப்பில் ஒட்டுண்ணிகளைப் போல் வாழ்கின்றனர்.  

துணிவில்லாத பிரதிநிதிகள்  

இந்தத் தோட்டத்தில் பெருந் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், வடிவேல் சுரேஷ், திகாம்பரம் ஆகியோரின் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இவர்களில் பிரதிநிதிகளாக சிலர் பையைத் தூக்கிக் கொண்டு நகரத்தில் நடமாடுகின்றனர்.

இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் இவர்களுக்குத் தெரியவில்லை. லங்காபுரி தோட்டம் தொடர்பாக இவர்களிடம் கேட்டால் “அப்படியா? எங்களுக்குத் தெரியாதே, எங்களிடம் யாரும் புகார் செய்யவில்லையே என்று எதுவுமே தெரியாதது போல் நடிக்கின்றனர். தோட்டங்களுக்கும் போய் துரையிடம் தேயிலை பெக்கட்டுகளை வாங்கிவரும் இவர்களுக்குத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் தெரியவில்லையா அல்லது தோட்ட நிர்வாகத்தை தட்டிக் கேட்டும் துணிவு இல்லையா! உயர் மட்டத்தில் சம்பள உயர்வு போராட்ட உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாவட்ட ரீதியாக இருக்கும் பிரநிதிகள் இந்த விடயத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தயங்குகின்றனர்.  

சம்பள உயர்வு போராட்டத்தை திசை திருப்பும் கம்பெனிகள் 

சம்பள உயர்வு பிரச்சினை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. தோட்ட முதலாளிமார் தொழிலாளர்களை மட்டுமல்ல அரசாங்கத்தின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டுகின்றனர். ஆரம்பம் முதலே தொழிலாளர்களுக்கு எதையும் கொடுக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டே பேச்சு மேசைக்கு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கின்றனர்.  

இப்பொழுது கூட்டு ஒப்பந்தமும் பிசுபிசுத்ததுப் போனது. எல்லா இடங்களிலும் ஒப்பம் வைத்துவிட்டு இப்போது ஒதுங்கிக் கொள்கிறேன் என்கின்றார்கள். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் நம் தலைவர்கள் இந்த கம்பெனிக்காரர்களும் வெளிவாரி பயிர் செய்கை திட்டம் என்று சக்கை கட்டிவருகின்றனர்.  

சம்பள உயர்வு பிரச்சினை உக்கிரம் அடைந்து வரும் சமயத்தில் அதை திசை திருப்பும் வகையிலேயே வெளிவாரி பயிர்ச் செய்கை என்ற பெயரில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு கதவடைப்பு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகங்கள் செய்யும் சதிச் செயலுக்கு அப்பாவி தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

இன்று லங்காபுரி தோட்டம் நாளை படிப்படியாக எல்லா தோட்டங்களுக்கும் ஏற்படும். சம்பள உயர்வை விட அடிப்படை உரிமைகள் அதி  முக்கியம். தொழிற்சங்க தலைவர்கள் உடனே தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments