அரச மரத்து நிழல் | தினகரன் வாரமஞ்சரி

அரச மரத்து நிழல்

மண்ணிலிருந்து எழுந்து அந்த மண்ணிற்கே நிழல் கொடுப்பதே மரத்திற்கு அழகு. அப்படி நிழல் கொடுக்கும் ஆயிரமாயிரம் மரங்கள் மத்தியில் போதி மாதவனுக்கே நிழல் கொடுத்தமையே அரச மரத்தின் சிறப்பு.

சாதாரணமான ஒரு தாவரமாக இருந்தபோதிலும் அதனால் கிடைத்த பலனே அதனை உலகமே போற்றும் உன்னத நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கின்றது.

சாதாரண ஒரு தாவரம் தனது பணியால் உயர்ந்தது போலவே ஒரு சாதாரண மனிதனும் தான் தேர்ந்தெடுத்த அபூர்வமான பயணத்தினாலேயே ஒரு தலைவனாக உருவாகின்றான்.

ஒரு சாதாரண விவசாயியின் மகனாகப் பிறந்த மைத்திரி இன்று இந்த நாட்டின் தலைவன் என்ற அந்தஸ்தை அடைந்திருப்பதற்கான காரணமும் அவர் தேர்ந்தெடுத்த பாதையே என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனாலேயே இன்னுமொரு சாதாரண மனிதனின் துன்பத்தையும் துயரத்தையும் புரிந்து அதற்கு ஆறுதல் அளிக்க முடியும். அச்செயலானது மண்ணிலேயே முளைத்து அந்த மண்ணிற்கே நிழல் கொடுப்பதற்கு சமனாகும். அப்படியானதொரு நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமே இன்றைய இந்த கதைக்கு கருவாக அமைகின்றது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இருளோடு இணைந்து வந்த அரக்கன் கடமையில் இருந்த பொலிஸ் காவலன் கணேஷ் தினேஷ் எனும் இளைஞனின் உயிரைக் காவிச் சென்றான்.

இந்த செய்தி எட்டியது முதல் சொல்லொணா சோகத்தில் ஆழ்ந்திருந்த தினேஷின் தந்தையும் தாயும் உடன்பிறப்புகளும் நிம்மதிக்காக ஏங்கினர்.

அந்த துயரச் செய்தி கேட்டு அன்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், குடும்பத்தின் சுமையை சுமந்தவனை இழக்க நேர்ந்ததில் தமது குடும்பம் மிகுந்த இக்கட்டில் தள்ளப்பட்டிருப்பதை எடுத்துக் கூறி குறை தீர்க்குமாறு கேட்டார் தினேஷின் தந்தை கணேஷ். அதைக்கேட்டு மனமுருகிய மைத்திரி “நிச்சயம் நான் உங்கள் குறையை தீர்ப்பேன்” என்று உறுதி கூறினார்.

நாட்கள் மாதங்களாக மாறினாலும் கொடுத்த வாக்கு நிறைவேறவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார்கள் தினேஷின் குடும்பத்தினர்.

ஆனால் அவர்களுக்கு நிம்மதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உழைத்த ஜனாதிபதி ஊடகத் துறையின் தமிழ் பிரிவின் முயற்சிக்கு இன்று கைமேல் பலன் கிடைத்திருக்கின்றது.

பல தசாப்தங்களாக மகாவலியை தமது வதிவிடமாகக் கொண்டிருந்த போதிலும் இதுவரையும் அந்த நிலத்தின் உரிமை தமக்கு கிடைக்காததால் நிம்மதியை இழந்திருந்த 12,000 நில உரிமையாளர்களுக்கு அந்த நிலத்தின் உரிமையை பெற்றுக்கொடுக்க பொலன்னறுவை சென்ற ஜனாதிபதி, அந்த மக்கள் பெற்ற நிம்மதியை தினேஸ் குடும்பத்தினரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தினேஷின் உடன்பிறந்த சகோதரியான வனேஜாவுக்கு அரச தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொடுத்து தான் கொடுத்த அந்த வாக்கை நிறைவேற்றினார்.

அதிகாரம் படைத்தவர்கள் அயலவர்களின் துயர் அறிந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் நிச்சயம் அவர்களது குறையை தீர்க்கலாம் என்பதற்கு இந்த நிகழ்வு இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Comments