எங்களது ஜனாதிபதி வேட்பாளர் வென்றதும் அரசியலமைப்பில் மாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

எங்களது ஜனாதிபதி வேட்பாளர் வென்றதும் அரசியலமைப்பில் மாற்றம்

பெங்களூர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ உரை

2014ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

இருதரப்புக்குமிடையிலான தொடர்பாடல் குறைபாடே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தியாவின் பெங்களூர் நகரில் ‘இந்து’ பத்திரிகை குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், நேற்று கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.  

“இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிப்படைந்ததற்கு இரு தரப்புக்குமிடையில் முறையான தொடர்பாடல் இருக்கவில்லை.” 

“உறவை வளர்ப்பதும் துண்டிப்பதும் தொடர்பாடல்தான் முக்கிய காரணியாக அமைகின்றது. 

80களிலும் 2014இலும் ஏற்பட்ட தவறான புரிதல்களால் இருதரப்பு தொடர்பாடல்கள் தகர்க்கப்பட்டிருக்கிறது” என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.  

உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாதக் குழுவுடன் யுத்தம் புரியும் காலத்தில் கூட, இந்தியாவுடனான உறவு மிகவும் நட்பு ரீதியாகவே இருந்தது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா மிகவும் புரிதலோடு செயற்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். 

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்கள் சார்பில் போட்டியிட பொருத்தமான வேட்பாளரைத் தேடவேண்டியுள்ளது.

நான் போட்டி போட முடியாது. நாங்கள் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றதும் அரசியலமைப்புக்கு திருத்தம் கொண்டுவரப்படும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களைத் திருப்திப்படுத்த முடியும். அரசியல் வாதிகளை அவ்வாறு திருப்திபடுத்திவிட முடியாது” என்றார். 

“கருத்துகளைப் பகிர்வதும் கற்றுக்கொள்வதும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை ஏற்படுத்தும் இந்தியாவும் இலங்கையும் ஒரே குடும்பம்.

கலாசாரங்களைப் பேணுவதிலும், புத்தபகவானின் வருகை, இலங்கையின் வரலாற்றில் முக்கிய தடம்பதிக்கிறது. மகாத்மா காந்தியின் சிந்தனையும் இருநாடுகளுக்கிடையில் பெரும் உறவைப் பலப்படுத்துகிறது.  

பயங்கரவாதம், அச்சுறுத்தல்களில் இருநாடுகளுக்கும் மிகவும் அனுபவம் இருக்கிறது.

80களில் இந்தியா புலிகளுக்கு பாதுகாப்பான தளமாக இருந்தது. இதனால், இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியையும் 1500க்கும் அதிகமான படைவீரர்களையும் இந்தியா இழந்தது. 

இப்படியான தவறுகளிலிருந்து நாம் அனுபவம் பெறுவது மட்டுமல்ல, மீண்டும் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ பேசினார்.

Comments