கைவிடப்பட்ட காணிகளை கூட்டுறவு பண்ணைகளாக மாற்றுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கைவிடப்பட்ட காணிகளை கூட்டுறவு பண்ணைகளாக மாற்றுங்கள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பாதைகளை புனரமைத்துக்கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்று மலையகத்தின் பிரச்சினைகளாக இருக்கின்றன என்ற சித்தாந்தம் உடைத்து எறியப்பட வேண்டும். நம் மலையக தலைவர்களும் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி வரவேண்டும்.

தேயிலை கொழுந்தும் இறப்பர் பாலும் மட்டும்தான் மலையக மக்களின் வாழ்வாதாரம் என்ற ஒரு அடைப்புக் குறிக்குள் இருந்து விடுபட வேண்டும். காலம்காலமாக பெருந்தோட்டத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் அந்த அப்பாவிகளுக்கு நியாயமான அடிப்படை சம்பளத்தைப் பெற வேண்டும் என்ற ஆவேசம் பிரளயமாக மாறி உள்ளது. பொறுப்பு மிக்க தலைவர்களின் கட்டாயக் கடமை அது. அதற்காக சம்பள உயர்வு போராட்டத்தை மட்டும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது.

தோட்டத் தொழிலாளர்கள் என்று பட்டை நாமம் சாத்தப்பட்டு தோட்ட எல்லைக்குள் முடக்கிவைக்கப்பட்ட எங்கள் பெற்றோரின் வாரிசுகள் மலையகத்தின் இரண்டாம் தலைமுறையாக உருவெடுத்துள்ளது. தான் கூலிவேலை செய்தாலும் என் பிள்ளை நகரத்தில் அடுக்குமாடி தொழில் செய்யவேண்டும் என்ற தூய பெரிய சிந்தனையுடன் வாழ்கின்றான். தான் பட்டினி கிடந்தாலும் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும். கம்மலை விற்றாலும் என் பிள்ளையை பட்டதாரியாக வேண்டும் என்ற வெறியுடன் தம்மை தேயிலை இறப்பர் செடிகளுக்கே உரமாக்கிக் கொண்டு வாழ்கின்றனர். இந்த தியாக செம்மல்களின் கனவுகள் வீண்போகவில்லை. இன்று மலையகத்தில் பட்டதாரிகள் இருக்கின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய டாக்டர்களும் சட்டத்தரணிகளும் இருக்கின்றனர். ஆசிரியர்களாக, அதிபர்களாக நிர்வாக இயக்குனர்களாக, பேனா முனையில் உலகையே திரும்பிப்பார்க்க வைக்கும் ஊடகவியலாளர்களாக, பெயர் சொல்லக்கூடிய வர்த்தகர்களாகவும் இன்னும் ஒருபடி மேலே நோக்கினால் மாறி மாறி வரும் அரசுகளில் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.

இரண்டும் கெட்டான் நிலையில் இளைஞர்கள்

இவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு கூட்டம் இருக்கின்றது. படித்த மக்கள் தொழில்களை தேடிக்கொண்டனர். படிக்காதவர்கள் பெற்றோருடன் தொழிலாளர்களாவிட்டனர். ஆனால் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மலையக இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை தொழில் புரிபவர்களின் தொகையை விட அதிகரித்துள்ளது.

ஓரளவு படித்துவிட்டோம் படித்தும் தொழில் கிடைக்கவில்லை என்றாலும் கூலி வேலைக்கும் போக முடியாது என்ற நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இவர்களைப்பற்றி யாரும் அக்கறை கொள்வது இல்லையே என்பதுதான் பெரிய வேதனை.

இடைநடுவில் சுயமாக அல்ல வறுமையின் காரணமாக படிப்பை கைவிட்ட கைவிட வைக்கப்பட்ட இந்த இரண்டாவது தலைமுறையின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. தொழிலும் இல்லை வருமானமும் இல்லை எப்படியோ வாழவேண்டுமே என்பதால் தவறான வழிகளை நாடுகின்றனர். தம்மையே வித்தும் ஆடம்பர வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் இதனைத் தடுத்து இவர்களைக் காப்பாற்றுவது எப்படி?

தொழிற்சங்கத் தலைமைகள்

பீதியடையவேண்டாம்

தோட்டங்களில் டிவிசன் வாரியாக தோட்ட வாரியாக பிரதேச வாரியாக நம் மலையக இளைஞர் யுவதிகளை ஒரு குடையின் கீழ் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்க ------- இன்று அயல் கிராமங்களில் காணப்படுகின்றன. ஆனால் தம் மலையகத் தலைவர்கள் இப்படியான அமைப்புகளை உருவாக்க விரும்புவது இல்லை. இப்படியான ஒரு இயக்கம் உருவாகிவிட்டால் தமது தொழிற்சங்கங்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இவர்களை தடுத்து வைத்துள்ளதோ தெரியவில்லை.

தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற நிலையில் தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற உங்கள் தொழிற்சங்கங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதேவேளை அரசியல் தலைவர்கள் என்றவகையில் இந்த தொழிற்சங்க இரும்புவேலிகளை உடைத்து இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளை கூட்டுறவு முறையில் ஒன்றுபடுத்துங்கள். அவர்களுக்கு சுயதொழில்களை ஏற்படுத்திக்கொடுக்க முன்வாருங்கள்.

கூட்டு முயற்சியையும்

கூட்டுறவையும் ஏற்படுத்துங்கள்

இனியும் மூடி மறைக்க முடியாது

22 தோட்டக் கம்பனிகளும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டன தேயிலை விலையில் சரிவு ஏற்பட்டுவிட்டது. தோட்டங்களை நடத்த வேண்டுமே என்ற நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தோட்டங்களை நடத்தி வருகின்றோம்.

 

மூன்றரை இலட்சமாக இருந்த தொழிலாளர் ஆள் பலம் ஒன்றரை இலட்சமாகிவிட்டது. 4345 ஆயிரம் ஏக்கர் காணிகள் கைவிடப்பட்டு தரிசுகளாக மாறிவிட்டன என்று வெளிப்படையாக அறிக்கைமேல் அறிக்கையாக விட்டனர்.

இந்த தோட்டங்கள் என்ன கம்பனிகாரர்களின் பாட்டன் வீட்டு பரம்பரை சொத்தா. இது அரசாங்க சொத்து. ஒவ்வொரு அங்குலமும் அரசுக்கே சொந்தம் தோட்டங்களை அபிவிருத்தி செய்யத்தான் உங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டது. தோட்டத்திற்கும் தோட்ட மக்களுக்கும் என்ன நன்மை செய்துள்ளீர்கள். தோட்டங்களில் இருந்த இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி விட்டீர்கள். பல ஆயிரம் பேருக்கு தொழிலையும் பல கோடி பெறுமதியான தேயிலையை உற்பத்தி செய்து தேசிய வருமானத்தை பெருக்கிய பல நூறு தேயிலை தொழிற்சாலைகளை மூடிவிட்டீர்கள். மூடிய தொழிற்சாலைகளில் இருந்த பாரிய இயந்திரங்களையும் கோடி பெறுமானமிக்க இடிதாங்கிகளையும் அபேஸ் செய்துவிட்டீர்கள். தொழிற்சாலையில் காணப்பட்ட இரும்பையும் தகரத்தையும் கூட விட்டு வைக்கவில்லை. அத்தனையும் விற்று காசாக்கிவிட்டீர்கள். இப்போது இந்த உண்மைகளை எல்லாம் மூடி மறைத்து நட்டம் நட்டம் என்று ஒப்பாரி வைக்கின்றனர் கம்பனிக்காரர்கள்.

தோட்டங்களில் நட்டம் தொடர்ந்தும் நடத்த முடியாது என்றால் ஏன் தொடர்ந்தும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றீர்கள். அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள். யானை, புலி, கரடிகள், பாம்புகள் வாழ்ந்த காட்டையே செல்வம் கொழிக்கும் சிங்கார சோலைகளாக மாற்றி தேயிலை தோட்டங்களை உருவாக்கியவர்கள் எங்கள் பரம்பரை. நீங்கள் காடாகவும் தரிசாகவும் மாற்றி உள்ள தோட்டங்களை மீண்டும் சீரமைப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனால் நீங்கள் விடமாட்டீர்கள். கோடி கோடியாக இலாபமீட்டி சுகபோகம் அனுபவித்த உங்களுக்கு கூழ்குடிக்கவும் ஆசை அது மீசையில் ஒட்டிவிடுமே என்றும் அச்சம் இதுதான் உண்மை நிலை.

இரண்டும் கெட்டான் நிலையில் தொழில் வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படும் இளைஞர் யுவதிகளை ஒன்று திரட்டுங்கள். மலையகத்தில் சுயதொழில் செய்யக்கூடிய இயற்கை வளங்கள் நிறைய உண்டு. உழைக்கக்கூடிய ஆர்வம் எம் இளைஞர்களுக்கு உண்டு. வளங்கள் இருந்தும் அதனை பயன்படுத்த முடியவில்லை. சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த இடமில்லை காணி இல்லை என்ற என்ற பிரச்சினையே இல்லை. காணிகளை தேடி ஓடவேண்டிய அவசியமே இல்லை. இந்த கம்பனிக்காரர்களின் கூற்றின்படி 40 முதல் 45 ஆயிரம் ஹெக்டேயர் வரையிலான தோட்டக்காணிகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. எவருக்கும் பிரயோசனம் இல்லாமல் கைவிடப்பட்டுள்ள இந்த காணிகளை நம் எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக மாற்ற முடியும் தானே? அதைப்பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள் அது உங்கள் கடமை.

Comments