ATM மோசடி; பணம் மீளப் பெறும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

ATM மோசடி; பணம் மீளப் பெறும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்!

பொருத்தப்படும் போலி விசைப்பலகை

வாசுகி

இராணுவ அதிகாரியான விஷால் தங்கையின் திருமணத்துக்காக வங்கியில் கஷ்டப்பட்டு பத்து லட்சம் ரூபாய் கடன்பெறுகிறார். கடன்பெற்ற ஓரிரு நாட்களில் அந்தப் பணம் முழுவதும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஹேக்கிங் மூலம் உருவி எடுக்கப்பட்டு விடுகின்றது. தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மீளப்பெறச்சென்று கணக்கில் பணமெதுவும் இல்லாதிருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், கோபமும் அடையும் விஷால் ஹேக்கிங் வலையமைப்பைக் கண்டுபிடிப்பதும் அதனை பூண்டோடு அழிப்பதும் தான் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த இரும்புத்திரை திரைப்படத்தின் கதை. படம் வந்த புதிதில் எங்கள் அலுவலகத்தில் அந்தப் படம் பற்றிய பேச்சாகவே இருந்தது. எங்கள் இரகசிய தகவல்கள் எவ்வாறு திருட்டுக் கும்பல்களின் கைகளில் சிக்குகின்றன? பொது இடங்களில் வைபை, பயன்படுத்துவது, பொது இடங்களில் உள்ள கணனிகளில் எங்கள் இரகசியக் கடவுச்சொல்லை பதிவது அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியெல்லாம் பேசிகொண்டோம். பின்னர் சிலகாலங்களில் எல்லாவற்றையும் மறந்து எங்காவது இலவச வைபை இணைப்பு கிடைத்தால் எங்கள் மின்னஞ்சல், பேஸ்புக் என்பனவற்றை இற்றைப்படுத்துவது என்று ஆரம்பித்து விட்டோம்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அலுவலகத்தில் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தோம். இம்முறை எங்கள் விவாதம் எங்களுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவர் பற்றியதாக இருந்தது. கடந்த வார இறுதி நாட்கள், அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் என்று குடும்பத்துடன் விடுமுறையை அனுபவித்து விட்டு புதன்கிழமையன்று அதிகாலை வேலைக்குச் செல்லும் வழியில் வெள்ளவத்தையிலுள்ள தனது வங்கியின் ஏரீஎம்மில் குறிப்பிட்ட தொகைப் பணத்தை மீளப்பெற முயன்றிருக்கின்றார் அவர். அப்போதுதான் தனது கணக்கில் 130,000 ரூபாய் குறைந்திருப்பதை அவதானித்திருக்கின்றார். உடனேயே கையடக்கத் தொலைபேசியில் குறித்த வங்கியின் குறுஞ் செய்திகளை சரிபார்த்த போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே 50,000 மற்றும் 80,000 ரூபாய்கள் அவரது கணக்கில் இருந்து, வெவ்வேறு ஏரீஎம்களினூடாக மீளப்பெறப்பட்டுள்ளதை அக்குறுஞ்செய்திகள் உறுதி செய்தன. உடனடியாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டபோது பாரிய ஏரீஎம் திருட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வங்கிகளிலும் இடம்பெறுவதாகவும், கிளைமுகாமையாளருடன் பேசுமாறும் பணம் மீளத் தரப்படும் என்றும் உறுதிமொழி அந்த நண்பருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த நண்பர் தனக்கு வந்த குறுஞ் செய்தியை ஏன் சரிபார்க்கவில்லை என்பதில் இருந்து இனிமேல் அட்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வங்கிக் கணக்குப் புத்தகம் மூலம் மாத்திரமே பணத்தை மீளப்பெறுவது என்பதுவரை விவாதித்தாயிற்று.

ஏரீஎம் பணத் திருட்டு இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே இது பற்றி அறிந்து தான் இருக்கின்றோம். ஆனால் அத்திருட்டுச் சம்பவங்கள் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக இடம்பெற்றவை. ஆனால் இம்முறை இலங்கையின் அனேக அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஏக காலத்தில் இந்த ஏரீஎம் திருட்டுக்கள் இடம்பெற்றிருப்பது வங்கிகளின் தானியங்கிச் செயற்பாடுகளின் மீதான அனேகரின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்டிருக்கின்றது.

ஏரீஎம் இயந்திரங்களில் வெளிப்புறமாகப் பொருத்தப்படும் கருவிகளின் மூலம், வங்கி அட்டைகளில் உள்ள தரவுகள் பெறப்பட்டு அவற்றின் மூலமே திருட்டுகள் இடம்பெறுவது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஏரீஎம் இயந்திரங்களில் நாம் வங்கி அட்டைகளை உட்புகுத்தும் போது அட்டைகளில் உள்ள காந்தப்பட்டியின் மூலம் எமது அட்டைகளில் உள்ள தரவுகளை, அவற்றில் திருட்டுத்தனமாகப் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் பிரதி பண்ணுகின்றன. அதேநேரம் ஏரீஎம் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராவினுள்ளோ அல்லது வேறு பகுதிகளிலோ ஒளித்து வைக்கப்பட்டுள்ள நுண்ணிய கெமராக்கள் மூலமோ அல்லது விசைப்பலகையின் மீது பொருத்தப்பட்டுள்ள போலி விசைப்பலகையின் மூலமோ எங்களது இரகசியக் குறியீடு திருடப்படுகின்றது.

வங்கியட்டையை உட்செலுத்தும் பகுதியில் பொருத்தப்படும் போலியான கருவி

வங்கியட்டையை உட்செலுத்தும் பகுதியில் பொருத்தப்படும் போலியான கருவி

இலங்கையை உலுக்கிய இந்த ஏரீஎம் திருட்டில் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்கின்றனர் குற்றப்புலனாய்வுத் துறையினர். காலிவீதியில் வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டிப் பகுதிகளில் உள்ள சில வங்கிகளின் ஏரீஎம் இயந்திரங்களில் வங்கி அட்டைத் தரவுகளைத் திருடும் உபகரணங்களை வெளிநாட்டவர்கள் பொருத்துவது அங்கு வைக்கப்பட்டுள்ள CCTV கெமராக்களில் பதிவாகியுள்ளன. அப்பதிவுகளைப் பார்வையிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெள்ளவத்தையில் அவ்வாறு வங்கியொன்றின் ஏரீஎம்மில் இருந்து தாம் பொருத்திய கருவியைக் கழற்றிய சீனர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இம்மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏரீஎம் திருட்டுக்களில் வெளிநாட்டு குழுக்கள் எவையும் சம்பந்தப்பட்டுள்ளனவா என்ற ரீதியிலேயே விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை இலங்கையின் எந்தவொரு வங்கியும் தங்களது ஏரீஎம்களில் திருட்டு நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இலங்கை கொடுப்பனவு அட்டைத் தொழில் சங்கம் மற்றும் இலங்கையின் வங்கிகள் சங்கம் (உத்தரவாத) லிமிட்டட் என்பன அனைத்து வங்கிகளினதும் ஏரீஎம் சேவைகளில் இடம்பெற்ற மோசடியான பண மீளப்பெறுகைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும், ஏரீஎம் மூலமான பண மீளப்பெறுகைகள் பாதுகாப்பானவையாக உள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த வியாழனன்று உத்தரவாதமளித்தன.

வங்கி அட்டைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் மத்திய வங்கியின் துணை நிறுவனமான Lank Clear (Pvt) Ltd, நீங்கள் பண மீளப்பெறுகைக்காக ஏரீஎம் இயந்திரங்களை நாடுகையில் அவற்றில் சந்தேகத்துக்கிடமான மாற்றங்கள் தென்பட்டால் தாமதிக்காமல் அங்கு கடமையில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் முறையிடுமாறு கூறுகின்றது.

தரவுகளை பிரதி பண்ணுவதற்காக வங்கி அட்டையைச் செலுத்தும் பகுதியில் போலிக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பின் அவை நாம் இலகுவில் கழற்றக் கூடியவையாகவே காணப்படும். அவ்வாறு இலகுவில் அசைக்கக் கூடியதாக அட்டை செலுத்தும் பகுதி காணப்பட்டாலோ அல்லது, போலி விசைப்பலகையொன்று பொருத்தப்பட்டிருந்தாலோ, ஏரீஎம்மின் ஏதாவதொரு பகுதி வெடித்தோ உடைந்தோ காணப்பட்டாலோ அல்லது செலோரேப் ஒட்டப்பட்டுக் காணப்பட்டாலோ நிச்சயம் அந்த ஏரீஎம் இயந்திரம் குறித்து நீங்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல, இரகசியக் குறியீடு அங்கு ஏதோவோரிடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் நுண்ணிய கெமராவினாலேயே பதிவுசெய்யப்படுவதால் இரகசியக் குறியீட்டைப் பதியும்போது ஒரு கையினால் மறைத்த வண்ணமே பதியவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

அதுமாத்தரமல்ல, வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்துபோகும் ஏரீஎம் நிலையங்கள், நீண்ட கியூ வரிசை காணப்படும் ஏரீஎம் நிலையங்கள் என்பனவற்றையும் தவிர்ப்பது நல்லது.

தற்போது சில வங்கிகளில் காந்தப் பட்டியைக்கொண்ட அட்டைகளே புழக்கத்தில் உள்ளன. அவ்வட்டைகளில் உள்ள தரவுகள் இலகுவில் பிரதிபண்ணக்கூடியவை ஆதலால் EMV அட்டைகள் அல்லது சிப் அட்டைகளைப் பயன்படுத்துமாறான அறிவுறுத்தல் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு 2016 ஆண்டிலேயே விடுக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். காந்தப் பட்டிகொண்ட அட்டைகளை வைத்திருப்போரின் ஏரீஎம் தரவுகளே பிரதிபண்ணப்பட்டு போலி அட்டைகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

ஆனால் தங்களது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் உடனடியாக புதிய சிப் அட்டைகளை வழங்குவதென்பது சாத்தியமற்ற​ெதனக் கூறுகின்றார் இலங்கை வங்கியின் விற்பனை மற்றும் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் நாயகம் சீ. அமரசிங்க. ஆனாலும் நாடெங்கிலும் உள்ள தங்களது 1050 ஏரீஎம் நிலையங்களும் தினமும் வங்கி அதிகாரிகளால் நன்றாகப் பரிசோதிக்கப்படுகின்றன என்றும் மீளப் பெறுகைத் தொகையும் தற்போது மேலும் மட்டுப்படுத்தப்பட்டிருகின்றது என்றும் அதனால் மோசடிகள் புறக்கணிக்கத்தக்க அளவில் இடம்பெறுவதற்கான சாத்தியங்களே இருப்பதாகவும் அவர் சொல்கின்றார்.

சமீபத்தைய ஏரீஎம் மோசடிகளை அடுத்து அனைத்து வங்கிகளும் தங்கள் ஏரீஎம்கள் மூலமாக மீளப் பெறும் பணத்தின் தொகையை மட்டுப்படுத்தியிருக்கின்றன.

சிப் அட்டைகள் பாதுகாப்பானவையாகக் கருதப்பட்டாலும், உலகளாவிய ரீதியல் இடம் பெற்ற ஏரீஎம் மோசடிகளில் சிப் அட்டைகளின் தரவுகளும் திருடப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற வங்கிப் பணத் திருட்டுக்களில் 'ஸ்கிம்மிங்' எனப்படும் இலங்கையில் அண்மையில் இடம்பெற்றவை போன்ற ஏரீஎம் அட்டை மூலமான மோசடியான பண மீளப் பெறுதல்கள் முதலிடம் வகிக்கின்றன.

இந்த மோசடியின் இற்றைப்படுத்தலாக பல மேலைத்தேய நாடுகளில் தற்போது இடம்பெற்று வரும் ஏரீஎம்கள் மூலமான பண மீளப் பெறல் மோசடிகள் 'ஷிம்மிங்' எனப்படுகின்றன. ஏரீஎம்களின் வெளிப்புறத்தில் அல்லாமல் உட்புறத்தில் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் அட்டையின் எண்ணைப் பதிவு செய்வதற்குப் பதிலாக சிப்களில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இக்கருவிகள் பதிவு செய்கின்றன. திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு புதிய போலி அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஏரீஎம் இயந்திரங்களை உபயோகித்து மேற்கொள்ளப்படும் மற்றொரு திருட்டு 'ஜாக்பொட்டிங்' எனப்படுகின்றது. இம் மோசடிகளில் ஏரீஎம்களின் மென்பொருளோ அன்றி வன்பொருளோ மோசடிக்காரர்களால் மாற்றப்படுகின்றது. இவ்வாறான மோசடிகளில் வங்கி அட்டையின் எண்ணோ இரகசியக் குறியீடோ அன்றி தரவுகளோ மோசடிக்காரர்களுக்குத் தேவைப்படுவதில்லை.

போலியான பற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமான மோசடியான பண மீளப் பெறுதல்கள், ஏரீஎம் நிலையங்களில் மாத்திரமே இடம்பெறுவதில்லை. பல்பொருள் அங்காடிகள், அட்டைகள் மூலமாக பணம் செலுத்தக்கூடிய கடைகள் என எல்லாவற்றிலுமே இடம்பெறலாம். குறிப்பாக உணவகமொன்றில் நாங்கள் உணவு உண்ணச் செல்லும்போது நாங்கள் பெற்றுக்கொண்ட உணவு மற்றும் சேவைக்கான விலைப்பட்டியலை கொண்டுவரும் உணவகப் பணியாளரிடம் பணத்துக்குப் பதிலாக அட்டைகளையே கொடுத்தனுப்புகின்றோம். அவ்வட்டைகள் மீண்டும் எங்கள் கைகளுக்கு வந்துசேரும் வரை அவற்றுக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி நாங்கள் அக்கறை கொள்வதில்லை.

அவ்வாறுதான் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வரிசெலுத்துவதற்காக அமைக்கப்படுள்ள நிலையங்களும் மோசடி நிகழ்வதற்கான ஆபத்துக் கொண்டவைதான். தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஏரீஎம் மோசடி, இவ்வாறான அதிவேக நெடுஞ்சாலை வரிசெலுத்துமிடத்தில் நிகழ்ந்ததுதானாம்.

தொழில்நுட்பம் மேம்பாடடைய, பண மோசடிகளில் ஈடுபடுவோரும் அதற்கேற்பவே தம்மை இற்றைப்படுத்திக் கொள்வர்.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்க வேண்டுமானால் அட்டைகளை செயலிழக்கச் செய்துவிட்டு மீண்டும் வங்கிச் சேமிப்புப் புத்தகங்களின் மூலமான மீளப்பெறுதல்களே தீர்வாக அமைய முடியுமா?

இல்லை அவ்வாறுதான் பணத்தை மீளப் பெற வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் மீளப்பெற வேண்டுமானாலும் கூட ஒவ்வொருவரும் நாள் முழுவதையும் வங்கியிலேயே கழிக்க நேரிடும்.

கடதாசியற்ற பணப்பரிமாற்றத்தை நோக்கிய பயணத்தில் அது சாத்தியமாகுமா?

அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?

ஒன்று, வங்கி அட்டைகள் மூலம் பணத்தை மீளப்பெறும் முன்னர் ஏரீஎம் நிலையங்களில் மாற்றங்கள் ஏதுமுள்ளனவா என்பதை சரிபார்ப்பது. இரண்டாவது சந்தேகத்துக்கிடமான எவரது நடமாட்டமேனும் தென்பட்டால் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் முறையிடுவது. மூன்றாவது உங்கள் பண மீளப்பெறுகைகள் தொடர்பில் அறிவிக்கும் வங்கியின் குறுஞ்செய்திச் சேவையை (SMS) பெற்றுக்கொள்வது. மோசடி இடம்பெற்ற சில காலத்துக்கு வேண்டுமானால் எல்லோரும் தாங்கள் பணம் மீளப்பெறும் ஏரீஎம் நிலையங்களை நன்கு பரிசோதித்தபின் பணத்தை மீளப்பெறக் கூடும்.

ஆனால் நெருக்கடி மிக்க வாழ்வில் நாளடைவில் அவையெல்லாம் மறந்துபோக மோசடிக்காரர்களுக்கே வாய்ப்பாக அமையும்.

அனேக ஏரீஎம் மோசடிகள் வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் விடுமுறையில் செல்லும் நீண்ட விடுமுறை நாட்களிலேயே இடம்பெறுகின்றன. இம்முறையும் இவ்வாறுதான் இடம்பெற்றுள்ளன.

இப்போது தேவைப்படுவதெல்லாம் மனோபாவத்தில் மாற்றமே. வங்கிகள் அனுப்பும் அலேர்ட் குறுஞ் செய்திச் சேவைகளை பெற்றுக் கொண்டு, விடுமுறை நாட்களானாலும், அவற்றைப் பார்க்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதே இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்கான உபாயமாக அமைய முடியும்.

Comments