காதலர் தினம் மனிதகுல விருத்திக்கு உறுதுணையான நன்நாள் | தினகரன் வாரமஞ்சரி

காதலர் தினம் மனிதகுல விருத்திக்கு உறுதுணையான நன்நாள்

அருள் சத்தியநாதன்
[email protected]

உலகக் காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதி உலகின் பல நாடுகளில் இளைஞர்களினால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும் வேறுசில நாடுகளில் அது முற்றிலும் வெறுக்கப்படும் நாளாகத் திகழ்கிறது. காதலர் தினம் தொடர்பான சமய ரீதியான விளக்கம், கலாசார ரீதியான பார்வை காரணமாகவே இந்த விருப்பும் வெறுப்பும் நிகழ்கிறது. மனித வாழ்வுக்கு, ஏன் உயிரினங்களின் வாழ்வுக்கு காமமும் காதலும் இன்றியமையாததாக இருப்பினும் இன்றைக்கும் அது மூடப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதை இயல்பாக எடுத்துக்கொள்ள போதிய காரணங்களின்றியே நாம் தயங்குகிறோம், மறுத்தும் விடுகிறோம். காதலில் திளைப்பவரைவிட, சம்சாரியை விட துறவி என்றழைக்கப்படுபவரும், பிரம்மச்சாரியமும் மேன்மையானவை என்ற ஒரு சிந்தனை நம்மிடையே பரவலாக உண்டு. ஆனால் அவை ஏன் உயர்ந்தவை என்பதற்கான போதிய காரணங்கள் நம்மிடம் இல்லை. 

காதலுக்கு வரலாறுகளில் தொடர்ச்சியாக எதிர்ப்புகளும் தவறாக புரிந்து கொள்ளலும் காணப்பட்ட போதிலும் உலகெங்கும் காதல் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அதற்கான காரணம் இருந்தது. தேவையும் இருந்தது. அது அந்த காலம், இப்போது அப்படி எல்லாம் நடக்கவிட மாட்டோம் என கலாசாரக் காவலர்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும், காதலுக்கான ஆதரவு அசைக்க முடியாத உறுதியுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் இந்து வட மாநிலங்களில் பா.ஜ.க கலாசாரக் காவலர்கள் காதலர்களின் கொண்டாட்டங்களை தயவு தாட்சண்யமின்றி நசுக்கிவருவதைப் பார்க்கிறோம். ஆனால் அந்தக் கலாசாரக் காவலர்கள் பின்பற்றும் இந்து சமயத்தில்தான் கடவுளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிமாரை கொண்டிருப்பதையும், கிருஷ்ண லீலைகளையும், இந்திர லீலைகளையும் காண்கிறோம். காமரசம் ததும்பும் கோவில் சிற்பங்களையும் காண்கிறோம். வாத்ஸாயனர் என்ற இந்துத் துறவி எழுதியதே காமசூத்திரம். இதையொத்த இன்னொரு நூல் அக்காலப்பகுதியில் உலகில் வேறெங்கும் எழுதப்படவேயில்லை. காதலும் காமமும் வெறுக்கத்தக்க தொன்றல்ல, அவை தெய்வீக அம்சங்களைக் கொண்டுள்ளன என்றே இந்து தர்மம் சொல்கிறது. ஆனால் இந்திய கலாசாரக் காவலர்களாகத் தம்மை வெளிக்காட்டும் பா.ஜ.க.வினர் இந்து சமயத்தின் கோட்பாடுகளுக்கு விரோதமான போக்கை அதாவது கிறிஸ்தவ ஆங்கிலேயர் கைவிட்ட விக்டோரியன் சிந்தனைகளை கையில் எடுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.  

காதலர் தினம் கொண்டாடப்படக் கூடாது என்போருக்குத் தெரியவில்லை, காதலர்களை ஊக்குவிக்கும் பண்டைய பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் இன்றைக்கும் திரைப்படப்பாடல்கள், சிருங்கார புனைக் கதைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி வழியே தற்கால மக்கள் சமூகங்களுக்கு மத்தியில் வற்றா நதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை! மனிதன் என்ற உயிரினத்தின் நீட்சி என்பது காதல், காமம் என்பனவற்றில் சார்ந்துள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் சமயங்கள் காமத்தையும் காதலையும் வெறுத்தும் ஒதுக்கியும் அதை மனிதர்களுக்கான சாபக் கேடாக வியாக்கியானம் செய்து வந்துள்ளன. 

எனினும் காதல், காமம் என்பன வாழ்க்கையுடன் எவ்வளவு நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இந்து சமயத்தின் அளவுக்கு வேறெந்த சமயமும் வெளிப்படையாக பேசியிருக்க முடியாது.  

இதற்குக் காரணம் உண்டு. அரசர்களுக்கு விவசாயம் செய்யவும், போர் புரியவும் நிறைய குடிமக்கள் தேவைப்பட்டனர். எனவே கருக்கட்டல் ஊக்குவிக்கப்பட்டது. கருவளம் கொண்ட வயதினர் இளமையில் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இளவயதில் திருமணம் செய்யும் ஒரு பெண் ஏழு, எட்டு குழந்தைகளை பெற்று அந்தப் பணியை முடித்து விட்டு காடு, களனிக்கு சென்று தன் குடும்பத்தினருடன் விவசாயத்துக்காக உழைக்க வேண்டியிருந்தது. மேலும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொண்டால்தான் சில குழந்தைகளாவது தப்பிப் பிழைத்து உயிர் வாழும். எனவே, அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் இந் நாடுகளைக் கைப்பற்றி, விஞ்ஞானம், மருத்துவம் என்பன சமூகங்களில் பயன்பாட்டுக்கு வரும் காலம்வரை, பெண்கள் நிறைய பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அதை ஊக்குவிக்குமுகமாகவே அன்றைய சமூக பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் இருந்தன. 

அடுத்தது வசந்தகால விழாக்கள். குளிர் பிரதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது பனிக் காலத்தை எப்போதுமே குதூகலத்துடன் வரவேற்பதில்லை. தற்போது அமெரிக்கா, கனடாவை பனிக்காலம் வாட்டி வருகிறது. இம் மக்கள் எப்போது இப் பனிக்காலம் முடிவடைந்து சூரியன் கண்களுக்குத் தென்படும்,வசந்த காலம் உதயமாகும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பது வழக்கம்.

வசதிகள் வந்துவிட்ட இக் காலத்திலேயே பனிக்காலத்தை வரவேற்க விரும்பாத மக்கள் எப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடும் குளிரை எதிர்கொண்டு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.  

இதனால் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் முக்கியத்துவம் பெற்ற மகிழ்ச்சி நாளாக விளங்கியதில் ஆச்சரியமில்லை. இவ் வகையில் வசந்த காலத்தில் இளைஞர்களும் யுவதிகளும் காதலில் திளைத்து திருமண பந்தத்தில் இணைவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். வெப்ப வலய நாடுகளிலும் மாரி முடிந்து சூரியன் ஒளிரும் காலமும், அறுவடை முடிந்த காலமும் வசந்த காலமாக அறியப்படுகிறது. பொங்கல் அவ்வாறான ஒரு தினம்தான். தமிழன் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டதற்கு, பெண்களைக் கவர்ந்து அவர்களைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன்தான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிபெறும் ஒருவன் வீரியம் கொண்ட விந்துக்களை கொண்டிருப்பான் என நம்பப்பட்டது. 

சிலப்பதிகாரத்தில் வசந்த விழா பற்றி வருகிறது. காவிரி பூம்பட்டினத்தில் அரசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வசந்த விழா, பாடல், இசை, நடனம் என்பதாக, இளைஞர்களுக்கான விழாவாகத் திகழ்ந்தது. மாதவியை அங்கே தான் கோவலன் கண்டு காமுறுகிறான். அந்த வசந்த விழா கொண்டாட்டங்கள் இன்று றகர் போட்டிகள், திருமணம் போன்ற வைபவங்களில் நடைபெறும் ஆடல் பாடல் களியாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், நைட் கிளப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களாக மாற்றம் கண்டுள்ளன. இவை அனைத்தும் திருமணங்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளாக அடையாளப்படுத்தலாம். அன்று வீரவிளையாட்டுகளும், பல்தார மண முறையும், வசந்த விழாக்களும் எதை நோக்கமாகக் கொண்டு சொல்லப்பட்டனவோ அதையே இன்று சினமா திரைப்படங்களிலும், துள்ளாட்டப் பாடல்களும், ‘அடல்ஸ் ஒன்லி’ நிகழ்ச்சிகளும் செய்து வருகின்றன. 

மனிதன் நாகரிகமடைந்த காலம் முதல் சமூகங்களில் இருந்து வந்த கருக்கட்டலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. காதலர் தினத்தை அப்படித்தான் கருத வேண்டும். ஒரே ஒரு தினம் மட்டுமல்ல இளைஞர்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருப்பது. இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் எத்தனையோ இருக்கையில், வருடத்துக்கு ஒரு முறை மட்டும் வரும் காதலர் தினத்தை மட்டும் குறிவைத்து அந்தத் தினம்தான் இளைஞர்களை வழிதவறச் செய்கிறது என்றும் கலாசரம் சீரழிகிறது என்றும் வாதிப்பது தவறான, உள்நோக்கம் கொண்ட ஒரு அணுகுமுறையாகும்.

Comments