மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உதயம் | தினகரன் வாரமஞ்சரி

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உதயம்

போல் வில்சன்

மலையக பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நேற்று முன்தினம் (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  

 இதற்கான வைபவம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிதி ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் அதிகார சபைக்கான ஐவர் கொண்ட பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டது. 

தலைவராக சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர்களாக எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பாலச்சந்திரன் கௌதமன், ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.  

இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் உரையாற்றுகையில், மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை மலையக மக்களின் வரலாற்றில் புதிய சகாப்தமாகும். மலைநாட்டு மக்களின் சகல தேவைகளையும் இவ்வதிகார சபையினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் மக்களின் தேவைகளை இந்த அதிகார சபையினூடாக நிறைவேற்ற முடியுமென்றும் நம்பிக்ைக தெரிவித்தார்.  

இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உச்சக் கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இதே காலப்பகுதியில் எங்களது அமைச்சுப் பதவிகளை பணயம் வைத்தே நாம் அரசாங்கத்துடன் பேரம் பேசுதலில் ஈடுபட்டு வருகின்றோம். மலையகப் பெருந்தோட்ட சமூகம் சமூக ரீதியாக எந்தளவு பின்னிலையில் வைக்கப்பட்டுள்ளார்களோ அதேபோல பொருளாதார ரீதியாகவும் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே நாட்சம்பள கூலிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த சமூக, பொருளாதார நிலைமைகள் இரண்டுமே தனியார் துறை வசம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போதுதான் சமூக அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல்வதற்கான அரசாங்க ‘அதிகார சபை’ ஒன்றை தாபிப்பதற்கும் அதற்கு மலையக சமூகத்தின் கல்வியாளர்கள் குழுவொன்றை பணிப்பாளர் சபையில் உள்ளடக்குவதற்கும் வரலாற்றில் முதல் தடவையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வகையில் ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் எதிர்காலத்தை மலையக கல்வியாளர் சமூகத்தின் கைகளில் ஒப்படைக்கும் நிகழ்வாகவும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வை நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.  

தனித்தனி தொழிற்சங்க அரசியல் அமைப்புகளாக செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக ‘தமிழ் முற்போக்கு கூட்டணியாக’ ஒன்றிணைந்த அரசியல் இயக்கம் ஆனோம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதி ஆக்குவதற்கும் அதேபோல அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கும் எமது பங்களிப்பை வழங்கினோம். நாம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக போட்டியிட்ட போதும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக தனியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தோம். அதில் 23 அம்சங்களை உள்ளடக்கினோம். 

அத்தகைய 23 விடயங்களில் பிரதானமான ஒன்றாக அமைந்தது. பெருந்தோட்டப் பகுதிகளில் அரச நிர்வாக பொறிமுறையைக் கொண்டு வருவதற்கான, பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறக்கூடிய அதிகார சபை ஒன்றைத் தோற்றுவிப்பதாகும். அந்த முயற்சியே இன்று கைகூடியிருக்கின்றது.  

தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சையும் ஒரு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சையும் கொண்டதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியாக ஓரணியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு பல்வேறு விடயங்களையும் ஒவ்வொன்றாக கையில் எடுத்து நாம் உரிய முறையில் அவற்றை வென்று எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.  

2018 செப்டெம்பர் மாதம் 19 ம் திகதி சட்டம் நினைவேற்றப்பட்டபோதும் அதனையடுத்த மாதங்களில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழல் காரணமாக எமக்கு அதிகார சபையை நிறுவிக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் மீண்டும் நிலையான அரசாங்கம் அமையப் பெற்றதும் இப்போது அதிகார சபைக்கான பணிப்பாளர் சபையை நிறுவி இன்று அங்குரார்ப்பண நிகழ்வினை இன்று நடாத்துகின்றோம்.         

இதுநாள்வரை இந்த அதிகார சபை உருவாக்கத்திற்கு தமது பூரண பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  

இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர   உரையாற்றுகையில்,  

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டதை குறித்து, மகிழ்ச்சியடைகிறேன். அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவையிலும் தோட்ட மக்களின் பிரச்சினை குறித்து எப்போதும் எடுத்துரைப்பவர். இந்த அதிகார சபையினூடாக தோட்ட மக்களின் தேவைகள் சந்திக்கப்படுவதுடன், அவர்களின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பலாம். விசேடமாக தோட்டத் தொழிலாளர்கள் மாடு வளர்ப்பு, மரக்கறி செய்கை, பழச்செய்கை, பூவளர்ப்பு விவசாய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமுகமாகவும் தேசிய பொருளாதாரத்தின் பங்குடமையாளர்களாக்கும் பொருட்டு நிதியமைச்சு ஸ்ரீலங்கா என்டபிரைஸ்வூடாக கடன் முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனூடாக வட்டியற்ற கடனைப்பெற்று தோட்டத்திலுள்ள இளைஞர்கள் பயனடைய வேண்டும். தொழில் முயற்சியாளர்களுக்கு கைகொடுக்கும்படி இலங்கை வங்கி, மக்கள் வங்கியை கோரியுள்ளேன்.

இங்கு வட்டியில்லை என்பதன் பொருள் அரசாங்கமே உங்களுக்காக வட்டியினை செலுத்துகிறது. இக்கடன் திட்டத்தை தோட்டங்களிலும் முன்னெடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இத்திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்காக நடமாடும் சேவையொன்றினை தோட்டங்களில் அறிமுகப்படுத்தவுள்ளேன். விசேடமாக இளைஞர்கள் வியாபாரிகளாக மாற வேண்டும் என்ற எமது கனவை நனவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  

 இந்நிகழ்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர்களாக வீ. இராதாகிருஸ்ணன், எச். எம். எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜா, அரவிந்தக் குமார், சுஜித் பெரேரா, அமைச்சின் செயலாளர் காலாநிதி பொ. சுரேஸ், அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments