தவறான முன்னுதாரணத்தை தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை | தினகரன் வாரமஞ்சரி

தவறான முன்னுதாரணத்தை தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

கலாநிதி எம். கணேசமூர்த்தி 

(பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்)

கடந்தவாரம் இலங்கைச் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் சில நாட்கள் முற்றாக முடங்கிப்போயின. கொள்கலன்கள் தேங்கிக் கிடந்தன. இன்னும் சில நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்திருப்பின் நாடு மிகப் பெரிய பிரச்சினையை  எதிர்நோக்க நேரிட்டிருக்கும்.  

இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது சுங்கப்பணிப்பாளர் நாயகத்தை பதவியிலிருந்து தூக்கி அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அதற்கெதிராக சுங்க அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த நிர்வாக சேவை அதிகாரியாகிய பெண்மணியை சுங்கப் பணிப்பாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து தூக்கியதை எதிர்த்து தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை சுங்க அதிகாரிகள் நடத்துவதென்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான். அதுவும் அதுபோன்ற பதவியை எதிர்பார்த்து பலர் காத்திருக்கும் நிலையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை மேலும் வியப்பை ஏற்படுத்தவே செய்தது. 

அவ்வாறாயின் அக்குறிப்பிட்ட அதிகாரி. தனது பொறுப்பினை சரியாக நிறைவேற்றியுள்ளார் என்றும் தனது ஆளணியினர் மத்தியில் நன்மதிப்பை சம்பாதித்திருக்கிறார் என்றுமே கருதவேண்டியுள்ளது. பலரும் தமது மேலதிகாரிகளால் மோசமாக நடத்தப்படும்போது இது எப்போது போய்த் தொலையும் என்று சாபம் கொடுப்பது வழமையாக நடப்பது தான். ஆனால் மேலே குறிப்பிட்ட சம்பவம் குறிப்பிட்ட அதிகாரி தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு சரியாக கடமைகளை ஆற்றியுள்ளதாகவே பொருள்கொள்ள வேண்டும். 

மேற்படி பதவி நீக்கத்திற்கு காரணமாக உரிய தரப்பு சொல்லிய காரணம், 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டில் சுங்கத் திணைக்களத்திலிருந்து பெறப்படவேண்டும் என இலக்கிடப்பட்ட வருமான இலக்கை அது அடையத்தவறிவிட்டது என்பதாகும்.   2017ல் 831 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட சுங்கவரி வருவாய் 2018ல் 921 பில்லியன் ரூபாவாக 1.4 சதவீதத்தினால் மட்டுமே அதிகரித்ததாகவும் இது எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்காகிய 1068 பில்லியனை விட மிகக் குறைவெனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதே காலப்பகுதியில் இறக்குமதிகளின் பெறுமதி 8.3 சதவீதம் அதிகரித்தபோதிலும் சுங்கவரி வருவாய் 1.4 சதவீதம் மட்டுமே அதிகரித்தது எப்படி என்ற கேள்வி எழுப்பட்டது. அதேநேரம் கடந்த ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் இலங்கை ரூபா டொலருக்கு எதிராக 15 சதவீதம் தேய்வு அடைந்ததாகவும் சுங்கவரி டொலர் அடிப்படையிலேயே கணிப்பிடப்படுவதாகவும் எனவே இலங்கை ரூபா பெறுமதியில் சுங்க வரி வருவாய் இதைவிட அதிகமாக இருத்தல் வேண்டுமெனவும் விளக்கம் கூறப்படுகிறது.

ஏற்றுமதி இறக்குமதித்துறையில் உள்ள மாபியா கும்பல்கள் மேற்கொள்ளும் சட்ட விரோத நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு வரி வருவாய் குறைந்திருப்பதாகவும் எனவே இந்த கும்பல்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்த ஒருவரை மேற்படி பதவிக்கு நியமிக்கும் நோக்கிலேயே சுங்கப் பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்கியதாகவும் நியாயம் கூறப்பட்டது. 

சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் பட்டதாரிகள், நன்கு பயிற்றப்பட்டவர்கள் அனுபவப்பட்டவர்கள். நிர்வாக நெளிவு சுழிவுகளை அறிந்தவர்கள். எந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டாலும் அவற்றை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து இயங்கக் கூடியவர்கள். அதற்கான ஆளுமை அவர்களுக்கு உண்டு. வெகு அபூர்வமாக இதற்கு ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. இதுபோன்றே சுங்க அதிகாரிகளும், போட்டித்தன்மை வாய்ந்த தேர்வு நடைமுறைகள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகள் மூலம் பரீட்சிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்படுகின்றனர். எனவே சுங்க நடைமுறைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது ஒரு படைத்துறை அதிகாரிகளை விட அவர்களுக்கு நன்கு தெரியும். 

'சுங்க அதிகாரி தனது கடமையை செய்தாலும் காசு செய்யா விட்டாலும் காசு' என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள். தமது கடமையை செவ்வனே செய்து அரசாங்கத்திற்கு திரட்டித்தரும் வருவாயில் குறிப்பிட்ட ஒரு சதவீதம் அவர்களுக்கு ஊக்குவிப்பாக வழங்கப்படும். மறுபுறம் 'கண்டுகொள்ளாமல்' விட்டுவிட்டாலும் உரிய தரப்பிடமிருந்து கவனிப்புகளும் சந்தோஷங்களும் கிட்டும். எல்லாத் தொழில்களிலும் கறுப்பாடுகள் உள்ளது போல சுங்கத்திலும் சிலர் தமது கடமைகளை சரிவர செய்யாது இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த சுங்க அதிகாரிகளையும் குறைசொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தவறு. 

இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட போதைப் பொருட்களில் 5 சதவீதத்தை மட்டுமே சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாகவும் எஞ்சியதை பாதுகாப்புத் தரப்பினரே கண்டு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சுங்கத் தரப்பினரை நோக்கி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த ஒருவரை அதிலும் தலைமைப்பொறுப்பில் அமர்த்துவது பொருத்தம் என அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் படைத்துறை அதிகாரிகளை சிவில் நிர்வாகப்பொறுப்புகளில் அமர்த்துவது தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த ஒன்றுதான். ஆயினும் சுங்க அதிகாரிகளால் அவர்களது கடமைகளை சரியாகச் செய்ய முடியாது என்றில்லை. எனவே சுங்கத்திணைக்களத்தை நவீனமயப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் சிவில் அதிகாரிகளே சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடச் செய்யலாம். 

'மாட்டின் வேலையை மாடு செய்ய வேண்டும், கழுதையின் வேலையை கழுதை செய்யவேண்டும்' இரண்டும் மாறிச் செய்ய முயன்றால் இயற்கைக் கட்டமைப்பே மாறிவிடும். 

நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் பொருட்கள் பற்றி பொறுப்புக் கூறும் அதேவேளை, சட்ட விரோத ஏற்றி இறக்கலைத் தடுக்கவும், அரசாங்கத்திற்கு சுங்க வரியை திரட்டி ஒப்படைக்கவும் சுங்க அதிகாரிகளது சேவை  இன்றியமையாததாகும். அதனை நாட்டுக்காகவும், மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் விசுவாசமாகவும் செய்வதாக பிரமாணம் மேற்கொண்டே அதிகாரிகள் கடமைக்கு வருகிறார்கள். சரியான நிர்வாக நடைமுறைகளும் வெளிப்படையான சுங்க வெளிப்படுத்தல்களும், பரிசோதனைப் படிமுறைகளும் முறையாக செயற்படுத்துமிடத்து அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயைத் திரட்டிக்கொள்ள முடியும். 

அதுபோக சுங்கப் பரிசோதனைகளுக்கான நவீன உபகரணங்களும் இயந்திர சாதனங்களும் வழங்கப்படவேண்டும். கொள்கலன்களை ஸ்கான் செய்ய உதவும் உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும். அத்தோடு வெளிப்படையாக பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் இலஞ்சம், குறைமதிப்பீடு போன்றவற்றையும் தவிர்க்கலாம். 

இறக்குமதி செய்பவர் தான் எவ்வளவு வரியை செலுத்த வேண்டும் என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த அடிப்படையில் அது கணிப்பிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். 

தானியங்கி கணிப்பீட்டு நடைமுறைகளை உள்வாங்கி அதன் மூலம் சுங்க அதிகாரிகளில் சிலர் மேற்கொள்ளும் ஊழல்களை குறைக்கலாம். அதன் ஊடாக வருவாயை அதிகரிக்கலாம்.  

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு அதிகாரியை நினைத்தபடி இடமாற்றம் செய்வதும் எவரையும் தன்னிச்சைப்படி நியமிப்பதும்  அரசியல்வாதிகள் செய்யத்தக்கவை அல்ல. இது நாகரிக உலகில் ஏற்பட்ட நடைமுறையல்ல. அரசியல்வாதிகளுக்குள்ள அதிகாரம் மக்கள் வழங்கியது. அதனை தன்னிச்சையாக பயன்படுத்தமுடியாது. வீட்டு வேலைக்காரர்களை நடத்துவது போல அரசு சேவை அதிகாரிகளை நடத்தமுடியாது. அதேபோல் அரசியல்வாதிகளுக்கு தமது மாமனையோ மச்சானையோ அல்லது தோழனையோ தோழியையோ அரசு பதவிகளுக்கு முறையற்ற விதத்தில் நியமிக்க முடியாது. அரசு பதவிகள் அப்பன் வீட்டு சொத்து அல்ல,தனது அடிவருடிகளுக்கோ ஆதரவாளர்களுக்கோ அள்ளி வழங்குவதற்கு.  

ஒரு சாதாரண காரியாலய சேவையாளனை அமர்த்துவதற்கே ஆயிரம் நடைமுறைகள் உண்டு. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய தனித்தனி நடைமுறைகளும் உண்டு. அவற்றை பின்பற்றாமல் தமது 'ஆட்களுக்கு வேலை வழங்க' அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவது ஒரு மோசமான முன்னுதாரணம். கடந்த காலங்களில் அரசு துறையில் இப்படியான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் ஏராளம் உண்டு. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் நிறுவன ரீதியான கட்டமைப்புகள் எல்லா மட்டங்களிலும் தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நீண்டகால வரலாறுகள் உண்டு. ஆனால் அத்தகைய நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை செயற்படாது தடுக்கின்ற அரசியல் தலையீடுகள் இக்கட்டமைப்புகளை முடக்குவாத நிலைக்கு தள்ளிவிடுகின்றன. இந்த நாட்டில் பாராளுமன்றமே மிக உயர்ந்த சட்டவாக்க நிறுவனமாகும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் சார்பாக மக்களுக்காக மக்களின் நன்மைகருதி சட்டங்களை இயற்ற வேண்டும். அவை நாட்டின் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை பலப்படுத்துவதாக அமையவேண்டும். இவ்வாறு ஆக்கப்படும் சட்டங்கள் அதிகாரிகளால் வரையப்பட்டு அரசியல்வாதிகளால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றன. எனவே இதில் ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. 

ஏலவே உள்ள நடைமுறைகளையும் நிறுவன ரீதியான கட்டுப்பாடுகளையும் புறந்தள்ளி எந்த ஒரு நபரோ குழுவோ தனிப்பட்ட ரீதியில் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவது நிறுவனங்களின் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். 

எனவேதான் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

அரச துறையில் இடமாற்றங்கள் சகஜம் தான் என்றாலும் அதனை தான் தோன்றித்தனமாக செய்யக்கூடாது.

இதற்கு எதிராகத்தான் மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதேயன்றி தனிப்பட்ட ஒரு அதிகாரியை பாதுகாப்பதற்காக அல்ல என்றே தோன்றுகிறது.  

ஏற்கனவே பொறுப்பற்ற விதத்தில் நிகழ்த்தப்பட்ட ஒக்டோபர் மாத களேபரங்களால் நாடு அடிபட்டு நொந்து நூலாகி விட்டிருக்கிறது. தற்போது நாட்டின் உயிர்நாடி எனக்கருதப்படுகின்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு மூலாதாரமாய் அமைகின்ற சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் ஒரு கும்மாங்குத்து விட்டிருக்கிறது. 

ஆசியாவின் ஆச்சரியமாக முன்னைய ஆட்சியாளர்களால் மாற்றப்பட எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் ஆசியாவின் பூச்சியமாகப்போய்விடக்கூடாது என்ற ஆதங்கமே பலர் மத்தியில் நிலவுகிறது. முள்ளில் விழுந்த சேலையை கிழியாமல் பத்திரமாக எடுப்பதுபோல புண்பட்டுப் போயுள்ள பொருளாதாரத்தை களிம்பிட்டு குணப்படுத்த வேண்டிய காலப்பகுதி இது. மாறாக அரசியல் அதிரடி காட்டவேண்டிய காலமல்ல. 'புதிதாக எதையும் செய்து கிழிக்காமல் விட்டாலும் பரவாயில்லை' இருப்பதையாவது பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். 

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு 2025நிகழ்ச்சித்திட்டம் பெரிதாக பேசப்பட்டது. தற்போது அது காற்றுப்போன பலூன் ஆகிவிட்டது. எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்தில் அது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்ற கேள்வியும் உள்ளது. 

சர்வதேச ரீதியில் பழுதுபட்டுப் போயுள்ள இலங்கையின் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவையுண்டு. கடன் தரமிடல் நிறுவனங்களால் ஒருபடி கீழே இறக்கி விடப்பட்ட இலங்கையின் தராதரத்தை மேலே தூக்கி விட வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கவே ஏதுவாகும். நாட்டுக்கு அந்நியச்செலாவணி அவசரமாகத் தேவைப்படும் சூழலில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் முடக்கம் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.  

சர்வதேச துறைமுகங்களுக்கு ஈடாக இலங்கையின் துறைமுக கொள்கலன் சேவை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற துறைமுகங்களில் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் கொள்கலன் கையாளல்  இடம்பெறுகிறது. சுங்க அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு இதில் அதிகம் உண்டு. எனவே இலங்கையை கவர்ச்சிகரமான ஒரு துறைமுக நாடாக மாற்றவேண்டுமாயின் சுங்க அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான பங்களிப்பு அவசியம். 

ஆகவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற்கொண்டு நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை பலப்படுத்தி நிருவாக சேவை, திட்டமிடற்சேவை, கணக்காளர் சேவை சுங்கம் போன்ற நிறுவன ரீதியான கட்டமைப்புகள் முறையாக செயற்பட அனுமதிப்பதுடன் அவற்றின் செயலாற்றத்தை மதிப்பிடும் நடைமுறைகளையும் வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 'மர்ம நிலைகளில்' இப்போது கைவைப்பது அரசியல் ரீதியாகவும் நன்மை தராது. பொருளாதார ரீதியாகவும் நன்மை தராது. சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இதனை உரிய தரப்புக்கு நன்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புவோமாக. 

மறுபுறம் நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகள் கூட்டம் தமது பொறுப்புணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டால் அரசியல் வாதிகளின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தலாம் என்பதையும் இந் நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது.

இறுதியாக ஒன்று. அதிகாரிகள் தமது பொறுப்புணர்ந்து கடமைகளை துஷ்பிரயோகம் செய்யாமல் நாட்டின் நன்மை கருதி மனச்சாட்சிக்கு விரோமில்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான் இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். அத்தோடு 2018 சுங்க வரி வருவாய் குறைவடைந்தமைக்கான உண்மையாக காரணமும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்.   

Comments