இதயங்கள் அழுகின்றன...! | தினகரன் வாரமஞ்சரி

இதயங்கள் அழுகின்றன...!

“தாத்தா... தாத்தா...” பரக்கபரக்க ஓடிவந்தாள் பெரோஸா. பமீலா பார்த்துக் கொண்டிருந்த நாவலை அப்படியே மூடிவிட்டு நிமிர்ந்தாள். அவளின் நெஞ்சு ‘படக்படக்’ என்று அடித்துக் கொண்டது.

“என்ன பெரோஸா... அவர் ஏதாவது சொன்னாரா...?” சுற்றும் முற்றும் முட்டை விழிகளை உருட்டிக் கொண்டே கேட்டாள் பமீலா,

“போங்க தாத்தா அவரு சுத்த மோசம்! இன்றைக்கு எனக்கு டொபியே தரல்ல...” என்று சிணுங்கிக் கொண்டே கையிலிருந்த நாவலைக் கொடுத்தாள். பமீலா பதைபதைக்க நாவலின் பக்கங்களைப் புரட்டினாள். உள்ளே அவள் எதிர்பார்த்த அந்த மடல் குறும்போடு சிரித்தது.

தங்கையை சமாளித்து அனுப்பிவிட்டு மடலைப் பிரித்தாள்.

‘என் ப்ரியமே.... தங்கையின் கையில் அனுப்பிய தங்கமடல் கண்டேன். உன் உள்ளத்தையே கொட்டி இருந்தாய். சாதாரண பத்திரிகை ஆசிரியன் என்னை நம்பி உன் இதயத்தையே தந்துவிட்டாயே! என்னிடம் வெறும் கவிதைகளையும், கதையையும் தவிர உனக்குத் தர ஒன்றுமே இல்லை.... மாடமாளிகையில் வாழும் மாடப்புறா நீ... உன்னை எட்டவே முடியாத சிறு புழு நான்...”

மடல் சுவைததும்ப நீண்டுகொண்டே போனது பமீலா தன்னையே மறந்து விட்டாள். அவளது கற்பனைகள் எங்கெங்கோ தாவிப் பறந்து கண்ணாமூச்சு விளையாடின. கண்ணை மூடினாள். கற்பனையில் மிதந்தாள்.

பர்ஹத்தும் பமீலாவும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் பர்ஹத்தின் தகப்பனார் சிறுவயதிலேயே கண்ணை மூடிவிட்டதால் ஏழ்மையில் வாடியது அக்குடும்பம். பர்ஹத்தையும், அவனது தங்கையையும் வளர்க்க மிகவும் பாடுபட்டாள் அவனின் தாய் பாத்துமா!

ஏழ்மை என்றாலேயே எப்போதும் எட்டவே நிற்கும் சுற்றமும், உறவும் அவளையும் எட்டவே நின்று பார்த்தது. பார்த்ததோடு மட்டும் சரி. கிட்ட நெருங்கத் தயங்கியது.

எப்படியோ தனது செல்வங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாள் பாத்துமா. படிப்போடு பர்ஹத் ஒரு கடையிலும் பகுதி நேரவேலை செய்தான்.

இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடுள்ள அவன் அப்படி இப்படி மிச்சப்படுத்தி ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்தான். முத்திங்கள் சிற்றேடனான அது இளம் வட்டங்களிடையே பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. படிப்பையும், கடையில் வேலையையும், பத்திரிகையையும் கட்டிப்பிடித்துக் கொண்டு இயந்திரமாக இயங்கினான் பர்ஹத்.

வகுப்பில் பமீலாவும், பர்ஹத்தும் இலக்கிய விவகாரங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். சில நேரங்களில் விவகாரங்கள் விவாதமாக மாறி சூடேறுவதுமுண்டு. பர்ஹத்தின் பத்திரிகைக்கு அடிக்கடி ஆக்கங்கள் எழுதினாள். பமீலா, அவளது அழகு, அறிவு எல்லாம் பர்ஹத்தை கவர, நாளடைவில் இருவரும் நெருங்கிய காதலர்களாக மாறினார்கள்.

பமீலா அந்த ஊர் இரும்புக்கடை முதலாளியின் மகள், பர்ஹக் மிகமிக சாதாரணமாகப் போனவன். என்றாலும் அந்த உள்ளங்கள் அதையெல்லாம் துச்சமாக மதித்து நெருங்கிப் பழகின. காதல் கீதமிசைத்தன. அவர்களின் காதல் தூதுக்கு உதவி புரிந்தாள் பமீலாவின் சின்னத் தங்கை பெரோஸா.

***

சிந்தனையிலிருந்து விடுபட்ட பமீலா மெல்ல நிமிர்ந்தாள். யோசித்துக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மடலைப் பத்திரப்படுத்தி விட்டு குளிப்பதற்குத் தயாரானாள்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.

பமீலா மாடியில் ஏதோ பத்திரிகையில் மூழ்கியிருந்தாள்.

“டீயேய் பமீலா... வாடி இங்கே...” கீழே இருந்து அவளது வாப்பா... இப்றாஹீம் குரல் கர்ணகடூரமாக ஒலித்தது.

பமீலா வெலவெலத்து நின்று விட்டாள்.

‘யா அல்லாஹ் என்ன நடந்துட்டுதோ...?’ அவளது இதயம் நின்றுவிட்டது போன்ற நிலைமை.

‘எங்கவள் பமீலா... நான் கத்துறது கேட்கலையா செவிட்டுக் கழுத எறங்கி வாடி கீழ...” பமீலா நடுங்கிக் கொண்டே வந்தாள்.

“என்னடி இது... எவ்வளவு காலமாக இந்த நாடகம் நடக்குது...?”

பமீலா ஏறிட்டு நோக்கினாள். வாப்பாவின் கையில் ஒரு மடல். படபடத்தது. அவருக்கு அருகே தங்கை பெரோஸா கோழிக்குஞ்சு போல நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். கீழே ஒரு நாவல் அநாதையாய் விரிந்து கிடந்தது. அவளுக்கு எல்லாமே புரிந்து விட்டது.

“சொல்லுடி நான் கத்துறது கேட்கல்ல... இதுக்கு என்னடி அர்த்தம்.... யாரிவன்...?”

இப்றாஹீம் ஹாஜியாரின் வாயிலிருந்து கனல் துகள்களாய் வார்த்தைகள் வந்தன.

“ப....ர்...ஹ...த்...” சொற்கள் உடைந்து கொண்டே பமீலாவின் வாயிலிருந்து வெளியேறின.

“என்ன சொன்னே... பர்ஹத்தா... அந்த அப்ப சுட்டு விக்கிற பாத்துமாட மகன் பர்ஹத்தா...தூ... அந்தப் பிச்சைக் கார நாயையா போய் பிடிச்சே... உனக்கு வெட்கமாயில்ல... என்னோட முழு மானமும் போச்சேடி... இனி நான் எப்படி வெளியில இறங்கி நடப்பேன்.... நீயும் எனக்கு மகளாய் பிறந்தீயே மூதேவி...”

“இந்தாங்கோ நடந்தது நடந்திச்சி... இவளும் அறியாப் புள்ள... ஏதோ தெரியாத்தனமா நடந்திட்டா... இனி அதையே பெரிசுபடுத்தினா என்ன அர்த்தம்... நடக்கப் போறத பார்ப்போம்...”

இப்றாஹீம் ஹாஜியாரால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“நீயும் வந்துட்டியா பங்கு பேச... இனி நடக்கப் போறத நீயும் பார்க்கத்தான் போறே.... நான் வாரன்...”

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டே இப்றாஹீம் ஹாஜியார் வெளியேறினாள்.

பமீலா அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. தாயின் சமாதான முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தன. அழுது அழுது அவள் கண்கள் இரண்டும் வீங்கி இருந்தன.

இவ்வளவு நடந்தும் அவளால் பர்ஹத்தை மறக்கவே முடியவில்லை. பணத்தாலும், அந்தஸ்தாலும் தனது காதலைப் பிரிக்க முயலும் தந்தையை நினைக்கும் போதே அவளுக்கு நெஞ்சம் குமுறியது. பாவம் அவளால் என்ன செய்ய முடியும் உள்ளுக்குள்ளேயே வெந்து மாய்வதை விட அவளால் வேறு எதையுமே செய்ய முடியவில்லை.

வெளியே சென்ற இப்றாஹீம் ஹாஜியார் வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தார். அவரது முகமே பார்க்கப் பயங்கரமாக இருந்தது. ஆத்திரம் ஆயிரம் மடங்காய் பொங்கி வழிந்தது. நெற்றி நரம்பு புடைத்து துடித்தது. “பெளஸியா... பௌஸியா...” மனைவியை அழைத்துக் கொண்டே நுழைந்தாள்.

“என்னங்க...” அவசரமாக ஓடிவந்த மனைவியை ஆத்திரம் தீர நோக்கினாள்.

“என்னதா... அந்த நாயிடம் நேரே போய் விசாரித்தேன். என்ன மாதிரி பேசினான் தெரியுமா பௌஸியா... ஒருத்தன் இந்த ஊரில எனக்கு இதுவரை அப்படிக் கேட்டதேயில்லை... உங்க பொண்ண நான் விரும்பினேன்... அவளத்தான் முடிப்பேன்... என்று மிடுக்காகப் பேசினான்... என்னால கோபத்த அடக்க முடியல்ல... கன்னம் பிளக்க நாலு அறை அறஞ்சன்.... அப்படியே அசந்து போயிட்டான்... ஒரு நிமிடம் இந்த ஊரில் இருந்தே கொன்று போட்டுடுவன் என்று பயமுறுத்தி விட்டு வந்திட்டன. வெட்டிக் கடலில் போட்டாலும் அந்த பிச்சைக்கார ராஸ்கலுக்கு ஏன்ட மகளக் குடுக்கிறதா...?”

இப்றாஹீம் ஹாஜியார் பேசி முடித்தார். ஒரு புயல் அடித்து ஓய்ந்தத நிலைமை. பமீலா மனதிற்குள் அழுதாள். பர்ஹத் எவ்வளவு தைரியமாகப் பேசியுள்ளார். கேவலம்... அந்த தைரியத்தில் ஒரு துளி என்னிடம் இருந்தால்தானே? எதிர்த்து ஒரு வார்த்தை பேசினேனா..?

பமீலா கண்ணீருடனே சில நாட்களைக் கடத்தி விட்டாள். பர்ஹத்தையும் அவன் தாயையும் பற்றி செய்தியே இல்லை. பமீலா தனது தோழியரிடம் விசாரித்து விட்டாள். ஊரை விட்டே அவர்கள் போய்விட்டமை அறிந்து அப்படியே உடைந்துபோனாள்.

இதற்குள் இப்றாஹீம் ஹாஜியார் பமீலாவுக்கு ஒரு கல்யாணத்தைப் பேசி தீர்த்தும் விட்டார். ஊரே வியக்கும் விதத்தில் மிக ஆடம்பரமாக பமீலாவின் திருமணத்தை நடத்தினார்.

பைரூஸ் பமீலாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

நாட்கள் யாருக்காவும் காத்திருக்கவில்லை. அது ஓடிக் கொண்டிருந்தது. பமீலாவின் கணவன் பெரும் பணக்காரன்தான். என்றாலும் எல்லா கெட்ட செயல்களிலும் ஊறிப் போய் இருந்தான்.

பமீலாவைப் பற்றியே அவனுக்கு அக்கறையில்லை.

இரவில் கழுத்துமுட்டக் குடித்துக் கொண்டு வந்தான். பமீலாவை அடித்தான். உதைத் தான் பமீலா கர்ப்பிணி என்பதையும் பார்க்காமல் வாட்டி வதைத்தான்.

பர்ஹத்துக்கு தான் செய்த துரோகமே இப்படி பைரூஸின் வடிவில் வந்து தன்னைப் பழிவாங்குவதாக எண்ணினாள்.

மகளுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி இப்றாஹீம் ஹாஜியார் கவலைப்பட்டே நோயில் விழுந்தார். அவரது மனைவி துயரத்தில் தோய்ந்தாள்.

பிரசவ வேதனை ஏற்பட்டு பமீலாவை அந்த தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள். கர்ப்பிணியாக இருந்த போது அவளது கணவனின் அடி உதைகளினால் அவளது உடம்பு நிறையவே பாதிக்கப்பட்டிருந்தது.

அவளைப் பரிசோதிக்க விஷேடடாக்டர் ஒருவருக்கு டெலிபோன் பண்ணி இருந்தார்கள். குறிப்பிட்ட அந்த டொக்டர் பமீலாவை பரிசோதிக்க வந்திருந்தார். பமீலாவின் பெற்றோர் வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்க டொக்டர் பமீலாவை அட்மிட் செய்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

நோயாளியின் முகத்தை நோக்கியவர் அப்படியே அதிர்ந்து விட்டார்.

“பமீலா... நீயா...?”

டொக்டரின் வாய் ஆச்சரியத்தால் மிளிர்ந்தது.

அந்த வேதனைக்குள்ளும் பமீலாவின் கண்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தன.

“பர்ஹத் நீ... ங்.... க.... ளா...” அவளால் அவ்வளவு தான் பேச முடிந்தது. சோர்ந்து விட்டாள்.

“பேசாதீங்க பமீலா... உங்களுக்கு அது கூடாது... இருங்க நான் சோதிக்கிறேன்...”

பமீலாவை பரிசோதித்த பர்ஹத் பெரும் சிந்தனை வயப்பட்டான். அவளின் நிலைமை மிகக் கவலைக்கிடமாக இருந்தது. குழந்தை, அவளையும் காப்பாற்றுவதே அபூர்வம் என நினைத்தான்.

“பர்ஹத்... பர்ஹத்... இங்கு வாங்க....” மெல்லிய குரலில் பமீலா அழைக்கும் சத்தம் கேட்டு பர்ஹத் அவளருகே ஓடினார்.

“பர்ஹத் என்னைக் காப்பாற்ற நீங்கள் முயற்சி எடுக்காதீங்க... எனது நேரம் நெருங்கிட்டுது... நான் வாரன் கடைசி நேரத்திலாவது உங்க அன்பு முகத்தை பார்க்க கிடைத்ததே அது போதும்... அதுவே திருப்தி... நான் வாரன்...”

புன்னகைத்துக் கொண்டே தலையை அசைத்தாள் பமீலா. லாஇலாஹ இல்லல்லாஹ் என்றதும் அவளின் உயிரும் பிரிந்துவிட்டது.

“ஹோ” என்று அழுதான் பர்ஹத்.

அவனது அழுகைக் குரல் கேட்டு உள்ளே நுழைந்த அனைத்து இதயங்களும் இப்போது அழத் தொடங்கி விட்டன.

Comments