கிராமசக்தியின் கிழக்கு மாகாண வருகை | தினகரன் வாரமஞ்சரி

கிராமசக்தியின் கிழக்கு மாகாண வருகை

ரவி ரத்னவேல் 

ஒருவர் உயர்வதும் தாழ்வதும் பிறப்பினால் அல்ல. மாறாக அவரவர் நினைப்பினாலேயே அது நடக்கின்றது. என்னால் முடியும் என்ற எண்ணம் கொண்டவர் அதற்காக உழைக்கின்றார். அந்த உழைப்பினாலேயே அவரும் உயர்கின்றார். அதற்கு எதிர்மறையாக இயற்கை எமக்கு வளங்களை எல்லாம் வழங்கியிருந்தும் ‘எனக்கு அது இல்லையே இது இல்லையே’ என புலம்புவதுடன் ‘அது இருந்திருந்தால் அப்படி சாதித்திருப்பேன், இது இருந்திருந்தால் இப்படி சாதித்திருப்பேன்’ என வெட்டிப்பேச்சு பேசுபவர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.  

இந்த இரண்டு வகையினருக்கும் இடைப்பட்ட, ஆனால் உண்மையிலேயே ஒரு சிறிய உந்துசக்தியோ வழிகாட்டலோ கிடைக்காதா என எதிர்பார்த்து அது தம்மை தேடிவரும் வரை வறுமை எனும் வலையில் சிக்கிக் கொள்ளாது எப்படியாவது நாம் நமது முயற்சியினால் முன்னேற வேண்டும் என்று திடசங்கற்பம் கொண்டு செயற்படுபவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். தமது உழைப்பினால் உயரத் துடிக்கும் இவர்களின் கரங்களை பலப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் செயற்திட்டமே கிராமசக்தியாகும்.  

கிராமத்தின் சக்தியை ஒன்றுதிரட்டி, அதனை தனி மனிதனதும் அவன் சார்ந்த சமூகத்தினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் நலனிற்காக பயன்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்பு அபிவிருத்தி திட்டமாகவே கிராமசக்தி அமைந்துள்ளது. அதன் கிழக்கு மாகாண செயற்குழு நடவடிக்கைகள் கடந்த 08 ஆம் திகதி காலை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு, பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  

பிறரின் தயவு தாட்சண்யத்தில் தங்கி வாழ்வதற்கு பதிலாக இந்த நாட்டு மக்களுக்கு தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு வழிகாட்டி வலுவூட்டும் தன்மையே கிராமசக்தியின் சிறப்பம்சமாகும். கிழக்கு மாகாணத்தின் கிராமசக்தி முதலீட்டுக்கென 2018 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 42 மில்லியன் ரூபாய்களும் அம்பாறை மாவட்டத்திற்கு 66 மில்லியன் ரூபாய்களும் திருகோணமலை மாவட்டத்திற்கு 33 மில்லியன் ரூபாய்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நிதி வழங்கப்பட்ட கிராமசக்தி சங்க செயற்பாடுகளின் குறைநிறைகளை சீர்தூக்கிப் பார்த்து தேவையான எதிர்கால திட்டங்களை வகுப்பதே அச்சிறப்பு செயற்குழுக் கூட்ட அமர்வின் நோக்கமாக அமைந்திருந்தது.  

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்தும் கிராமசக்தி வறுமை ஒழிப்பு அபிவிருத்தி திட்டத்தில் இணைந்து கொண்டிருக்கும் முன்னணி தனியார் நிறுவனங்களான ஹேலீஸ், சிலோன் பிஸ்கட் லிமிட்டெட், காகிள்ஸ், யுனிலிவர் மற்றும் ஊசு எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பில் கிழக்கு மாகாண கிராமசக்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கமைய கடற்தாவர ஏற்றுமதி மற்றும் முருங்கை இலை சேகரிப்பு மற்றும் கொள்வனவு தொடர்பில் கிழக்கு மாகாண கிராமசக்தி சங்கங்கள் இரண்டிற்கும் ஹேலீஸ் தனியார் நிறுவனம் மற்றும் டொம்போ லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களும் இதன்போது செய்து கொள்ளப்பட்டன.  

இந்த செயற்குழுக் கூட்டம் இடம்பெற்ற மட்டக்களப்பு, மண்முனை வடக்கு, பிரதேச செயலகத்திலிருந்து 9 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள, கிராமசக்தி செயற்திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சத்துருக்கொண்டான் கிராமத்தில் அன்றைய தினம் நேரடி மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றதோடு, இதன்போது அக்கிராம மக்களின் முக்கிய பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவற்றுக்கான உடனடித் தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரச தலைவன் என்ற வகையில் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான ஆறுதலைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே இந்த நேரடி மக்கள் சந்திப்பு அமைந்திருந்தது.  

461 குடும்பங்களைக் கொண்ட அக்கிராமத்தில் 91 பெண் தலைமைத்துவ குடும்பங்களும் 20 விசேட தேவையுடையவர்களும் வாழ்ந்து வருகின்றனர். கிராமசக்தி மக்கள் அமைப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பங்குபற்றலில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பின்போது தமது கிராமத்திற்கான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான பாதையை புனரமைத்து தருமாறும் மலசலகூட வசதிகளற்ற 72 வீடுகளுக்கு அவ்வசதிகளை பெற்றுத்தருமாறும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் 52 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், கிழக்கு மாகாண சபையினால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.  

அதேபோன்று சத்துருக்கொண்டான் குளத்தை புனரமைத்துக் கொடுப்பதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் உறுதியளித்துள்ளதுடன், நெசவுத் தொழிலில் பயிற்சிபெற்ற 20 பெண்களுக்கு அதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒருவருக்கு 50,000 ரூபா வீதம் 10 இலட்சம் ரூபா நிதியுதவியும் அவர்கள் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுக்கவும் இதன்போது தீர்மாணிக்கப்பட்டுள்ளது.  

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இக்கிராமத்தில் வாழ்ந்துவரும் விசேட தேவையுடையவர்களுக்கு 05 சக்கர நாற்காலிகளையும் 07 விசேட கட்டில்களையும் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண சபையினால் இந்த கோரிக்கை வெகுவிரைவில் நிறைவேற்றி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இக்கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு 525,000 ரூபா பெறுமதியான 15 தெப்பங்களும் 262,000 ரூபா பெறுமதியான 35 வீசு வலைகளும் வழங்கப்பட்டன.  

இக்கிராமத்தில் வசித்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 20 பெண்களுக்கு கோழி வளர்ப்பில் ஈடுபடுவதற்காக 15 இலட்ச ரூபா பெறுமதியான உபகரணங்களும் 15 பெண்களுக்கு வீட்டுத் தோட்டச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு 25,000 ரூபா வீதம் நிதியுதவியும் சுயதொழிலாக முறுக்கு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபா நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டது. மேலும் 15 பெண்களுக்கு பனை சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஒருவருக்கு 15,000 ரூபா வீதம் நிதியுதவியும் இவ்வுற்பத்திகளை விற்பனை செய்வதற்கு மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் 25 தற்காலிக கடைகளைக் கொண்ட கடைத்தொகுதியை நிர்மாணிப்பதற்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும் வழங்கி வைக்கப்பட்டது.  

வெறுமனே நான் உங்கள் சேவகன் என சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக தம்மை உயரத்தில் அமர்த்தி விட்டு இன்னும் கீழ் மட்டத்திலேயே இருந்துவரும் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையையும் உயர்த்தி அவர்களையும் வாழவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பே இந்த கிராமசக்தி வறுமை ஒழிப்பு திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இதனை நாடி இதன் பயனை பெற்றுக்கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.  

Comments