ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியென ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறு சீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்கேற்புடன் பொலன்னறுவை புதிய நகரில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமரர் பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை முன்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.

அமரர் பண்டாரநாயக்கவுக்குப் பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 - 2018காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயவாளர் தயசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, திலங்க சுமதிபால, இசுர தேவப்பிரிய, காமினி திலகசிறி, பேசல ஜயரத்ன உள்ளிட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான அங்கத்தவர்கள் இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் பொலன்னறுவையில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ வீடமைப்பு கட்டிடத் தொகுதியின் முதற் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09)  திறந்து வைத்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,500மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இது 86வீடுகளைக்கொண்ட கட்டிடத் தொகுதியாகும்.

“மைத்திரி ஆட்சி பேண்தகு யுகம்” எண்ணக்கருவின் கீழ் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டுத்தொகுதியாக இந்த அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதி காணப்படுகிறது.

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சந்திரசிறி சூரியஆரச்சி, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நன்மைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றும்  நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவை புதிய நகர நீர்ப்பாசன விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான “லக்தரு திரிய” புலமைப்பரிசில்கள் வழங்குதல், வீட்டுரிமைகளை வழங்குதல், வாழ்வாதார அபிவிருத்தியின் கீழ் உபகரணங்கள் வழங்குதல், பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கூரைத் தகடுகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வழங்குதல் உட்பட பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு  வழங்கப்பட்ட நன்மைகளின் மொத்த பெறுமதி சுமார் 12.5 கோடி ரூபா ஆகும்.

Comments